நாளை ஆடி அமாவாசை: விரதமிருந்து தர்பணம் கொடுக்க, தானம் செய்ய சிறந்த நாள்

0

ஆடி அமாவாசையானது தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் அமாவாசை ஆகும். நமது குடும்பத்தில் இறந்தவர்களுக்கு பித்ருக்கள் என்று பெயர். மனிதனுக்கு 30 நாட்கள் ஒரு மாதம் ஆகும். ஆனால் பித்ருக்களுக்கு ஒரு மாதம் என்பது ஒரு நாளாகும். நாம் மாதந்தோறும் பித்ருக்களுக்கு எள் தர்ப்பணம் செய்வது, தினமும் தர்ப்பணம் செய்வதாக அமைகிறது. பித்ருக்களுக்கு இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, தானம் கொடுப்பது ஆகியவை நம் ஆயுளில் மட்டும் அல்லாது நமது சந்ததியினரின் வாழ்விலும் வளம் சேர்க்கும்.

தட்சணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசையான ஆடி அமாவாசையன்று தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்று அடைகிறது என்பது ஐதீகம். அன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பர். ராமேசுவரம், வேதாரண்யம், திருவையாறு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பவானி போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுப்பர்.

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு, விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். பின்னர் சிவாலய தரிசனம் செய்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும். பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்தமாடுவது பாவத்தை போக்கி விமோசனம் அளிக்கும். அன்று ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் எள், மாவு, பிண்டம் ஆகியவற்றை மீன்களுக்கு கொடுத்தால் நீரில் சேர்க்கும் பொருள் ஆவியாக போய் பித்ருக்களை சென்று அடைவதாக ஐதீகம்.