பிரதமரை சந்தித்து கோரிக்கை: ஜெயலலிதா கேட்ட தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் – அ.தி.மு.க. செயற்குழுவில் வலியுறுத்தல்

0

அதிமுக செயற்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

AIADMK-2 JJ

சென்னை, ஜூன்.19- தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ள நிதியை உடனடியாக வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கழக நிரந்தர பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கலந்து கொண்டார். இதில நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாற்றங்களுக்குப் பின்:

தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், அதிமுகவில் நிர்வாகிகள் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர்.

16 மாவட்டங்களின் செயலாளர்கள் மாற்றப்பட்டனர். பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் உள்ளிட்ட 14 பேர் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். மனுக்கள் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆகியவை கலைக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கட்சியின் அமைப்புச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார். இது தவிர, அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கும் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

பரவலாக பேசப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு இன்று காலை 11 மணிக்கு கூடியது. அதிமுகவில், செயற்குழு உறுப்பினர்களாக உள்ள 150-க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

AIADMK-3

AIADMK-1

 

 

 

 

 

14 தீர்மானங்கள்:

அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவற்றில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து, நன்றி, பாராட்டும் தெரிவித்து 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு சில கோரிக்கைகளை வலியுறுத்தி 3 தீர்மானங்களும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு மகத்தான வெற்றியை ஈட்டுவது என சூளுரைத்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களின் விவரம்:

1. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, 6-வது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றிருக்கும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளருக்கு பாராட்டும், வாழ்த்தும்.

2. சட்டமன்றப் பொதுத் தேர்தலில் சிறப்பான வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்றுத் தந்த கழக நிரந்தரப் பொதுச் செயலாளருக்கு நன்றி.

3. முதலமைச்சர் பதவியேற்றவுடன், தமிழகத்தின் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வண்ணம் மகத்தான ஐம்பெரும் திட்டங்களில் முதல் கையெழுத்திட்டு, ‘மக்கள் நலனைக் காப்பதில் தானே என்றும் முதல்வர்’ என்று பறைசாற்றியமைக்குப் பாராட்டு.

4. அதிமுகவின் ஒப்பற்ற தேர்தல் அறிக்கையினை தயாரித்தமைக்கும்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் தன்னலம் கருதா தியாகத்திற்கும், கழக நிரந்தரப் பொதுச் செயலாளருக்கு நன்றியும், பாராட்டும்.

5. அதிமுகவின் ஒப்பற்ற தேர்தல் அறிக்கையினை தயாரித்தமைக்கும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் தன்னலம் கருதா தியாகத்திற்காக முதல்வருக்கு நன்றியும், பாராட்டும்.

6. இரண்டாவது முறையாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மகத்தான வெற்றியினை வழங்கி இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி.

AIADMK-5

7. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜனநாயகத்தைக் காக்கும் வகையில், தீய சக்தியின் சூதுமதி சூழ்ச்சிகளை முறியடித்து, அதிமுக ஆட்சி தொடர்ந்திட, வாக்களித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி.

8. அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காகவும், தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காகவும் 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பாரதப் பிரதமரிடம் நேரில் அளித்து, அவற்றை நிறைவேற்றுவதன் அவசியத்தை விளக்கியமைக்காக, கழக நிரந்தரப் பொதுச் செயலாளருக்கு நன்றி.

9. காவேரி நதிநீரை பயன்படுத்தும் அனைத்து விவசாயப் பெருமக்களும் குறுவை பயிர் வேளாண்மையை வெற்றிகரமாக செய்திட, “குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை” அறிவித்திருக்கும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளருக்கு நன்றி.

10. இந்திய நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வண்ணம் உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றிய கழக நிரந்தரப் பொதுச் செயலாளருக்கு பாராட்டு.

11. மத்திய அரசு, தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ள நிதியையும்; புதிதாக மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிட கோரி இருக்கும் நிதியையும் உடனடியாக வழங்கிட மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.

12. காவேரி, முல்லைப் பெரியாறு ஆகிய இரு தமிழக நீராதாரப் பிரச்சனைகளில், தமிழ் நாட்டிற்கு நீதி கிடைத்திடவும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், `காவேரி மேலாண்மை வாரியம்’, `காவேரி நீர் முறைப்படுத்தும் குழு’ ஆகியவற்றை மத்திய அரசு உருவாக்கவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

13. ‘அவ்வப்போது ஏற்படும் வறட்சியாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு வரும் தமிழக விவசாயிகளின் நலன்களைக் காக்க தமிழக, தென்னக நதிகளை இணைப்பதே நிரந்தரத் தீர்வு’ என்ற தொலை நோக்குத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாகத் தொடங்கிட மத்திய அரசை வலியுறுத்தல்.

14. அதிமுகவுக்கு தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வகையில் அரசியல் பயணத்தை மேற்கொண்டிருக்கும், கழக நிரந்தர பொதுச் செயலாளர் வகுத்துத் தந்த வியூகத்தின்படி செயல்பட்டு, உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டிட சூளுரை.