நடிகர் சங்க வரவு செலவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும்: பொதுச்செயலாளர் விஷால் பேட்டி

0

தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் அனைத்து உறுப்பினர்கள் குடும்பங்களுக்கும் தீபாவளி பரிசாக புது துணிமணிகள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்க முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று நடிகர் சங்க வளாகத்தில் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில், நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தலைவர் நாசர் மற்றும் பொதுச்செயலாளர் விஷால் இருவரும் சேர்ந்து தீபாவளி பரிசுகளை வழங்கினர்.

விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது , அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் , இந்த தீபாவளியை அனைவரும் மாசற்ற தீபாவளியாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நடிகர் சங்கத்தில் எங்களுக்கு டீ வேண்டும் என்றால் கூட எங்களுடைய காசில் தான் நாங்கள் வாங்கி சாப்பிட வேண்டும். அந்த அளவுக்கு நாங்கள் சிக்கனமாக நடிகர் சங்கத்தில் இருந்து வருகிறோம். இந்த தீபாவளிக்கும் சென்ற தீபாவளியை போன்று சிறப்பாக அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது அதற்க்கு முக்கிய காரணம் நமது நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி, சுந்தர்.சி , குஷ்பூ, நடிகர் பாபி சிம்ஹா , சூரி ஆகியோர் தான். நாடக நடிகர்கள் பலர் நாங்களும் நிர்வாகத்துடன் இணைந்து தீபாவளி பரிசு வழங்குகிறோம் என்று கூறி எங்களிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் அவ்வாறு கூறியது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றார் தலைவர் நாசர்.  மேலும் நாங்கள் சிக்கன செலவுகளுடன் தான் சங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

அதன்பின்னர், பொதுச்செயலாளர் விஷால் பேசும்போது, ஒருவருடம் எப்படி சென்றது என்று தெரியவில்லை, பல நல்ல விஷயங்களை செய்யவேண்டும் என்கிற அடிப்படையில் செயல்பட்டோம். இந்த வருடமும் அதே போல் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்து அதன்படி செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்.

தீபாவளிக்கு அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற வருடம் கொடுத்தது போல் இந்த வருடமும் அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்த ராம்ராஜ் நிறுவனத்தினருக்கு நன்றி. பொருளாளர் கார்த்தி , நடிகர் பாபி சிம்ஹா , சூரி ஆகியோரும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்தனர். ராம்ராஜ் நிறுவனத்தினரின் உதவியால் தான் நாங்கள் இப்போது நடிகர்சங்கத்தின் 3000 உறுப்பினர்களுக்கு வேஷ்டி சட்டையை வழங்கியுள்ளோம். நாங்கள் ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் செய்துள்ளோம் என்று கூறுபவர்கள் எங்கள் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி பணத்தை செலவழிக்க வேண்டாம். நாளை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ஸ்டார் கிரிக்கெட் பற்றிய அனைத்து தகவலையும் நடிகர் சங்கத்தின் இணையதளம் மூலம் அனைவரின் பார்வைக்கும் வெளியிடுவார். இதை பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை முதல் பார்க்கலாம்.

சங்கத்தில் அனுபவம் நிறைந்த மூத்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அனுபவத்தை கருத்தில் கொண்டு நல்லது செய்ய வேண்டும் என்றால் இளைஞர்கள் தான் முன் வந்து செய்ய வேண்டும். அந்த வகையில்தான் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

2016 நவம்பர் 27-ந்தேதி நடைபெற இருக்கின்ற பொதுக்குழுவில் பல எதிர்கால திட்டங்களை வெளியிட உள்ளோம்.

தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் விரைவாக குணமடைய நாங்கள் இறைவனை பிராத்திக்கிறோம் என்றார் விஷால்.

விழாவில் நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் பேசியது , அனைவரும் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்ட நிதி திரட்ட சங்கத்தின் பொது செயலாளர் விஷால் மற்றும் பொது செயலாளர் கார்த்தி எப்போது இனைந்து நடிப்பார்கள் என்று எல்லோரும் கேள்வி எழுப்புகிறார்கள் ??.. அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து தான் நடிகர் சங்கத்துக்கு நிதி அளிக்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் இருவரும் நடிகர் சங்கத்தின் வளர்ச்சி மீது அதிகம் கவனம் செலுத்துபவர்கள். அவர்கள் இருவரும் தனித்தனியாக படத்தில் நடித்து அவர்கள் பெறும் சம்பளத்தில் நடிகர் சங்கத்துக்கு நிதி அளித்தால் போதும். அப்படி நடிகர் சங்கம் ஒரு படம் தயாரித்தால் அதில் ஸ்டார் கிரிக்கெட்டில் பங்கேற்றது போன்று நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களான நடிகர்கள் அனைவரும் நடிப்பார்கள். ஜனவரி மாதம் நடிகர் சங்க கட்டிடடத்தின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும் என்று தெரிவித்தார்.

விழாவில் நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ் பேசியது , சென்ற ஆண்டு அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கியது போன்று இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பொது வாழ்க்கை என்று வந்தால் விமர்சனம் வர தான் செய்யும் , அதில் எது உண்மை என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்  கருணாஸ். ​

​​இவ்விழாவில் மூத்த நடிகர் நடிகைகளான சரஸ்வதி , கமலா , மணிஐயா , ஜெய்பாலையா , ஜெயராமன் ,டி.கே.எஸ். நடராஜன் மற்றும் 500 மேற்பட்ட உறுப்பினர்கள் தீபாவளி பரிசை பெற்று கொண்டனர். சிறப்பு விருந்தினர்களான நடிகர் ராஜ் கிரண் , இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் இதனை வழங்கினர். இவ்விழாவில் ​
​செயர்க்குழு உறுப்பினர்கள் குட்டி பத்மினி, ஸ்ரீமன், உதய, பசுபதி, விக்னேஷ், ராஜேஷ், ஜூனியர் பாலய்யா, அயூப்கான், பிரேம், தளபதி தினேஷ், T.P.கஜேந்திரன், சிவகாமி , பாலதண்டபாணி, எம்.ஈ. பிரகாஷ், நியமன செயர்க்குழு உறுப்பினர்கள்  லலிதகுமாரி, மனோபாலா, ஹேமச்சந்திரன், அஜய்ரத்தினம்,  ஜெரால்டு , வேலூர் வாசுதேவன், மற்றும் நடிகைகள் ரோகினி ,நீலிமா ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தமிழக முதல்வர் நலம் பெற பிராத்தனை செய்யப்பட்டது.