த.வெ.க. கொடியை மதுரை மீனாட்சியம்மன் காலடியில் வைத்து பூஜை செய்த நடிகர் சௌந்தரராஜா.. பூஜை செய்த கொடியை நடிகர் விஜய்க்கு கொடுக்கப் போவதாக பேட்டி..!
சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. அதன் தொடர்ச்சியாக அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் நடித்திருந்தார்.
நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நேற்று காலை அறிமுகம் செய்து வைத்தார். இதை கொண்டாடும் விதமாக நடிகர் சௌந்தரராஜா, அவர்மீது உள்ள பாசத்தின் காரணமாக, அவரின் அன்புதம்பியும், மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக அறக்கட்டளை சார்பாகவும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை தனது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து சென்று, அங்குள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வைத்து விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சணையும், பூஜையும் செய்து, கட்சி கொடியை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய்யிடம் வழங்க முடிவு செய்துள்ளார். மேலும், விஜய் மற்றும் அவர் துவங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோவிலில் வேண்டினார்.
சிறப்பு பூஜையை தொடர்ந்து நடிகர் சௌந்தரராஜா மதுரை மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி அறிமுகத்தை கொண்டாடும் வகையில், இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மீது தான் கொண்டுள்ள தீரா அன்பு மற்றும் தமிழக மக்கள் மீது தலைவர் விஜய் வைத்துள்ள பேரன்பின் வெளிப்பாடாக நடிகர் சௌந்தரராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியதாக தெரிவித்தார்.