நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்

0

நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்

ரேட்டிங்

2016ல் இந்தியில் வெளிவந்து மெகாஹிட் ஆன ‘பிங்க்” திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக் நேர்கொண்ட பார்வை.
மீரா கிருஷ்ணன் (ஷரத்தா ஸ்ரீநாத்), ஃபமிதா பானு (அபிராமி வெங்கடாசலம்), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா தாரியங்) ஆகிய மூவரும் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஒரே அறையில் தங்கி வெவ்வேறு துறைகளில் பணி செய்து வருகிறார்கள். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடுபவராக இருக்கிறார். அதே அப்பார்ட்மெண்டலில் இவர்களது வீட்டிற்கு அருகில் பிரபல வழக்கறிஞர் பரத் சுப்ரமணியம் (அஜித்குமார்) புதிதாகக் குடிவருகிறார். கர்ப்பிணி மனைவியை (வித்யா பாலன்) இழந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துவரும் பிரபல வழக்கறிஞர் பரத் சுப்ரமணியம் (அஜித்குமார்). ஒரு நாள் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் நடன நிகழ்ச்சியில், ஆதிக் ரவிச்சந்திரன் (அர்ஜுன் சிதம்பரம்), ஆதிக் ரவிச்சந்திரன் (விஷ்வா) , வெங்கி (அஷ்வின் ராவ்) ஆகியோருடன் மூன்று பெண்களும் புதிதாக அறிமுகமாகிறார்கள். இவர்கள் அனைவரும் விருந்துக்கு செல்கிறார்கள். அங்கு அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தா ஸ்ரீPநாத்திடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, இதில் அர்ஜுன் சிதம்பரத்தை பாட்டிலால் தாக்கிவிட்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஃபமிதா பானு, ஆண்ட்ரியா மூவரும் தப்பித்து செல்கிறார்கள். நடந்த சம்பவத்தால் மூன்று பெண்களும் தவித்துக்கொண்டிருக்க மேலும் பல பிரச்னைகள் அவர்களின் நிம்மதியைக் குலைக்கின்றன. அர்ஜுனின் தொல்லையை பற்றி போலீசில் புகார் கொடுக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் போலீஸ், அடிவாங்கிய அர்ஜுன் சிதம்பரம் அரசியல் தொடர்பும் பணமும் உள்ளவன் என்பதால், அவன் கொடுத்த கொலை முயற்சி புகாரில் மீராவைக் கைதுசெய்கிறது காவல்துறை. நடைபெறும் இந்த சம்பவங்களை கவனித்துக்கொண்டிருக்கும் பரத் சுப்ரமணியன் மூன்று பெண்களின் பிரச்னைக்குக் கைகொடுக்க முன் வருகிறார். அவர்களுக்காக ஆதரவாக வாதாட ஆரம்பிக்கிறார். உண்மையில் மூன்று பெண்களும் என்ன செய்தார்கள்? கோர்ட்டில் நடக்கும் காரசாரமாக வாதங்களையும் விவாதங்களையும் பரத் சுப்ரமணியன் (அஜித்குமார்), தனது திறமையான வாதத்தால் எப்படி வழக்கை முடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

அஜித்தின் நடிப்பிற்கு மிகச் சரியான படமாக நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை நேர்த்தியாகவும், படத்தின் வலிமையையும், கதையின் ஆழத்தையும் புரிந்துகொண்டு தனக்கே உரிய பாணியில் பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் அஜித்குமார். ஒட்டு மொத்த ரசிகர்களையும் திருப்திபடுத்திருக்கிறார்.

இந்தியில் டாப்ஸி பன்னு நடித்த பாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வலுவான அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவரது தோழிகளாக வரும் அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியங் இருவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த கதை இவர்கள் மீது பயணிக்கிறது. இவர்கள் மூவரும் கோர்ட் விசாரணை காட்சிகளில் இயல்பு மீறாத நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்கள். ஹாட்ஸ் அப் சொல்லலாம்.

வித்யாபாலன், குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும், அனைவருடைய மனதில் நிற்கிறார்.

எதிர் கட்சி வழக்கறிஞராக நெறியாளர் ரங்கராஜ் பாண்டே நடித்திருக்கிறார். முதல்படத்தில் தனது துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அவரது நடிப்பு ஒரு சில இடங்களில் கொஞ்சம் ஓவராக இருப்பதாக தோன்றுகிறது.

அர்ஜுன் சிதம்பரம் கொடுத்த வேலையை சிறப்பாகவும் செய்திருக்கிறார். கோர்ட்டில் அஜித்துடன் விவாதம் செய்யும் காட்சியில் கூர்மையான பார்வையால் ஸ்கோர் செய்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் (அர்ஜுன் சிதம்பரம்), ஆதிக் ரவிச்சந்திரன் (விஷ்வா) , வெங்கி (அஷ்வின் ராவ்), டெல்லி கணேஷ், ஜூனியர் பாலையா, ஜெய பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

‘நோ”, ‘நோ மீன்ஸ் நோ” என ஆரம்பித்து அஜித் பேசும் கிளைமாக்ஸ் வசனம் மிகப்பெரிய அளவில் இளைஞர்களிடையே பேசப்படும்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், யுவனின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

கோகுல் சந்திரன் (படத்தொகுப்பு), கே.கதிர் (கலை), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), கல்யாண், பிருந்தா (நடனம்) மற்றும் பா.விஜய், நாகார்ஜுன், உமாதேவி, யூநோஹ{ (பாடல்கள்) இவர்கள் கூட்டாக படத்தின் வெற்றிக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இந்தியில் பெரும் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் ஜீவன் மாறாமல் அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு, தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் எச்.வினோத்.

மொத்தத்தில், பெண் உரிமை குறித்த இன்றைய காலக்கட்டத்துக்கு முழுமையான தெளிவான பெண்ணியம் குறித்து பேசும் படம் நேர்கொண்ட பார்வை.

நம்ம பார்வையில் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் பிரபலம் போனி கபூர் தயாரித்திருக்கும் நேர்கொண்ட பார்வை படத்துக்கு              4 ஸ்டார் தரலாம்.