த.வெ.க. அரசியல் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!

0
315

த.வெ.க. அரசியல் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். எந்தவொரு கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார்.

ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார். அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளை விஜய் வழங்க இருக்கிறார். அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டு உள்ளார். இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை, உட்கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக கட்சியினருடன் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என கூறப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இறுதியாக, கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார் என தகவல் தெரிவித்தது.

இந்நிலையில், கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என இன்று காலை தகவல் வெளியானது. இதன்படி, நீட் தேர்வு ரத்து, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என தகவல் தெரிவித்தது. சாதிவாரி கணக்கெடுப்பு, கால நிர்ணயம் செய்து மதுக்கடைகளை மூடுவது, தமிழக மின் கட்டண விவகாரம் மற்றும் கல்வியை மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

தமிழக ஆளுனரை கண்டித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டது. த.வெ.க. மாநாட்டுக்கு வந்தபோது உயிரிழந்த 6 பேருக்கு இரங்கல் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசையும், மத்திய அரசையும் வரவேற்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும். தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு மற்றும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மின்கட்டண வசூலானது, மாதாந்திர கணக்கீட்டு முறையின்படி அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றாத சூழல் உள்ளது. இதனை நிறைவேற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என தகவல் தெரிவித்தது.

இந்நிலையில் த.வெ.க. அரசியல் கூட்டத்தில், பல்வேறு விசயங்களை குறிப்பிட்டு இன்று நண்பகல் அளவில் தீர்மானங்கள் நிறைவேறின. இதன்படி, கழக மாநாடுக்கு வரும்போது உயிர் இழந்த நபர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், தமிழ் மொழி சார்ந்த விசயங்களில் தலையிட ஒன்றிய அரசுக்கு உரிமை இல்லை. மதுக்கடைகளை மூடி விட்டு அரசின் வருவாய்க்கு மாற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மும்மொழி கொள்கையை திணிக்கும் முயற்சி நிறைவேறாது. மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் மும்மொழி கொள்கை நிறைவேறாது. இரு மொழி கொள்கைக்கு எதிராக 3-வது மொழியை திணிக்க முயலும் கனவு நிறைவேறாது. இதில் தலையிட, ஒன்றிய அரசுக்கோ, ஒன்றிய அரசின் பிரதிநிதிகளுக்கோ உரிமையில்லை.

தமிழக மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றுகிறது என கூட்டத்தில் கூறப்பட்டது. மாநில தன்னாட்சி உரிமை குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். மதுக்கடைகளை மூடி விட்டு அரசின் வருவாய்க்கு மாற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சாதிவாரி கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசை காரணம் காட்டும் தமிழக அரசுக்கு கண்டனம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மாநில அரசு பட்டியலில் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின.

இதேபோன்று, மின்சார கட்டணத்திற்கு மாதம் ஒரு முறை கணக்கெடுப்பு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து விட்டு தற்போது வரை அதனை செய்யாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கால நிர்ணயம் செய்து மது கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.