‘பானி’ புயலை எதிர்கொள்ள தமிழகத்துக்கு ரூ.309 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது

0
159

‘பானி’ புயலை எதிர்கொள்ள தமிழகத்துக்கு ரூ.309 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது

புதுடெல்லி : வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி உருவான ‘பானி’ புயல் முதலில் தமிழகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயல் தற்போது சென்னை அருகே மையம் கொண்டு இருந்தாலும், அது திசை மாறி ஒடிசா மாநிலம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் வட தமிழக கடற்கரை பகுதிகளில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் பானி புயலை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் முடிவின்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு ரூ.1,086 கோடியை நிவாரண நிதியாக முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்திற்கு ரூ.309.37 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.200.25 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.340.87 கோடியும், மேற்குவங்காளத்திற்கு ரூ.235.50 கோடியும் வழங்கப்படுகிறது. இந்த நிதி பானி புயல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தேசிய பேரிடர் மீட்பு படையினரும், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடற்படையின் கிழக்கு பிராந்தியம் தயார் நிலையில் உள்ளது.

சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படையை சேர்ந்த படகுகள் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் நிவாரண உதவிகளை அளிக்கவும், மக்களை வெளியேற்றவும், நிவாரண பொருட்களை எடுத்துச்செல்லவும் தயார் நிலையில் உள்ளன. அந்த படகுகளில் கூடுதல் மருத்துவர்கள், ரப்பர் படகுகள், உணவு, கூடாரம் அமைக்க தேவையான பொருட்கள் உள்ளிட்ட அனைத்து நிவாரண பொருட்களும் போதுமான அளவில் வைக்கப்பட்டுள்ளன.

அரக்கோணம் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை விமான தளங்களில் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடற்படை அதிகாரிகள் அந்தந்த மாநில அரசுகளுடன் தொடர்பில் இருந்துவருகின்றனர்.