நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இல்லை – நிர்மலா சீதாராமன் பேச்சு

0

நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இல்லை – நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், எதிர்க்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதையொட்டி பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் பேசுகையில், நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது; அது வீழ்ச்சிக்கு பக்கத்தில் இருக்கிறது. அது, திறமையற்றவர்களால் நிர்வகிக்கப்படுகிறது என சாடினார்.

நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் இலக்கை நாட்டின் நிதிப்பற்றாக்குறை தாண்டி விட்டது என்றும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் பேசினார். அப்போது அவர் பட்ஜெட் மீதான எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

2008-09 நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 6.1 சதவீதமாக இருந்தது. 2009-10-ல் இது 6.6 சதவீதமாக இருந்தது. 2010-11-ல் 4.9 சதவீதம் ஆகும். 2011-12-ல் நிதி பற்றாக்குறை 5.9 சதவீதம். 2012-13-ல் நிதி பற்றாக்குறை 4.9 சதவீதம். 2013-14-ல் நிதி பற்றாக்குறை 4.5 சதவீதம். ஆக நாம் நிதி பற்றாக்குறை பற்றி பேசுகிறபோது, மிகவும் திறமையான மருத்துவர்களால் பொருளாதாரம் நிர்வகிக்கப்பட்டபோது, எப்படி இருந்தது என்பதில் கவனம் செலுத்துவோம், புரிந்துகொள்வோம்.

(2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது.)

இதனுடன் ஒப்பிடும்போது, நரேந்திர மோடி அரசு நிதி பற்றாக்குறையை தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்துள்ளது.

2014-15-ல் நிதி பற்றாக்குறை 4.1 சதவீதம். 2015-16-ல் நிதி பற்றாக்குறை 3.9 சதவீதம், 2016-17-ல் நிதி பற்றாக்குறை 3.5 சதவீதம், 2017-18-ல் நிதி பற்றாக்குறை 3.4 சதவீதம், 2018-19-ல் நிதி பற்றாக்குறை 3.4 சதவீதம்.

நடப்பு ஆண்டில் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதம் என பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டது. இதன் திருத்திய மதிப்பீடு 3.8 சதவீதம் ஆகும். 2020-2021-ல் நிதி பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும்.

அரசு, முழு உணர்வுடன் உள்ளது. எல்லா துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்யும் வகையில், தேவையான மற்றும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலையில் இல்லை.

பொருளாதாரத்தில் பச்சை தளிர்கள் இருக்கின்றன என்பதற்கு 7 முக்கிய அறிகுறிகள் காணப்படுகின்றன.

உலகளாவிய உணர்வு இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியா மீது தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதனால்தான் 2018-19 நிதி ஆண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 21.2 பில்லியன் டாலராக (சுமார் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 400 கோடி) இருந்த நிலையில், 2019-20 நிதி ஆண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 24.4 பில்லியன் டாலராக (சுமார் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 800 கோடி) அதிகரித்துள்ளது.

சரக்கு, சேவை வரி வசூல் 2019 நவம்பரில் 6 சதவீத வளர்ச்சி பெற்றது. இது 2020 ஜனவரியில் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எனவே இப்போது சரக்கு, சேவை வரி வசூல் நிலையான வளர்ச்சி பெற்றுள்ளது. செப்டம்பர், அக்டோபரில் ஏற்பட்ட எதிர்மறை வளர்ச்சி, சரி செய்யப்பட்டு விட்டது.

தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, பொது முதலீடு, ஏற்றுமதி ஆகிய 4 வளர்ச்சி என்ஜின்களில் அரசு கவனம் செலுத்துகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.103 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. நுகர்வை ஊக்குவிக்கும் வகையில், அரசு 2019-20-ல் உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.