‘நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன்’ – கவிஞர் வைரமுத்து டுவீட்

0
190

“நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன்” – கவிஞர் வைரமுத்து டுவீட்

சென்னை, தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. இதற்கான தேர்வு முடிவு நேற்று வெளியானது. பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியான, திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார். அதாவது தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்து அவர் மாநில அளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார். மாணவி நந்தினிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நந்தினியின் தந்தை சரவணக்குமார் ஒரு தச்சுத்தொழிலாளி ஆவார்.

இந்த நிலையில், 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ள மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது?. அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!” என்று பதிவிட்டுள்ளார்.