“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” கிளைமாக்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது – சிவகார்த்திகேயன்

0

“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” கிளைமாக்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது – சிவகார்த்திகேயன்

கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான படம் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”. இதில் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோருடன் யூடியூப் பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ஷபீர் இசையத்த இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க இளைஞர்கள் பங்களிப்பில் உருவான இந்த திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. அனைத்து தரப்பிலும் நேர்மறையான விமர்சனங்களை பெற்று, ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் சென்னையில் நடைபெற்றது.

இதில் சிவகார்த்திகேயன் பேசும்போது, ‘இந்த படத்தின் மீது எனக்கு பயம் எதுவும் இல்லை, நம்பிக்கை தான் அதிகம் இருந்தது. கதையை படிக்கும்போதே அவர் எழுதியிருந்த கிளைமாக்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு தயாரிப்பாளராக நான் மட்டும் வெற்றி பெறுவதை தாண்டி, இதில் பங்கு பெறும் எல்லோரும் ஜெயிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் தயாரிப்பை துவங்கினோம்.

யூடியூப் ஆட்களை நம்பி பணம் போடணுமா? படம் எடுக்கணுமா என நிறைய கேள்விகள் வந்தன. என் மீது மக்களும், மற்றவர்களும் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் நான் இங்கு இல்லை. அதுபோலவே இவர்கள் மீது நான் நம்பிக்கை வைத்தேன். சினிமா எனக்கு தெரியாது, ஆனால் அனுபவங்கள் தான் என்னை இதுவரை வழிநடத்தி செல்கிறது. பல நூறு விமர்சனங்களையும் கடந்த வெற்றி இது. எல்லா விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்டு, அவற்றில் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறோம்’ என்றார்.