நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரை

0
186

நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரை

புதுடெல்லி,

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். பொதுவாகப் பார்க்கப் போனால் இந்தக் காலகட்டம் திருவிழாக்களுக்கானது, பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறும், சமயரீதியான பூஜை புனஸ்காரங்கள் நடக்கும். கொரோனா பெருந்தொற்று நிலவும் இந்தச் சங்கடமான வேளையில் மக்களிடம் உற்சாகம் இருக்கிறது, ஊக்கமிருக்கிறது என்றாலும் கூட, ஒருவிதமான ஒழுங்குமுறையும் இருக்கிறது. இந்த சமயத்தில் பெரும்பாலான வகையில் குடிமக்களிடம் ஒரு பொறுப்புணர்வும் காணப்படுகிறது. மக்கள் தங்கள் மீது கவனத்தைச் செலுத்தும் அதே வேளையில் மற்றவர்கள் மீதும் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள், தங்களுடைய அன்றாடச் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டில் நடைபெறும் பண்டிகைக்கான ஏற்பாடுகளில் மக்கள் வெளிப்படுத்தி வரும் ஒழுங்குமுறையும், எளிமையான நடைமுறையும் உண்மையிலேயே இதுவரை காணாத ஒன்று. பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்கள் சில இடங்களில் இணையவழியாகக் கொண்டாடப்பட்டன, பல இடங்களில் இந்த முறை சூழலுக்கு ஏற்றவகையில் பிள்ளையார் திருவுருவங்கள் நிறுவப்பட்டன. நண்பர்களே, நாம் இவற்றை உன்னிப்பாக கவனித்தோமேயானால் ஒரு விஷயம் கண்டிப்பாக நமது கவனத்தைக் கவரும் – அது நமது பண்டிகைகளும், சுற்றுச்சூழலும். இந்த இரண்டுக்கும் இடையே ஒரு மிக ஆழமான தொடர்பு உள்ளது. ஒருபுறத்தில் நமது பண்டிகைகளில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆகியவற்றின் இணைவும் இசைவும் அமைந்திருக்கின்றது என்றால், வேறொரு புறத்தில் பல பண்டிகைகள் இயற்கையைப் பாதுகாக்கவே கொண்டாடப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, பிஹார் மாநிலத்தின் மேற்கு சம்பாரணில் பல நூற்றாண்டுகளாகவே தாரு பழங்குடியின மக்கள் 60 மணிநேரம் வரையிலான ஊரடங்கு அல்லது அவர்களது சொற்களில் இதை விவரிக்க வேண்டுமென்றால், ’60 மணிநேர காப்பு’ என்ற வழிமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இயற்கைப் பாதுகாப்புக்காக வேண்டி இந்தக் காப்புமுறையை தாரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகவே மாற்றி இருக்கிறார்கள், பல நூற்றாண்டுக்காலமாகவே இதைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இதன்படி யாரும் கிராமத்திற்குள் வருவதுமில்லை, யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதுமில்லை, அப்படி யாராவது வெளியே வந்தார்கள் என்றாலோ, வெளியிலிருந்து ஒருவர் கிராமத்திற்குள் நுழைந்தார் என்றால் அவர்களின் வருகையால் அல்லது செய்கையால் மக்களின் அன்றாட வழிமுறைகள் காரணமாக, புதிய செடிகொடிகளுக்குத் தீங்கு ஏற்படலாம். இந்தக் காப்பு முறையின் தொடக்கத்தில் நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுகிறார்கள், பிறகு இது முடிந்த பிறகு பழங்குடியின பாரம்பரிய இசை, பாடல்கள், நடனம் ஆகியவற்றில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டாடும் நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.

நண்பர்களே, இந்த வாரத்தில் ஓணம் பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இந்தப் பண்டிகை சிங்கம் மாதத்தில் வருகிறது. இந்தக் காலத்தில் மக்கள் புதியனவற்றை வாங்குகிறார்கள், தங்கள் இல்லங்களை அலங்காரம் செய்கிறார்கள், பூக்களால் கோலம் வரைகிறார்கள், ஓணம் சாத்யாவை ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள், பலவகையான விளையாட்டுக்கள்-போட்டிகளும் நடைபெறுகின்றன. ஓணம் பண்டிகையின் கொண்டாட்டங்கள் இப்போதெல்லாம் தொலைவுகளில் இருக்கும் அயல்நாடுகளையும் சென்றடைந்திருக்கின்றன. அமெரிக்காவாகட்டும், ஐரோப்பாவாகட்டும், வளைகுடா நாடுகளாகட்டும், ஓணம் பண்டிகையின் உற்சாகம் உங்களுக்கு அனைத்து இடங்களிலும் காணக் கிடைக்கும். ஓணம் ஒரு சர்வதேசப் பண்டிகையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே, ஓணம் நமது விவசாயத்தோடு தொடர்புடைய பண்டிகை. இது நமது விவசாயப் பொருளாதாரத்துக்கு ஒரு புதிய தொடக்ககாலம். விவசாயிகளின் ஆற்றலால் மட்டுமே நமது வாழ்க்கை, நமது சமூகம் ஆகியன இயங்குகின்றன. நமது பண்டிகைகள், விவசாயிகளின் கடும் உழைப்பால் மட்டுமே வண்ணம் பெறுகின்றன. நமக்கெல்லாம் உணவு படைப்பவர்களையும், விவசாயிகளின் உயிரளிக்கும் சக்தியையும் மிக உயர்வான வகையில் போற்றுகின்றன நமது வேதங்கள்.

அன்னானாம் பதயே நம:, க்ஷேத்ராணாம் பதயே நம: என்கிறது ரிக்வேத மந்திரம். இதன் பொருள் என்னவென்றால், நமக்கெல்லாம் அன்னமளிப்பவர்களை நாம் போற்றுவோம், விவசாயிகளை நாம் போற்றுவோம் என்பதேயாகும். நமது விவசாயிகள், கொரோனா நிலவும் இந்தக் கடினமான சூழ்நிலைகளிலும் தங்களது ஆற்றலை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நமது நாட்டில் இந்த முறை முன்பட்டப் பயிர் விதை நடவை, கடந்த ஆண்டை விடவும் 7 சதவீதம் அதிகம் செய்திருக்கிறார்கள்.

நெல்வகை விதைகள் இந்த முறை கிட்டத்தட்ட 10 சதவீதமும், பருப்புவகைகள் சுமார் 5 சதவீதமும், தானியங்கள் விதைகள் சுமார் 3 சதவீதமும், எண்ணெய் வித்துக்கள் சுமார் 13 சதவீதமும், பருத்தி சுமார் 3 சதவீதமும் அதிகம் நடவு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் பொருட்டு நான் நாட்டின் விவசாயிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், அவர்களின் உழைப்பைப் போற்றுகிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, கொரோனாவின் இந்தக் காலகட்டத்தில் நாடு பல முனைகளில் ஒரே நேரத்தில் போராடி வருகிறது. ஆனால் இதோடு கூடவே, இத்தனை நீண்ட காலமாக வீட்டில் முடங்கிக் கிடந்த காரணத்தால், எனது சின்னஞ்சிறு நண்பர்கள் தங்கள் நேரத்தை எப்படி கழித்திருப்பார்கள் என்ற வினாவும் மனதில் கூடவே எழுகிறது. இந்தச் சின்னஞ்சிறார்களைக் கருத்தில் கொண்டு, உலகிலேயே வித்தியாசமான வழிமுறையான காந்திநகரில் இருக்கும் சிறுவர் பல்கலைக்கழகம், இந்திய அரசின் பெண்கள் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம், கல்வி அமைச்சகம், குறு-சிறு-மத்தியரகத் தொழில் அமைச்சகம் ஆகியன இணைந்து சிறார்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய கருத்தாய்வும் அலசலும் மேற்கொண்டார்கள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது, பயனளிப்பதாக இருந்தது ஏனென்றால் ஒரு வகையில் இது எனக்கு ஒரு புதிய தகவலை அளித்தது, புதியனவற்றைக் கற்கும் சந்தர்ப்பத்தை அளித்தது.

நண்பர்களே, எங்கள் கருத்தாய்வின் விஷயம் என்னவென்றால், விளையாட்டுப் பொருட்கள், குறிப்பாக இந்திய விளையாட்டுப் பொருட்கள். இந்திய நாட்டுக் குழந்தைகளுக்குப் புதியபுதிய விளையாட்டுப் பொருட்களை எப்படி அளிப்பது, இந்தியா, விளையாட்டுப் பொருட்களின் மையப்புள்ளியாக எப்படி ஆவது என்பதே நாங்கள் இந்த முறை மேற்கொண்ட கருத்தாய்வு. இந்த மனதின் குரலைக் கேட்ட பிறகு விளையாட்டுப் பொருட்களுக்கான புதிய கோரிக்கையை ஒருவேளை அவர்கள் கேட்க நேரலாம், இதற்காக முன்கூட்டியே மனதின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்.

நண்பர்களே, விளையாட்டுப் பொருட்கள் செயல்பாட்டை அதிகரிப்பவனவாக இருக்கும் அதே வேளையில் இவை நமது அபிலாஷைகளுக்கும் சிறகு கட்டி விடுகின்றன. விளையாட்டுப் பொருட்கள் மனதுக்கு மட்டும் மகிழ்ச்சியை அளிப்பதில்லை, மாறாக அவை மனதை செம்மைப்படுத்துவதிலும், நோக்கத்தை ஆழப்படுத்துவதிலும் துணை புரிகின்றன. எங்கோ படித்த ஞாபகம்…… விளையாட்டுப் பொருட்கள் தொடர்பாக குருதேவ் ரவீந்திரநாத் டகோர் என்ன கூறியிருக்கிறார் என்றால், எந்த விளையாட்டுப் பொருள் முழுமையடையாமல் இருக்கிறதோ, அதுவே சிறந்தது என்று அவர் கூறியிருக்கிறார். முழுமையடையாத விளையாட்டுப் பொருள், இதைத் தங்கள் விளையாட்டுக்களின் போது குழந்தைகள் இணைந்து நிறைவு செய்ய வேண்டும். அவரது சிறுபிராயத்தில் அவர் தனது கற்பனையில் முளைத்த, வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு, தனது நண்பர்களோடு இணைந்து, தனது விளையாட்டுக்களையும் விளையாட்டுப் பொருட்களையும் உருவாக்கினாராம். ஆனால் ஒரு நாள், குழந்தைப்பருவ அந்த ஆனந்தமான கணங்களில் பெரியவர்களின் தலையீடு ஏற்பட்டது. என்ன நடந்தது என்றால், அவருடைய ஒரு நண்பர், ஒரு பெரிய, அழகான அயல்நாட்டுப் பொம்மையைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் இதைக் குறித்து பீற்றிக் கொண்டிருக்கும் வேளையில், பிற நண்பர்களின் முழுக்கவனமும் மெல்ல மெல்ல விளையாட்டை விட அந்தப் பொம்மையின் மீது விழத் தொடங்கியிருக்கிறது. அனைவரின் கவனமும் அப்போது விளையாட்டை விடவும் பொம்மையின் மீதே அமைந்திருந்தது. எந்தச் சிறுவன் நேற்றுவரை அனைவரோடும் விளையாடி வந்தானோ, அனைவரோடும் இருந்தானோ, இணைந்து விளையாடினானோ, அந்தச் சிறுவன் இப்போது விலக ஆரம்பித்தான். ஒருவகையில் பிற சிறுவர்களிடமிருந்து வேற்றுமை உணர்வை அவன் உணரத் தலைப்பட்டான். விலைமதிப்பான பொம்மையில் விளையாடவும் ஏதுமில்லை, கற்றுக் கொள்ளவும் ஒன்றுமில்லை. அதாவது கவரக்கூடிய ஒரு பொம்மை, சிறப்பான ஒரு சிறுவனை அழுத்தி விட்டது, மறைத்து விட்டது, உதிரச் செய்து விட்டது. இந்தப் பொம்மையானது செல்வத்தை, பணத்தை, தான் உயர்வானவன் என்ற உணர்வை வெளிப்படுத்திய அதே வேளையில், அந்தச் சிறுவனின் படைப்பாற்றல் உணர்வை அதிகப்படுத்தி, மலர்வதற்கும் தடை போட்டது. பொம்மை என்னவோ வந்து விட்டது, ஆனால் விளையாட்டு நின்று போனது, குழந்தைகள் மலர்வதும் தேங்கிப் போனது. ஆகையால் குருதேவ் கூறினார், விளையாட்டுப் பொருட்கள் சிறார்களின் குழந்தைத்தனத்தை வெளிக் கொண்டு வர வேண்டும், அவர்களின் படைப்புத் திறனை மலரச் செய்ய வேண்டும் என்றார். குழந்தைகளின் வாழ்க்கையில் பலவகையான கட்டங்களில் விளையாட்டுப் பொருட்கள் ஏற்படுத்தும் தாக்கம் மீது தேசிய கல்விக் கொள்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது. விளையாட்டுக்களின் ஊடேயே கற்றல், விளையாட்டுப் பொருட்கள் உருவாக்குவதைக் கற்றல், விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்களுக்குச் செல்லுதல் ஆகியவை அனைத்தும் பாடத்திட்டத்தில் இடம் பெறுகின்றன.

நண்பர்களே, நமது நாட்டிலே விளையாட்டுப் பொருட்கள் தொடர்பான ஒரு மிக வளமான பாரம்பரியம் உண்டு. பல திறன் படைத்த, திறமைசாலிக் கைவினைஞர்கள் உண்டு. இவர்கள் சிறப்பான விளையாட்டுப் பொருட்களை வடிவமைப்பதில் வல்லுநர்கள். இந்தியாவில் சில இடங்கள் Toy Clusters அதாவது விளையாட்டுப் பொருட்களின் மையங்கள் என்ற வகையில் மேம்பாடு அடைந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, கர்நாடகத்தின் ராமநகரத்தில் உள்ள சன்னபட்னா, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணாவில் இருக்கும் கொண்டப்பள்ளி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர், அஸாமின் துப்ரி, உத்திர பிரதேசத்தின் வாராணசி என இப்படிப்பட்ட இடங்கள் பலவற்றைக் கூறலாம். உலக அளவிலான விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில், ஏழு இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான பெறுமானமுடையது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால் இந்த ஏழு இலட்சம் கோடி ரூபாய்கள் என்ற இத்தனை பெரிய வியாபாரத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவானது. எந்த நாட்டிடம் இத்தனை வளமான மரபும். பாரம்பரியமும், பன்முகத்தன்மையும், இளையவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறதோ, அங்கே சந்தையில் அவர்களின் பங்கு மிகவும் குறைவாக இருப்பதைப் பார்க்கும் போது நன்றாகவா இருக்கிறது? கண்டிப்பாக இல்லை. இதைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன், உங்கள் மனதிலும் ஏமாற்றமே மிஞ்சும். பாருங்கள் நண்பர்களே, விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில் மிகவும் பரந்து பட்டது. குடிசைத் தொழிலோ, குறு-சிறு தொழிலோ, MSMEக்களோ, கூடவே பெரிய தொழில்களோ, தொழில் முனைவோரோ அனைவரும் இதன் வட்டத்திற்குள் வருகிறார்கள். இதை முன்னெடுத்துச் செல்ல நாட்டில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சி.வி. ராஜு அவர்களையே எடுத்துக் கொள்வோமே!! அவருடைய கிராமத்தின் ஏட்டி கொப்பாக்கா பொம்மைகள் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமானவையாக இருந்தன. இந்தப் பொம்மைகள் மரத்தாலானவை என்பதும் இவற்றுக்கு எந்த ஒரு கூர்முனைகளும் இல்லை என்பதும் இந்தப் பொம்மைகளின் சிறப்பம்சம். இவை அனைத்துக் கோணங்களிலும் மழமழப்பாக இருப்பதால், குழந்தைகளுக்கு எந்தக் காயமும் படுவதற்கான சாத்தியக்கூறு இல்லை. சி.வி. ராஜு அவர்கள் ஏட்டி கொப்பாக்கா பொம்மைகள் தயாரிப்பின் பொருட்டு, இப்போது தனது கிராமத்தின் கைவினைஞர்களோடு இணைந்து ஒரு வகையான புதிய இயக்கத்தை முன்னெடுத்து இருக்கிறார். மிகச் சிறப்பான தரம்வாய்ந்த ஏட்டி கொப்பாக்கா பொம்மைகளைத் தயாரித்து, சி.வி. ராஜு அவர்கள், வட்டார பொம்மைகளின் இழந்த மாண்பினை மீட்டெடுத்திருக்கிறார். விளையாட்டுப் பொருட்கள் வாயிலாக நாம் இரண்டு விஷயங்களைச் செய்யலாம் – நம்முடைய பெருமைமிகு கடந்த காலத்தை நமது வாழ்க்கையில் மீண்டும் உயிர்பெறச் செய்யலாம், நமது பொன்னான எதிர்காலத்தை மேலும் மெருகேற்றலாம். நான் இதில் ஸ்டார்ட் அப் நண்பர்களை, நமது புதிய தொழில்முனைவோர்களிடம் கூறுவதெல்லாம் – Team up for toys…. வாருங்கள் இணைந்து பொம்மைகள் தயாரிப்போம். இப்போது அனைவரும் உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுக்கும் நேரம் இது. வாருங்கள், நாம் நமது சிறார்களுக்காக, புதியதொரு வகையிலான, நல்ல தரம் வாய்ந்த விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்போம். குழந்தைகளின் விளையாட்டுத்தனத்தை மலரச் செய்து மகிழ்விப்பவையே விளையாட்டுப் பொருட்கள். நாம் தயாரிக்கும் பொம்மைகள் அதே நேரத்தில் சூழலுக்கு இசைவானவையாகவும் இருக்க வேண்டும்.

நண்பர்களே, இதைப் போலவே, இப்போது கணிப்பொறியும் ஸ்மார்ட்ஃபோனும் நிலவும் இந்தக் காலகட்டத்தில், கணிப்பொறி விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இந்த விளையாட்டுக்களை குழந்தைகள் விளையாடுகிறார்கள், பெரியோரும் இதில் சளைக்கவில்லை. ஆனால் இவற்றில் பெரும்பாலான விளையாட்டுக்களின் மையக்கரு அந்நிய நாடுகளின் கலாச்சாரத்தைத் தழுவி அமைந்திருக்கின்றது. நமது நாட்டில் ஏராளமான கருத்துக்கள், எண்ணங்கள் இருக்கின்றன, நமது பாரம்பரியம் மிகவும் வளமானது. இவற்றை அடியொற்றி நம்மால் விளையாட்டுக்களை வடிவமைக்க முடியும் இல்லையா? நீங்கள் இந்தியாவிலும் விளையாட்டுக்களை வடிவமையுங்கள், இந்தியாவுக்கான விளையாட்டுக்களை வடிவமையுங்கள் என்று நான் என் இளைய திறமைசாலிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். Let the games begin! என்று கூறுவார்கள் இல்லையா, வாருங்கள், விளையாட்டுக்கள் தொடங்கட்டும்!!

நண்பர்களே, தற்சார்பு பாரத இயக்கத்தில் virtual games, மெய்நிகர் விளையாட்டுக்களாகட்டும், பொம்மைகள் துறையாகட்டும், அனைவரும் மகத்துவம் வாய்ந்த பங்களிப்பு அளிக்கக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது. இன்றிலிருந்து 100 ஆண்டுகள் முன்பாக, ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்ட வேளையில், ”ஒத்துழையாமை இயக்கமானது நாட்டுமக்களின் சுயமரியாதையையும், ஆற்றலையும் விளங்க வைக்கும் ஒரு முயற்சி” என்றார் காந்தியடிகள்.

இன்று, நமது நாட்டைத் தற்சார்பு உடையதாக நாம் ஆக்கும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் முழுமையான தன்னம்பிக்கையோடு முன்னேறிச் செல்ல வேண்டும். ஒத்துழையாமை இயக்கத்தின் வடிவில் விதைக்கப்பட்ட விதையை இப்போது தற்சார்பு பாரதம் என்ற ஆலமரமாக மாற்றியமைக்க வேண்டியது நம்மனைவரின் கடப்பாடாகும்.

என் மனம் நிறை நாட்டுமக்களே, இந்தியர்களின் புதுமைகள் படைத்தல் மற்றும் தீர்வுகள் காணல் வல்லமையைப் பற்றி அனைவரும் அறிவார்கள்; அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால், பலமடங்கு சக்தி பெருகும். இந்த மாதத் தொடக்கத்தில், நாட்டின் இளைஞர்கள் முன்னிலையில் செயலிகளில் புதுமைகள் படைத்தல் சவால் ஒன்று வைக்கப்பட்டது. இந்த தற்சார்பு பாரதச் செயலிகளில் புதுமைகள் படைத்தல் சவாலில் நமது இளைஞர்கள் மிகவும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 7000 பேர்கள் பதிவு செய்தார்கள். இவற்றிலும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு செயலிகள் இரண்டாம் அடுக்கு-மூன்றாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கி இருந்தார்கள். தற்சார்பு பாரதம் படைக்க, தேசத்தின் எதிர்காலத்திற்காக, இது மிகவும் மங்கலமான அடையாளம். தற்சார்பு நூதனமான செயலிகள் போட்டியின் முடிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக அவை உங்களிடம் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும். கணிசமான ஆய்வுக்குப் பிறகு, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, சுமார் 24 செயலிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நீங்கள் அவசியமாக இந்தச் செயலிகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள், இவற்றோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இப்படிப்பட்ட ஒன்றை ஏற்படுத்த உங்களுக்கும் உத்வேகம் பிறக்கலாம். இவற்றில் ஒரு செயலி இருக்கிறது, இதன் பெயர் Kutuki kids learning app. இது சின்னஞ்சிறார்களுக்கான ஊடாடு செயலி; இதில் பாடல்கள், கதைகள் ஆகியன வாயிலாக எளிய வகையில் குழந்தைகள் கணக்கு-அறிவியல் தொடர்பானவற்றைக் கற்றுக் கொள்ள இயலும். இதில் செயல்பாடுகளும் இருக்கின்றன, விளையாட்டும் இருக்கின்றது. இதைப் போலவே ஒரு blogging – வலைப்பதிவுத் தளம் பற்றிய செயலியும் உண்டு. இதன் பெயர் KOO, கூ. இதைப் போலவே சிங்காரி செயலி என்ற ஒன்றும் இருக்கிறது; இது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. மேலும் ஒரு செயலி உண்டு, இதன் பெயர் Ask சர்கார். இதில் chat bot வாயிலாக நீங்கள் ஊடாடலாம். இந்த chat bot என்பது மனிதர்களைப் போலவே வாடிக்கையாளருடன் பேசுவதற்கான கணினி நிரல். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு அரசுத் திட்டம் பற்றியும் சரியான தகவல்களை நீங்கள் பெறலாம், அதுவும் எழுத்து வடிவத்தில், ஒலி வடிவத்தில் மற்றும் காணொளி வடிவத்தில் நீங்கள் பெறலாம். இது உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். மேலும் ஒரு செயலி இருக்கிறது, இதன் பெயர் step set go, இது ஒரு உடலுறுதிக்கான செயலி. நீங்கள் எத்தனை தூரம் நடந்திருக்கிறீர்கள், எத்தனை சக்தியை எரித்திருக்கிறீர்கள் என்பன பற்றிய அனைத்துத் தரவுகளையும் கணக்கில் வைத்துக் கொள்ளும் செயலி இது. மேலும் இது உங்களை உடலுறுதியோடு வைத்துக் கொள்ள ஊக்கப்படுத்தவும் செய்கிறது. நான் உங்கள் முன்பாக வெகுசில எடுத்துக்காட்டுக்களை மட்டுமே வைத்திருக்கிறேன். மேலும் பல செயலிகளும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கின்றன. பல வணிகs செயலிகளும் இருக்கின்றன, விளையாட்டுக்களுக்கான செயலிகளும் இருக்கின்றன, எடுத்துக்காட்டாக, Is Equal to, Books & Expense, Zoho Workplace, FTC Talent போன்றன. இவை பற்றி நீங்கள் இணையத்தில் தேடிப் பாருங்கள், உங்களுக்கு அதிகத் தகவல்கள் கிடைக்கும். நீங்களும் முன்னே வாருங்கள், நூதனமான ஒன்றில் ஈடுபடுங்கள், அதைச் செயலாக்கம் செய்யுங்கள். உங்களது முயற்சி, உங்களுடைய சின்னச்சின்ன ஸ்டார்ட் அப்புகள், நாளை மிகப்பெரிய நிறுவனங்களாக மாறலாம், உலகிலே இந்தியாவுக்கான அடையாளமாக அவை ஆகலாம். இன்று உலகிலே மிகப்பெரிய நிறுவனங்களாக வலம் வருபவை அனைத்தும் ஒரு காலத்தில் ஸ்டார்ட் அப்புகள் என்ற நிலையிலிருந்தே தங்கள் பயணத்தைத் தொடங்கின என்பதை நீங்கள் மறவாதீர்கள்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நம் நாட்டின் குழந்தைகள், மாணவர்கள், தங்களுடைய முழுமையான ஆற்றலையும் வல்லமையையும் வெளிப்படுத்த மிகப்பெரிய ஒரு பங்களிப்பு அளிக்கக்கூடியது என்றால் அது ஊட்டச்சத்து தான். நாடு முழுவதிலும் செப்டெம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படும். நாட்டுக்கும் ஊட்டச்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டிலே ஒரு வழக்கு உண்டு – உணவு எப்படியோ, உள்ளமும் அப்படியே. அதாவது நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே நமது மனோ-புத்தியின் வளர்ச்சி இருக்கும் என்பதே இதன் உட்பொருள். சிசு கர்ப்பத்தில் இருக்கும் போதும், அதன் குழந்தைப் பருவத்திலும், எத்தனை சிறப்பாக ஊட்டச்சத்து அதற்குக் கிடைக்கிறதோ, அத்தனை சிறப்பான வகையில் அதன் மனவளர்ச்சி ஏற்படும், அது ஆரோக்கியமான இருக்கும். குழந்தைகளுக்கு ஊட்டம்நிறை உணவு கிடைப்பது அவசியமானது என்பதால், தாய்க்கும் சிறப்பான ஊட்டச்சத்து நிரம்பிய உணவு கிடைக்க வேண்டும். நீங்கள் என்ன உண்கிறீர்கள், எந்த அளவுக்கு உண்கிறீர்கள், எத்தனை முறை உண்கிறீர்கள் என்பது எல்லாம் ஊட்டச்சத்துக்கான விளக்கமல்ல. உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கூறுகள் எந்த அளவுக் கிடைக்கின்றன என்பது தான் முக்கியமானது. உங்களுக்கு இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து கிடைக்கிறதோ இல்லையோ, உப்புச்சத்து கிடைக்கிறதோ இல்லையோ, விட்டமின்கள் கிடைக்கிறதோ இல்லையோ என்பது அல்ல; இவை அனைத்துமே ஊட்டச்சத்தின் முக்கியமான அம்சங்கள். ஊட்டச்சத்துக்கான இந்த இயக்கத்தில் மக்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. மக்கள் பங்களிப்புத் தான் இதை வெற்றி பெறச் செய்ய இயலும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத் திசையில் கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நமது கிராமங்களில், மக்கள் பங்களிப்பு வாயிலாக இது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி வருகிறது. ஊட்டச்சத்து வாரமாகட்டும், ஊட்டச்சத்து மாதமாகட்டும், இவற்றின் வாயிலாக மேலும் மேலும் அதிக விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் இதோடு இணைக்கப்படுகின்றன, குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன, இவற்றால் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்பதன் பொருட்டு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக வகுப்பில் ஒரு class monitor, வகுப்புத் தலைவன் இருப்பதைப் போல, ஊட்டச்சத்துக் கண்காணிப்பு இருக்க வேண்டும், அறிக்கை அட்டையைப் போல ஊட்டச்சத்து அட்டை தயார் செய்யப்பட வேண்டும், இந்த மாதிரியான ஒரு வழிமுறை தொடங்கப்பட இருக்கிறது. ஊட்டச்சத்து மாதத்தில் MyGov தளத்தில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய வினாவிடை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது, இதோடு கூடவே ஒரு மீம் போட்டியும் நடைபெறும். நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள், மற்றவர்களையும் இதில் பங்கெடுக்க ஊக்கப்படுத்துங்கள்.

நண்பர்களே, குஜராத்தில் அமைந்திருக்கும் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் ஒற்றுமைச் சிலையைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கலாம்; அல்லது கோவிட் கடந்து சென்ற பிறகு அது பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படும் போது அதைக் காணும் சந்தர்ப்பம் அமையலாம். அங்கே தனித்தன்மை வாய்ந்த ஒரு ஊட்டச்சத்துப் பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டாகவே ஊட்டச்சத்து பற்றிய கல்வியை, கேளிக்கையினூடே அங்கே நம்மால் கண்டறிந்து கொள்ள முடியும்.

நண்பர்களே, பாரதம் ஒரு பரந்துபட்ட தேசம், இங்கே பலவகையான உணவுப் பழக்கங்கள் உண்டு. நமது நாட்டில் ஆறுவகையான பருவகாலங்கள் உண்டு, ஒவ்வொரு இடத்திலும் அங்கு நிலவும் பருவநிலைக்கு ஏற்ப பலவகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகையால் மகத்துவமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு இடத்திலும் பருவநிலை, அங்கே இருக்கும் வட்டார உணவு, அங்கே விளையும் உணவுப் பொருட்களுக்கு ஏற்ப, செரிவான ஊட்டச்சத்து நிரம்பிய உணவுமுறை உருவாக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறுதானிய வகைகளில் ராகி, கேழ்வரகு ஆகியன பயனுள்ள ஊட்டச்சத்து உணவு. ஒரு இந்திய விவசாய சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு வருகிறது; இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யப்படுபவை பற்றியும், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு பற்றியும் முழுமையான தகவல்கள் இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தொகுப்பாக இருக்கும். இந்த ஊட்டச்சத்து மாதத்தில் ஊட்டம் நிறைந்த உணவு மற்றும் உடல்நலம் பற்றியும் நாம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் வாருங்கள்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கடந்த சில நாட்கள் முன்பாக, நாம் நமது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடினோம். அப்போது ஒரு சுவாரசியமான செய்தி மீது என் கவனம் சென்றது. இந்தச் செய்தி நமது இரண்டு சாகசமான படைவீரர்கள் பற்றியது. ஒன்றின் பெயர் சோஃபி மற்றதன் பெயர் விதா. சோஃபியும் விதாவும் இந்திய இராணுவத்தின் பெருமிதங்கள். நாய்களான இவற்றுக்கு Chief of Army Staff க்கான பாராட்டு அட்டைகள் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன. சோஃபியும் விதாவும் தங்களுடைய நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றியமைக்கு அவற்றிற்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது. நமது இராணுவத்தில், நமது பாதுகாப்புப் படையினரிடத்தில், இப்படிப்பட்ட தைரியம் நிறைந்த நாய்கள் இருக்கின்றன, இவை நாட்டிற்காக உயிர் வாழ்கின்றன, நாட்டுக்காகவே தங்களை அர்ப்பணிக்கவும் செய்கின்றன. பல குண்டு வெடிப்புகளையும், தீவிரவாத சூழ்ச்சிகளையும் முறியடிப்பதில் இப்படிப்பட்ட நாய்கள் மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன. சில காலம் முன்பாகத் தான், நாட்டின் பாதுகாப்பில் நாய்களின் பங்குபணி குறித்து விரிவான தகவல்கள் எனக்குக் கிடைத்தன. பல சம்பவங்கள் குறித்தும் நான் கேள்விப்பட்டேன். பல்ராம் என்ற ஒரு நாய் 2006ஆம் ஆண்டிலே அமர்நாத் புனித யாத்திரைப் பாதையில் மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தது. 2002ஆம் ஆண்டிலே பாவ்னா என்ற ஒரு நாய், IED வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தது. மறைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளைத் தோண்டும் போது, தீவிரவாதிகள் அதை வெடிக்கச் செய்தார்கள், அதில் அந்த நாய் உயிர்த்தியாகம் செய்தது. 2-3 ஆண்டுகள் முன்னால், சத்திஸ்கட்டின் பீஜாபுரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினரின் மோப்ப நாயான Crackerம், ஒரு IED குண்டு வெடிப்பில் உயிர்த்தியாகம் செய்தது. சில நாட்கள் முன்பாக, பீட் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் தங்களுடைய தோழனான ராக்கி என்ற நாயிற்கு முழு மரியாதையோடு இறுதி அஞ்சலியைச் செலுத்திய உணர்ச்சிபூர்வமான ஒரு காட்சியை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். ராக்கி, 300க்கும் மேற்பட்ட சம்பவங்களில் காவல்துறையினருக்கு உதவிகரமாக இருந்தது. பேரிடர் மேலாண்மையிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் நாய்களின் பங்குபணி மிகப்பெரியது. இந்தியாவிலே, தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான NDRFஇல் பல டஜன் நாய்கள் இதற்காகவே சிறப்புப் பயிற்சிகள் பெற்றிருக்கின்றன. நிலநடுக்கம், கட்டிடம் இடிந்து விழுதல், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கும் நபர்களைத் தேடி வெளிக்கொணர்தல் ஆகியவற்றில் நாய்கள் திறமை படைத்தவைகளாக இருக்கின்றன.

நண்பர்களே, இந்தியரக நாய்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரக நாய்களில் Mudhol Houndகள், ஹிமாச்சலி ஹவுண்டுகள் இருக்கின்றன, இவை மிகவும் அருமையான ரகங்கள். ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை போன்ற மிக அருமையான இந்திய ரக நாய்கள் உண்டு. இவற்றைப் பராமரிப்பதில் அதிக செலவு பிடிப்பதில்லை, இவை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு இருக்கின்றன. நமது பாதுகாப்புப் படையினர் இந்த இந்தியரக நாய்களைத் தங்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்கள். கடந்த சில காலமாகவே இராணுவம், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, தேசியப் பாதுகாப்புக் குழு ஆகியோர் முதோல் ஹவுண்ட் ரக நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவற்றை நாய் படைப்பிரிவில் இணைத்திருக்கிறார்கள். மத்திய ரிசர்வ் காவல்துறைப் படையினர் கோம்பை ரக நாய்களை சேர்த்திருக்கிறார்கள். இந்திய விவசாய ஆய்வுக் கழகமும் இந்திய ரக நாய்கள் மீது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்தியரக நாய்களை, மேலும் சிறப்பானவையாக ஆக்குவதும், பயனுள்ளவையாக ஆக்குவதும் தான் இதன் நோக்கம். நீங்கள் இணையதளத்தில் இவை பற்றித் தேடிப் பாருங்கள், இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள், இவற்றின் நேர்த்தி, குணங்கள் ஆகியவற்றைப் பார்த்து உங்களுக்கு ஆச்சரிய உணர்வு மேலிடும். அடுத்தமுறை, நாய் வளர்ப்பு பற்றி நீங்கள் எண்ணமிடும் போது, கண்டிப்பாக இவற்றில் ஏதாவது ஒரு இந்திய ரக நாயை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள். தற்சார்பு பாரதம், மக்களின் மனங்களில் மந்திரமாக ஒலிக்கும் போது, எந்த ஒரு துறையும் இதிலிருந்து விடுபட முடியாது.

எனக்கு நேசமான நாட்டுமக்களே, சில நாட்கள் கழித்து, செப்டெம்பர் மாதம் 5ஆம் தேதியன்று நாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். நாம் நமது வாழ்க்கையின் வெற்றிகளை நமது வாழ்க்கைப் பயணத்தில் காணும் போது, நம் மனங்களில் நம்முடைய ஏதாவது ஒரு ஆசிரியர் பற்றிய நினைவு கண்டிப்பாக நிழலாடும். விரைவாக மாறிவரும் காலகட்டத்தில், கொரோனா பீடித்திருக்கும் சங்கடமான வேளையில், நமது ஆசிரியர்கள் முன்பாகவும், காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு சவால் உருவாகியிருக்கிறது. நமது ஆசிரியப் பெருமக்கள் இந்தச் சவாலை எதிர்கொள்ள மட்டும் செய்யவில்லை, இதை ஒரு நல்வாய்ப்பாகவே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. படிப்பில் தொழில்நுட்பத்தை எத்தனை அதிக அளவு பயன்படுத்தலாம், புதிய வழிமுறைகளை எப்படிக் கையாளலாம், மாணவர்களுக்கு எப்படி உதவிகரமாக செய்யலாம், இதை மிக இயல்பான, எளிமையான வகையிலே நமது ஆசிரியப் பெருமக்கள் கையாண்டார்கள், தங்கள் மாணவர்களுக்கும் இதைக் கற்பித்தார்கள். இன்று நாட்டில், அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு புதுமை படைத்தல் சம்பவம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து, புதியதாக ஏதோ ஒன்றைப் புரிந்து வருகிறார்கள். நாட்டில் புதிய கல்விக் கொள்கை வாயிலாக நிகழவிருக்கும் ஒரு பெரிய மாற்றத்தின் ஆதாயங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நமது ஆசிரியர்கள் பெரும்பங்கு வகிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.

நண்பர்களே, மேலும் குறிப்பாக எனது ஆசிரிய நண்பர்களே, 2022ஆம் ஆண்டில் நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாட இருக்கிறது. சுதந்திரம் அடையும் முன்பாக பல ஆண்டுகள் வரை நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு என மகத்தான வரலாறு உண்டு. இந்த வேளையில் நாட்டின் அனைத்து மூலைமுடுக்கெங்கிலும் விடுதலை வேட்கை நிரம்பியவர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து, தங்கள் உடல்-பொருள்-ஆவியனைத்தையும் தியாகம் செய்தார்கள். நமது இன்றைய தலைமுறையினர், நமது மாணவர்கள் ஆகியோருக்கு சுதந்திரப் போராட்டத்தில் நமது நாட்டின் நாயகர்கள் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும், அதை அவர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பது மிக அவசியமானது. தங்களுடைய மாவட்டங்களில், தங்களுடைய பகுதிகளில், சுதந்திரப் போராட்டக்காலத்தில் என்ன நடந்தது, எப்படி நடந்தது, யாரெல்லாம் உயிர்த்தியாகம் செய்தார்கள், யாரெல்லாம் எத்தனை காலம் வரை சிறையில் கிடந்து வாடினார்கள் என்ற விவரங்களை நமது மாணவர்கள் தெரிந்து கொண்டால், அவர்களுடைய ஆளுமையிலும் இதன் தாக்கம் தென்படும். இதன் பொருட்டு நீங்கள் மிகப்பெரிய பங்காற்ற முடியும், இதில் ஆசிரியர்களான உங்களுடைய பங்களிப்பு மகத்தானது. அதாவது நீங்கள் சார்ந்திருக்கும் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக சுதந்திரப் போராட்டம் நடந்திருக்கும், இந்தப் போஎராட்டத்தில் அங்கே பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கும், இல்லையா? இதைப் பற்றி மாணவர்கள் வாயிலாக ஆய்வு மேற்கொள்ளலாம். இதைப் பள்ளிக்கூடத்தில் கையெழுத்துப் பிரதியாக தயார் செய்து கொண்டு, உங்கள் நகரத்தில் சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்பு கொண்ட ஏதாவது ஒரு இடத்திற்கு, மாணவ மாணவியரைக் கூட்டிச் செல்லலாம். அந்தந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், நாடு சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுக்காலத்தில், தங்களுடைய பகுதியில் சுதந்திரத்தின் 75 நாயகர்கள் பற்றிய கவிதைகளை எழுதுவோம், நாடகங்களை எழுதுவோம் என்று தீர்மானம் செய்து கொள்ளவும். நாட்டில் ஆயிரக்கணக்கான, அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட நாயகர்கள் ஏராளமானோர், நாட்டுக்காகத் தியாகங்கள் புரிந்தவர்கள், கால ஓட்டத்தில் மறைந்து போனவர்கள் இருக்கின்றார்கள், அவர்களைப் பற்றி நீங்கள் உலகறியத் தெரிய வையுங்கள். இதுதான் நாம் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், அவர்களுக்கு நாம் அளிக்கும் மெய்யான நினைவஞ்சலிகளாக இருக்கும். செப்டம்பர் மாதம் 5ஆம் தேதியன்று நாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், இதற்கான ஒரு சூழலை நாம் ஏற்படுத்துவோம், அனைவரையும் இணைப்போம், இதை நாமனைவரும் இணைந்து செய்வோம் என்று நான் ஆசிரிய நண்பர்களிடம் வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, நாடு இன்று மேற்கொண்டிருக்கும் வளர்ச்சிப் பயணத்தின் வெற்றி எப்போது இனிமையானதாக இருக்கும் தெரியுமா? நாட்டுமக்கள் அனைவரும் இதில் இடம்பெற வேண்டும், இந்தப் பயணத்தில் அவர்கள் பயணிகளாக வேண்டும், இந்தப் பாதையில் நடைபோடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும், அப்போது தான் இனிமை நிறையும். ஆகையால், நாட்டுமக்கள் அனைவரும் ஆரோக்கியத்தோடு இருப்பதும், சுகமாக இருப்பதும், நாமனைவரும் இணைந்து கொரோனாவை முழுமையாக முறியடிப்பதும் மிக அவசியமான ஒன்று. நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே கொரோனாவை வீழ்த்த முடியும். ஒரு மீட்டர் இடைவெளி, முகக்கவசம் நீ அணி என்ற உறுதிப்பாட்டைப் பின்பற்றுங்கள். நீங்கள் நல்ல உடல்நலத்தோடு இருங்கள், சுகமாக இருங்கள், என்ற இந்த நல்வாழ்த்துக்களோடு விடைபெறுகிறேன், அடுத்த மனதின் குரலில் நாம் சந்திப்போம்.

பலப்பல நன்றிகள், வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.