நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு- வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டன

0
67

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு- வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டன

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15 ஆயிரத்து 158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு மையங்களில் நாளை நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த மின்னணு எந்திரங்கள் அனைத்தும் இன்று காலையில் பலத்த பாதுகாப்புடன் மொத்தம் உள்ள 31,150 வாக்குப்பதிவு மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் மின்னணு எந்திரங்கள் அனைத்து மையங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டன.

மாநிலம் முழுவதும் 3,678 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று 2 ஆயிரம் இடங்களில் பிரச்சினை ஏற்படலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளும் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 1,100 இடங்கள் பதட்டமானவை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

பதட்டமான பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக அங்கு விரைந்து செல்ல ஏதுவாக 846 அதிரடி படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி படையினர் அனைத்து இடங்களிலும் தயார் நிலையில் வாகனங்களில் இருப்பார்கள்.

ஏதாவது ஒரு பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தால் உடனடியாக அங்கு அதிரடி படையினர் விரைந்து சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று தேர்தலை அமைதியாக நடத்த மாநிலம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அடங்கிய 1,343 நிலைக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களும் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களில் ரோந்து சுற்றி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளியிடங்களில் இருந்து வார்டுகளுக்கு சம்பந்தமில்லாத நபர்கள் ஊடுருவுவதை தடுக்கவும், ஆயுதங்கள் மதுபான கடத்தலை தடுப்பதற்கும் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 455 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எந்தவித பிரச்சினையும் இன்றி நடத்தி முடிக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் மாநகர பகுதிகளில் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை நடைபெறும் தேர்தலின்போது 17,788 போலீஸ் அதிகாரிகள் நேரடியாக தேர்தல் களத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இவர்களுடன் 71,074 காவலர்களும், தமிழ்நாடு சிறப்பு படையை சேர்ந்த 9,020 போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். இதன்மூலம் நாளை 97,882 போலீசார் மாநிலம் முழுவதும் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவர்களுடன் 12,321 ஊர்க்காவல் படையினரும், 2,870 முன்னாள் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் கூடுதலாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன்மூலம் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 73 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் 18 ஆயிரம் போலீசார் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தாம்பரம், ஆவடி மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த 3 காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் 24 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 4 கூடுதல் கமி‌ஷனர்கள், 6 இணை கமி‌ஷனர்கள், 18 துணை கமி‌ஷனர்கள், 60 உதவி கமி‌ஷனர்கள் உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட உள்ளனர்.

சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால், தாம்பரம் கமி‌ஷனர் ரவி, ஆவடி கமி‌ஷனர் சந்திப்ராய் ரத்தோர் ஆகியோரது தலைமையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் நேற்று இரவில் இருந்து போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

போலீசாருடன் இணைந்து நாளை தேர்தல் பணியில் 1 லட்சத்து 40 ஆயிரம் அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையம் முன்பு தனித்தனியாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார். வாக்குச்சாவடிகளில் 4 அல்லது 5 மையங்கள் வரை இடம்பெற்றிருக்கும்.

இப்படி தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்கள் முன்பும் தலா ஒரு காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தேவை இல்லாத நபர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்வதை தடுப்பதற்காக நுழைவு வாயிலிலும் ஒரு காவலர் நாளை பணியில் ஈடுபட உள்ளார்.

கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் அடிப்படையில் வாக்குப்பதிவு மையங்கள் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் இன்றே கொண்டுவரப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.