‘மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்’ : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைத்தந்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் அட்டை – வாக்காளர் அட்டை – நில அளவை – வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் வழங்குவது போன்ற மக்களுக்கான சேவைகள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருகின்ற பொதுமக்களை கனிவோடு நடத்தி, அவர்களுக்கான சேவைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
பின்னர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ”மக்களுக்கு சீரிய முறையில் அரசின் சேவைகளை கொண்டு சேர்க்க வேண்டும். பொதுமக்களிடம் பெறும் மனுக்களை கனிவுடன் பரிசீலித்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்” என அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.