போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்: எடப்பாடி பழனிசாமி திறந்தார்

0

போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்: எடப்பாடி பழனிசாமி திறந்தார்

சென்னை, பிப்.6–

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

தொழில் துறையில் ஆட்டோமொபைல் உற்பத்திப் பிரிவில் மிகப்பெரிய மையமாக இது பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த மையமானது சென்னையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் தமிழகம் கேந்திரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், மோட்டார் வாகன உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தின் மூலம், வர்த்தகத்தை பெருக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சென்னைக்கு அருகில் அமைக்கப்படும் என்று சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதற்காக சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 28 ஏக்கர் நிலம் கார் உற்பத்தித் துறையில் முன்னிலை பெற்று விளங்கும் போர்டு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஆட்டோமொபைல் உற்பத்தித் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை போர்டு நிறுவனம் கட்டமைத்துள்ளது.

இந்த அதிநவீன தொழில்நுட்ப புதுமை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், போர்டு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மைக்கேல் பிரல்மெயர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆட்டோமொபைல் துறையானது கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப தொடர்ந்து மாறிக் கொண்டே வருகின்றன. புதிய தொழில்நுட்பங்கள் வாடிக்கையாளர்களின் வசதிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்சாரத்தில் இயங்கும் காா்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற அதிநவீன புதிய வசதிகளை ஆராய்ச்சி செய்து அதனை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் போா்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் திகழும் என தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.