பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள்

0

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள்

சென்னை, நவம்பர் 21, 2019

     குடும்ப அமைப்பில் பெண்கள் முக்கியமானவர்களாக உள்ளனர்.  ஆனால், அவர்கள் உணவு விஷயத்திலும், ஆரோக்கியத்திலும் அலட்சியமாக இருக்கின்றனர்.  பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான், அவர்களின் குடும்பம் செழிப்பாக இருக்கும். பிறந்ததுமுதலே, பெண் முன்னேற்றத்திற்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 1990-லிருந்து பெண்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தமிழக அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. சுயஉதவிக் குழு என்றாலே, அது பெண்கள் குழுதான் என்று பெயர் பெற்றுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 22,800 பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன.  இவர்களின் சேமிப்புத் தொகை கோடிக்கணக்கில் இருக்கின்றது.  பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும். எனவே, ஒவ்வொரு சுயஉதவிக் குழுவும் சிறுசிறு தொழில் தொடங்கி வணிக அளவில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பி.பொன்னையா கேட்டுக்கொண்டார்.

     சென்னையில் உள்ள மத்திய அரசின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் நடத்தப்படும் “பெண்கள் மற்றும் குழந்தைகள்: ஆரோக்கியமும், அதிகாரம் பெறுதலும்” என்ற மூன்று நாள் சிறப்பு முகாமை தொடங்கிவைத்துப் பேசிய போது, ஆட்சியர் திரு பொன்னையா இவ்வாறு தெரிவித்தார். இந்த முகாம், ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெறுகின்றது.

     நிகழ்ச்சிக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டலத்தின் தலைமை இயக்குனர் (பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம்) திரு.ஏ.மாரியப்பன் தலைமை வகித்தார்.     பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், அவர்களின் கல்வியை மேம்படுத்தவும், இந்திய அரசு “பெண் குழந்தைகளைக் காப்போம் – பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.  அதனால் தற்போது மேல்நிலை கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் நாடு முழுவதும் ஒரு கோடியே 30 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன.  முத்ரா கடனுதவித் திட்டத்தின்கீழ் கடன் பெற்றவர்களில் 70 சதவீதத்தினர் பெண்கள் என்பது  பாராட்டுக்குரிய விஷயமாகும்.  பாலின பாகுபாட்டுக்கு வழிவகுப்பது குழந்தை வளர்ப்புதான்.  எனவே, குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு முறையில் ஆண், பெண் வித்தியாசம் காட்டக்கூடாது.  பெண்கள் அதிகாரம் பெற, முதலில் அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை இயக்குனர் திரு மாரியப்பன் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

     முன்னதாக, புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் முனைவர் திரு. தி. சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.

     நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் திரு சீனுவாசராவ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமிகு சற்குணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     பெண்கள் முன்னேற்றம் குறித்த புகைப்படக் கண்காட்சியையும், மாநில அரசுத் துறைகளின் கண்காட்சியையும் ஆட்சியர் திரு. பொன்னையா திறந்துவைத்துப் பார்வையிட்டார்.

     மகளிருக்கு விவாதப் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை இயக்குனர் திரு மாரியப்பன் பரிசுகள் வழங்கினார்.  நிறைவில் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கள விளம்பர அலுவலர் திரு.க. ஆனந்த பிரபு நன்றி கூறினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை ஓவியர் திரு. அ. காளிதாஸ் மற்றும் களவிளம்பர உதவியாளர் திரு.மு.முரளி செய்திருந்தனர்.