புதுதில்லியில் இந்திய பத்திரிகை பதிவாளர் பதவி வகித்து வந்த திரு .கே கணேசன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்

0

புதுதில்லியில் இந்திய பத்திரிகை பதிவாளர் பதவி வகித்து வந்த திரு .கே கணேசன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்

புதுதில்லியில் இந்திய பத்திரிகை பதிவாளர் பதவி வகித்து வந்த திரு .கே கணேசன் நேற்று (31.05.2019) பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெறுவதையொட்டி திரு கே.கணேசன், இன்று தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற திரு பிரகாஷ் ஜவடேகரை, அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தில்லி பத்திரிகை பதிவாளர் அலுவலகத்தில் (RNI) மத்திய அரசு செயலர் அந்தஸ்தில், பத்திரிகை பதிவாளர் மற்றும் முதன்மை தலைமை இயக்குநர் பொறுப்பை அவர் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வகித்து வந்தார்.

1981-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று 1982-ஆம் ஆண்டு இந்திய தகவல் பணியில் சேர்ந்த திரு கே. கணேசன், பயிற்சி முடித்த பின், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அகில இந்திய வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை தகவல் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து ஊடகப் பிரிவுகளிலும், பல்வேறு உயர் பதவிகளை வகித்து வந்தார். 2008-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தில்லியில் தூர்தர்ஷன் செய்திப் பிரிவின் தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்தார். அதன் பின்னர் 2012-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை இந்திய பத்திரிகை பதிவாளர் அலுவலகத்தில், பத்திரிகை பதிவாளராக பொறுப்பு வகித்தார்.

இந்தப் பொறுப்பினைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு வரை தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் காட்சி மற்றும் விளம்பரத்துறை (DAVP)யின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். 2017-ஆம் ஆண்டு முதல் பத்திரிகை பதிவாளர் அலுவலகத்தின் பத்திரிகை பதிவாளராகப் பணியாற்றிய அவர், இன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பணியிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள பத்திரிகை பதிவாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய தகவல் பணி அதிகாரிகளும், பணியாளர்களும் அவருக்கு பிரியா விடை அளித்தனர். தில்லியில் உள்ள இந்திய வெகுஜன தொடர்பு கல்வி நிறுவனத்தின் (IIMC) தலைமை இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

திரு.கணேசன் சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் செய்திப் பிரிவுகளிலும் செய்தி ஆசிரியராக பணியாற்றியதோடு அகில இந்திய வானொலி மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகங்களில் கூடுதல் தலைமை இயக்குநராகவும், பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.