நத்தம் விஸ்வநாதனுக்கு அ.தி.மு.க.வில் 2 பதவி: ஜெயலலிதா உத்தரவு

0

சென்னை:அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதில் மாநில அமைப்பு செயலாளர்கள், செய்தித்தொடர்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் புதிதாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. குறிப்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பதவியும் பறிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நத்தம் விஸ்வநாதனுக்கு அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளர் பதவி மற்றும் செய்தி தொடர்பாளர்கள் குழு பட்டியலிலும் சேர்த்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் புதன்கிழமை (நேற்று) முதல் இணைத்துக் கொள்ளப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நாமக்கல் மாவட்ட செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான பி.தங்கமணி, கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஆகியோர் புதன்கிழமை (நேற்று) முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

அ.தி.மு.க.வினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.