‘பெண்கள் உயர்ந்தால் தான், சமூகம் உயரும்!’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை!
சென்னை, சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதனையடுத்து விழா சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“புத்தாண்டு பிறந்து நான் கலந்துக்கொண்டிருக்கக்கூடிய முதல் நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சி. அதில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. புத்தாண்டிற்கு முன்பாக நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டம் இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க வகையில் பெருமைப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.
திராவிட இயக்கம் சமூகத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சமத்துவத்தை நிலைநாட்ட உருவான இயக்கம்தான் நம்முடைய இயக்கம். அதில் பாலின சமத்துவமும் முக்கியமான ஒன்று.
பெண்களுடைய உரிமைகளுக்காகவும், அவர்களுடைய முன்னேற்றத்துக்காகவும் ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஏற்கனவே பேரறிஞர் அண்ணா காலத்தில், கலைஞர் காலத்தில் பல்வேறுத் திட்டங்களை நிறைவேற்றியிருந்தாலும் அதைத் தொடர்ந்து இன்றைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய அரசு அண்ணா வழியில், கலைஞர் வழியில், தந்தை பெரியார் எந்த கனவைக் கண்டரோ! எதற்காக வாழ்நாள் முழுவதும் போராடினாரோ! அந்த எண்ணங்களெல்லாம் நிறைவேற்றும் வகையில் இன்றைக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அரசுப் பணிகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவி குழுக்கள், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று இப்படி பல்வேறு திட்டங்களை நிறைய சொல்லலாம். பெண்களுடைய பொருளாதார தன்னிறைவுக்காகவும் பல திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் நாம் தொடர்ந்து தீட்டி வந்துக்கொண்டிருக்கிறோம்.
பெண்கள் கல்வியறிவு பெறவேண்டும் என்பதை தாண்டி, அதன் அடுத்தகட்டமாக இன்றைக்கு பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யக்கூடிய வகையில் நாம் திட்டங்களை தீட்டி வருகிறோம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி… இப்படி ஒவ்வொரு திட்டமும் பெண்கள் கல்வியறிவு பெறவேண்டும், பெண்கள் நல்ல வேலைகளுக்குப் போகவேண்டும், பெண்கள் அதிகாரத்தில் சென்று அமரவேண்டும், பெண்கள் உலக அறிவு பெறவேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் நாம் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
இதற்கு காரணம், பெண்கள் உயர்ந்தால்தான் ஒரு சமூகம் நிமிர்ந்து நிற்க முடியும். அதனால்தான் “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே” என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.
பெண்ணடிமை தீர்ந்து, பெண் அதிகாரம் பெறும் அந்த மாற்றத்தை நோக்கித் இன்றைக்கு தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்காகதான் இத்தனை திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.
பெரிய அளவிலான பல திட்டங்களை இப்படி நம்முடைய அரசு செய்து கொண்டு வந்தாலும், சிறிய, சிறிய அளவிலான திட்டங்களும் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. அந்த வகையில்தான், என்னுடைய கொளத்தூர் தொகுதியில் அனிதா பெயரில், அரியலூர் பகுதியைச் சார்ந்த, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மாணவி தன்னுடைய மருத்துவ கனவு நிறைவேற முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டு நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் பெயரில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ ஆரம்பித்து பெண்களுக்கு திறன் பயிற்சியை, என்னைத் தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதி மக்களுக்காக அந்த திட்டத்தை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.
Tally உள்ளிட்ட கணினி சார்ந்த படிப்புகள், இலவச மடிக்கணினி, தையல் பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை பெண்கள் முடித்து இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள். கொளத்தூர் தொகுதியில் அனிதா அச்சீவர்ஸ் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கும்போது, அந்த அகாடமியில் திறன் பயிற்சி முடித்தவர்களே அதைப்பற்றி சொல்லி கேட்கும்போது எனக்கு ஏற்படக்கூடிய மகிழ்ச்சி அளவிடமுடியாது.
அதேபோல்தான், இன்றைக்கு இந்த சைதை தொகுதியில் நம்முடைய அமைச்சர் மாண்புமிகு திரு. மா.சு. அவர்கள் முன்னெடுப்பில், கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்படுகிறது. ‘நேச்சுரல்ஸ்’ மூலமாகவும், ‘உஷா’ நிறுவனம் மூலமாகவும் மகளிருக்கு திறன் பயிற்சி கிடைக்கப் போகிறது.
கொளத்தூர் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியைப் போல இந்த கலைஞர் திறன் மேம்பாட்டு மையத்திலும் Tally பயிற்சி வழங்கப்படுகிறது. அதுவும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரம் பேருக்கு இந்த பயிற்சிகளை தந்து அவர்கள் வாழ்க்கையில் ஒரு அடி முன்னேறி நிற்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்றைக்கு உதவியிருக்கிறார்.
சைதை தொகுதியாகட்டும், ஏன், இந்த சென்னை தெற்கு மாவட்டக் கழகம் ஆகட்டும். அதிலிருந்து மா.சுப்பிரமணியன் அவர்களை பிரிக்கவே முடியாது. அந்த அளவு உங்களுடன் இரண்டறக் கலந்தவராக விளங்கிக்கொண்டிருக்கிறார். எனவே, நீங்கள்தான் அவருக்கு செல்லப்பிள்ளையாக இருந்து,
மா.சு என்று சொன்னாலே, சென்னை மேயராக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக, உடற்பயிற்சி ஆர்வலராக அவர் செய்த சாதனைகளுடன் சேர்த்து, இன்னும் சில விஷயங்களும் என்னுடைய நினைவுக்கு வருகிறது.
குறிப்பாக, 2017-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் பல நீர்நிலைகள், குளங்களை நம்முடைய கழகத்தினர் மூலம் தூர்வாருகின்ற பணியில் நாம் ஈடுபட்டோம். அந்த பணியை முதன்முதலில் தொடங்கியது எங்கே என்றால், இந்த சைதாப்பேட்டையில்தான். இங்கே இருக்கக்கூடிய கோதண்டராமர் கோயில் குளத்தில்தான் அந்த தூர்வாரும் பணியை நான் தொடங்கி வைத்தேன். அதை என்னால் இன்னும் மறக்க முடியாது. தமிழ்நாடு முழுவதும் அதை ஒரு இயக்கமாக முன்னெடுத்து நாம் செய்தது மக்களிடம் நமக்கு மிகப்பெரிய நற்பெயரை பெற்று தந்திருக்கிறது.
அதேபோல், நடப்படுகின்ற மரக்கன்றுகள் ஒழுங்காக பராமரிக்கப்பட்டு அது மரங்களாக வளர்வதை உறுதி செய்யவேண்டும். அதையும் கவனத்தில் வைத்து, ஓராண்டு முறையாக அதைப் பராமரிக்கிறவர்களுக்கு ‘பசுமை காவலர்’ விருதுகளையும் வழங்கி ஊக்குவித்துக் கொண்டு வருகிறவர் தான் நம்முடைய திரு. மா.சு அவர்கள். அது மிகவும் பாராட்டுக்குரியது.
கழக செய்திகளையும், கொள்கைகளையும் தொண்டர்களிடத்திலே, மக்களிடத்திலே கொண்டு சேர்ப்பதற்கு நம் வாளும், கேடயமாக இருப்பது முரசொலி. கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியில் வரக்கூடிய அறிவுசார்ந்த செவிமிக்க கட்டுரைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியாக முரசொலி வாசகர் வட்டம் இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு என்னுடைய பாராட்டுகள்.
மக்கள் பணியானாலும், கழகப் பணியானாலும் முன்னிலையில் நிற்கக்கூடியவர்தான் நம்முடைய மா.சு அவர்கள். அவர் எதை செய்தாலும் அது ஒரு குறுகிய காலத்திட்டமாகவோ, சிறிய திட்டமாகவோ இருக்காது. எதையும் பேருக்கு தொடங்கி வைத்துவிட்டு பாதியில் விடுபவர், இல்லை அவர். மாரத்தான் போல நீண்ட நெடிய, பல காலத்துக்கு நிலைக்கக்கூடிய திட்டமாகதான் அது இருக்கும். அதுபோலதான் இன்றைக்கு இங்கே நாம் தொடங்கி வைத்திருக்கின்ற கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையமும் இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
அவருடைய இந்த மாரத்தான் பயணம் சாதாரணப் பயணமாக அல்ல, சாதனைப் பயணமாக என்றென்றும் தொடரட்டும், தொடரட்டும்” என்றார்.