மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
26-02-2023 அன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நம்மவர், தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரித்து நம்மவர், தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் மேற்கொண்ட பரப்புரை வரலாறு காணாத வெற்றியை அடைந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைவரின் உரையைக் கேட்க திரண்டனர். பல்வேறு பணிகளுக்கு இடையேயும் இந்தப் பரப்புரைக்காக நேரம் ஒதுக்கியமைக்கும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களப்பணி ஆற்றும் நல்வாய்ப்பினை கட்சியின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் அளித்தமைக்காகவும் தலைவர் அவர்களுக்கு நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்படுகிறது.
2. நம்மவர், தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் மேற்கொண்ட பரப்புரை வெற்றிகரமாக நிகழ பங்களிப்பாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சியினர், அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சியின் நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், நற்பணி இயக்க நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகளும், பாராட்டுதல்களும் தெரிவிக்கப்படுகிறது.
3. 2018-ல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தவர் திரு. ஆ. அருணாச்சலம். மீண்டும் நமது கட்சியில் இணைந்த திரு. ஆ. அருணாச்சலம், ‘பாரத் ஜோடா யாத்ரா’, ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம்’ ஆகிய முன்னெடுப்புகளில் நமது கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்து, தோழமைக் கட்சிகளுடன் ஒத்திசைந்து சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தினார்.
தகுந்த நேரத்தில் தாய் வீட்டிற்குத் திரும்பிய செயல்வீரர் திரு. ஆ.அருணாச்சலத்தை நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய இந்த சபை மனதாரப் பாராட்டுகிறது. நம்மவர், தலைவர் திரு. கமல்ஹாசன் தற்போது கூடுதல் பொறுப்பாக வகித்து வரும் பொதுச் செயலாளர் பொறுப்பிற்குத் திரு. ஆ. அருணாச்சலம் M.A., B.L., அவர்கள் நமது தலைவரின் வழிகாட்டுதலின் படி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்படுகிறது.
இதன் படி கட்சியின் அனைத்து கட்டமைப்புப் பொறுப்புகளுக்கும் பொறுப்பேற்கும் திரு. ஆ. அருணாச்சலம், தலைவரின் நேரடி ஆணைகளுக்கேற்ப பணிகளை நிறைவேற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
4. மக்கள் நீதி மய்யத்திற்கு மகளிரணியை வலுப்படுத்தும் வகையில் மகளிரணியுடன், மய்யம் மாதர் படை இணைக்கப்படுகிறது. மார்ச் 8-ஆம் தேதி சர்வதேசப் பெண்கள் தினத்தை மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணி சிறப்பான முறையில் கொண்டாட முடிவெடுக்கப்படுகிறது.
5. கலை, இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும், வேறு சில பொதுநலச் சேவைகளை மேற்கொள்ளவும் நம்மவர், தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் ‘கமல் பண்பாட்டு மய்யம்’ எனும் இலாப நோக்கமற்ற, அரசியல் நோக்கமற்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். தலைவரின் முன்னெடுப்பை நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
6. 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் மாநிலம் முழுவதிலும் பூத் கமிட்டிகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். தலைவர் அவர்கள் விரைவில் மேற்கொள்ளவிருக்கும் கட்சி மறுசீரமைப்புப் பொறுப்புகள் இந்த செயல்திறனில் அடிப்படையில்தான் இருக்கும் என தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
7. நமது கொள்கைகளையும், திட்டங்களையும் கடைக்கோடி தமிழருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மீடியா & ஐடி அணி கீழ்க்காணும் வகையில் நான்காகப் பிரிக்கப்படுகிறது.
I. இணையதளம் & தரவுகள் அணி (Official website and Data wing) – திரு. செந்தில் ஆறுமுகம் (மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம் எனும் பொறுப்புடன், இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது)
II. ஊடக அணி (Media wing) – திரு. முரளி அப்பாஸ், மாநிலச் செயலாளர்
III. சமூகவலைதள அணி (Socialmedia wing) – திரு. கிருபாகரன், மாநிலச் செயலாளர்
IV. ஆய்வு மற்றும் கொள்கை உருவாக்கம் அணி (Research and Policy wing) – திரு. எஸ்.பி.அர்ஜூனர், மாநிலச் செயலாளர்
மேற்காணும் நான்கு புதிய அணிகளும் திரு. ஆ. அருணாச்சலம் தலைமையில் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
8. பிற சார்பணிகள் துணைத் தலைவர் திரு. ஏ.ஜி. மெளரியா அவர்களின் தலைமைத்துவத்திலும், கட்சி வளர்ச்சிப் பணிகள் அமலாக்கம் துணைத்தலைவர் திரு. தங்கவேலு அவர்களின் தலைமைத்துவத்திலும் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
9. நம்மவர், தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களால் புதிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பணி சிறக்க மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.