‘நான் முதல்வன்’ மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நிறைவேற்றுவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி உறுதி!
’நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 3700 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, ”முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம், லட்சோப லட்ச தமிழ்நாட்டு இளைஞர்களின் கல்விக்கும் – வேலைவாய்ப்புக்கும் கை கொடுத்து வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 Skill and Placement Training Centres அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தோம்.
அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், ரூ.30.17 கோடி மதிப்பில், தமிழ்நாடெங்கும் 29 திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையங்கள் மற்றும் 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் செயல்படும் வகையில் ரூ.10 கோடி மதிப்பில் Smart Manufacturing Technology Centres- ஐ கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் இன்று திறந்து வைத்தோம். ’நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.42 லட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 25 மாணவர்கள் திறன் பயிற்சிக்காக லண்டன் சென்றுவந்தார்கள். இதில் ஊட்டியைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளியின் மகளான அமிர்தா லண்டன் சென்று திறன்ப யிற்சி எடுத்து வந்தார் என்பதுதான் நமது திராவிட மாடல் அரசின் வெற்றி.
பயிற்சி முடித்து அமிர்தா என்னை நேரில் சந்தித்தபோது, ”அண்ணா, என் வாழ்க்கையில் நான் முதல்முறையாக விமானத்தில் சென்றேன். இதை எனது வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இன்று எனது வாழ்க்கையின் மீது புதிய நம்பிக்கை வந்துள்ளது.” என்று அவர் சொன்னது எனது காதுகளில் ஒளித்து கொண்டே இருக்கிறது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவை நிறைவேற்றவும் – தொழில் முனைவோராக உயர்த்திடவும் என்றும் அயராது உழைப்போம்” என தெரிவித்துள்ளார்.