பிகில் திரை விமர்சனம்: விஜய் ரசிகர்கள் விசில் போடலாம்

0

பிகில் திரை விமர்சனம்

விஜய் ரசிகர்கள் விசில் போடலாம்

ரேட்டிங்

அப்பா ராயப்பன்(விஜய்) வட சென்னையில் மிகப்பெரும் டான். அவரது ஒரே மகன் மைக்கேல் விஜய்). மைக்கேலின் தந்தையான ராயப்பன் தனது பகுதி மக்களுக்கு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுத்து நல்லது செய்துவருகிறார். அதேபோல தனது சமுதாய மக்கள் விளையாட்டின் மூலம் தங்களின் அடையாளத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதை ஆணித்தரமாக கூறிவருகிறார் ராயப்பன். தன்னோடு இந்த ரவுடித்தனம் ஒழிய வேண்டும் என்று மகனை விளையாட்டில் இறக்கி, மிகப்பெரும் கால்பந்து விளையாட்டு வீரர் பிகில் என்ற பெயரில் புகழடையச்செய்கிறார். மைக்கேல்(எ)பிகில் அப்பாவின் ஆசைப்படி கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டு இந்திய அணிக்கு தேர்வாகிறார். டெல்லிக்கு கிளம்பும் நேரத்தில் மைக்கேலின் அப்பா எதிரிகளால் கொல்லப்படுகிறார். இதனால் மைக்கேல்லின் வாழ்க்கை தடம் மாறி ,எதிரிகளை போட்டுத் தள்ளி அப்பா ராயப்பன் எது நடக்கக் கூடாது என்று நினைத்தாரோ அது நடந்து டானாக மாறிவிடுகிறார். மைக்கேல்லின் வாழ்க்கை டானாக மாறியதால் அவரால் கால்பந்தாட்டத்தில் ஈடுபட முடியாமல் போகிறது. ஆனால் அப்பாவின் ஆசைக்காக மகளிர் கால்பந்து அணியை தன் சக விளையாட்டு வீரரான கதிரை அழைத்து, தனது ஏரியாவில், வாழ்வில் முன்னேறத் துடிக்கும் வசதியற்ற மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களை வைத்து ஒரு கால்பந்தாட்ட அணியை உருவாக்குகிறார். கதிர் அந்த பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளாராக உள்ளார். தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க அந்த பெண்கள் தகுதியாகிறார்கள். அவர்களுடன் போட்டியில் பங்கேற்க டெல்லி செல்ல கதிர் தயாராகும்போது, ஒரு கட்டத்தில் எதிரி டேனியல் பாலாஜி மைக்கேலை கொல்ல வரும் போது கதிரை கத்தியால் குத்தி விடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரால் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பின்னர், மைக்கேல் (எ) பிகில் கதிர் உருவாக்கிய பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளராக களமிறங்குகிறார், ஆனால், மைக்கேலை ரவுடியாக மட்டுமே அறிந்திருக்கும் அந்த பெண்கள், ரவுடித்தனம் செய்து வரும் ஒரு நபரை தங்கள் பயிற்சியாளராக ஏற்கமாட்டோம் என்று ஆரம்பத்தில் பிரச்சனை செய்கிறார்கள். அதன் பின்னர் மைக்கேல் யார் என்பது அவர்களுக்கு தெரிய வர பின்னர் மைக்கேலின் தலைமையில் அந்த பெண்கள் குழுவினர் பயிற்சிகளை எடுத்து வருகிறார்கள். இறுதியில் மைக்கேலின் கனவு நிறைவேறியதா? அவர் பயிற்சி கொடுத்த பெண்கள் சாதித்தார்களா இல்லையா? என்பதே மீதிக் கதை.

ராயப்பன், மைக்கேல் என இரண்டு கதாபாத்திரத்தில் தனது அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் விஜய். ராயப்பன் கதாபாத்திரத்தில் விஜய் ஒரு திக்குவாய் ஆக நடித்திருக்கிறார். முதல் முறையாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், அனைவரின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார். மைக்கேல் (எ) பிகில் கதாபாத்திரத்தில் வழக்கம் போல் விளையாட்டு, நடனம், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் வெலுத்து வாங்குகிறார் விஜய்.

நயன்தாராவுக்கு இந்த படத்தில் அவருடைய திறமைக்கு ஏற்றது போல் கதாபாத்திரம் அமையவில்லை.

கால்பந்தாட்ட பெடரேஷனின்; தலைவராக வரும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் விஜய்க்கு சரியான வில்லனாக களக்கியிருக்கிறார்.
விஜய்யின் நண்பனாகவும், பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளாராக வரும் கதிர் மற்றும் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இடம் பெற்றுள்ள இந்துஜா, அம்ரிதா, ரெபா மோனிகா, வர்ஷா பல்லமா, இந்திரஜா ஷங்கர் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

யோகிபாபுவின் குறைவான சிரிப்பு வெடி. இடைவேளைக்கு பிறகு வந்து போகும் விவேக், மிரட்டல் டேனியல் பாலாஜி மற்றும் ஆனந்தராஜ், தீனா என அனைவரும் கதை ஒட்டத்திற்கு பக்க பலம்.

கால்பந்து விளையாட்டை அபாரமாக காட்சிப்படுத்தி உள்ளது ஜி கே விஷ்ணுவின் ஒளிப்பதிவு.

தேவையே இல்லாமல் ஓடும் மூன்று மணி நேரம் நேரத்தை ரூபன் கத்திரியை சூப்பர் ஷார்ப்பாக (எடிட்டிங்) கத்திரித்து காட்சிகளை இன்னும் விறுவிறுப்பாக நகர்ததியிருக்கலாம்.

ஏ.ஆர்.ரகுமான் இசை மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு பலம். அதே நேரத்தில் சிங்கப் பெண்ணே பாடலில் அவர் திரையில் அட்லியுடன் தோன்றி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தெறி, மெர்சல் படங்களுக்குப் பிறகு இயக்குநர் அட்லியும் நடிகர் விஜய்யும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது. பிகில் தன்னுடைய கதை என்று கூறும் அட்லி, இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி ஒட்டுமொத்த பெண்கள் சென்டிமென்ட்டையும் களமிறங்கி இருக்கிறார். மாஸ் ஹீரோ மூலம் நல்ல சமூக கருத்தினை உணர்த்த முயற்சித்துள்ளார். ஆனால் பிகிலின் சத்தம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. முந்தைய படங்களில் இருந்த வேகம் பிகிலில் இல்லை என்பது தான் உண்மை.

மொத்தத்தில் விஜய்க்காக மட்டுமே பிகிலை பார்க்கலாம், அவர்களின் ரசிகர்கள் விசில் போடலாம்.

நம்ம பார்வையில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான ‘பிகில்” படத்துக்கு 3 ஸ்டார் தரலாம்.