பிகில் சிறப்பு காட்சி 5.30 AM? விஜய் படத்துக்கு அறிக்கை அனுப்பிய அரசு..!

0

பிகில் சிறப்பு காட்சி 5.30 AM? விஜய் படத்துக்கு அறிக்கை அனுப்பிய அரசு..!

இந்த ஆண்டு தீபாவளித் திருநாள் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதால் அன்று வெளியாக வேண்டிய திரைப்படங்கள் அக்டோபர் 25ம் தேதியே வெளியாகின்றன.

தொடக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மட்டுமே இந்தத் தீபாவளிக்கு வெளியாகுமென நம்பப்பட்டது. ஆனால், கார்த்தி நடித்த ‘கைதி’ படமும் தீபாவளிக்கே வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரு திரைப்படங்கள் தவிர, இந்தித் திரைப்படமான ‘Housefull 4’ படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.

பிகில் திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருப்பதாக, படத்தைத் தயாரித்திருக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் க்ரியேட்டிவ் இயக்குனரான அர்ச்சனா கல்பாத்தி தனது பேட்டிகளில் கூறிவருகிறார்.

இந்தப் படத்தின் திரையரங்க உரிமைகள் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இந்தப் படம் 600 திரையரங்குகளில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் திரையரங்க உரிமைகளை ஸ்க்ரீன் சீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எட்டு திரைப்படச் சந்தைகளில், வேறு எட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் படத்தை வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன்.

பிகில் திரைப்படம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீபாவளிக்கு கூடுதலான திரையரங்குகளில் அந்தப் படத்தை வெளியிடலாம் என தயாரிப்புத் தரப்பு கருதியிருந்தது.

ஆகவே, தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த கைதி, விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் ஆகிய திரைப்படங்கள் பின்வாங்குமெனக் கருதப்பட்டது. ஆனால் கைதி திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் உறுதியாக இருந்துவிட்டது.

தற்போது கைதி திரைப்படம், தமிழ்நாட்டில் சுமார் 250 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனால் பிகில் திரைப்படத்திற்குக் கிடைக்கும் திரையரங்கங்கள் குறைந்தது ஒரு புறமிருக்க, அந்தப் படத்தின் பேரம் பேசும் திறனும் குறைந்தது.

இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக் கிழமை வருவதால், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று நாட்கள்தான் முழுமையான அளவில் திரையரங்குகள் நிரம்பும்.

திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்திருப்பதால் அன்றைய தினமும் திரையரங்குகள் நிரம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நான்கு நாட்களிலிருந்துதான் பிகில் படத்தின் பெரும்பாலான திரையரங்க வசூலை மீட்க வேண்டும். பெரும்பாலான திரையரங்குகள் பிகில் திரைப்படத்திற்காக ‘மினிமம் கேரண்டி’யாக ஒரு தொகையை அளித்துள்ளனர்.

ஆகவே படம் வெளியாகும் அக்டோபர் 25ஆம் தேதியன்று அதிகாலை காட்சிகள் நடைபெற்றால், ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்துவதன் மூலம் குறிப்பிட்ட அளவு வசூலைப் பெற முடியும். ஆனால், இதுவரை தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியளிக்கவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது.

எந்தத் திரையரங்காவது அதிகாலை காட்சிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்”

மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்  எனப் பதிவிட்டுள்ளார்.

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது தமிழக அரசு குறித்து படத்தின் கதாநாயகன் விஜய் வெளியிட்ட கருத்துகளின் காரணமாகவே மாநில அரசு பாராமுகமாக நடந்துகொள்வதாக சொல்லப்படுகிறது.