தை அமாவாசை: ஆதிசேதுவில் நீராடுங்க!

0

தை அமாவாசை: ஆதிசேதுவில் நீராடுங்க!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் சிவன் வேதாரண்யேஸ்வரர் என்ற பெயரில் அருளுகிறார். கடற்கரை தலமான இங்குள்ள ஆதிசேது தீர்த்தத்தில் தை அமாவாசையன்று நீராடுவது சிறப்பு.
தல வரலாறு: சிவபூஜை செய்ய விரும்பிய ரிக், யசூர்,சாம, அதர்வண வேதங்கள் மனித வடிவெடுத்து, பூலோகத்தில் இருந்த ஒரு சிவன் கோவிலை அடைந்தனர். புஷ்பவனம் என்னும் ஊரில் மலர்த்தோட்டம் அமைத்து, சிவபூஜைக்கு தேவையான மலர்களை அங்கிருந்து பறித்தனர். இந்த நிலையில்,
பூலோகத்தில் கலியுகம் தோன்றியது ”இனி உலகில் நல்லதற்கு காலமில்லை. வேதங்களான எங்களை யாரும் மதிக்க மாட்டார்கள். எங்களைப்பற்றி தெரிந்து கொள்ளக் கூட விரும்ப மாட்டார்கள். அதனால் இங்கிருந்து புறப்படுகிறோம்,” என சிவனிடம் சொல்லிவிட்டு, தாங்கள் பூஜித்த சிவன் கோவிலின் பிரதான வாசலை அடைத்து விட்டுப் புறப்பட்டன. வேதங்களை தமிழில் ‘மறை’ என்பர். அவர்கள் காட்டில் இருந்ததால் இவ்வூர் ‘மறைக்காடு’ என பெயர் பெற்றது. இதனால் இந்த சிவனுக்கு ‘மறைக்காட்டீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஆனாலும், இத்தலத்தைச் சுற்றிலும் உள்ள மரங்களின் வடிவில், வேதங்கள் சிவனை இன்றும் வழிபடுவதாகக் கருதப்படுகிறது. வேதம் வழிபட்டதால் சுவாமிக்கு வேதாரண்யேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
அம்பிகையை வேதநாயகி என்றும், மறைநாயகி என்றும் அழைப்பர். சக்தி பீடங்களில் இது சுந்தரி பீடம் என போற்றப்படுகிறது. வேதாரண்யத்தை ‘வேதம்+ஆரண்யம்’ என்று பிரிக்க வேண்டும். ‘ஆரண்யம்’ என்றால் காடு.
பாட்டால் திறந்த கதவு: பிரதான வாசலை வேதங்கள் அடைத்துச் சென்று விட்டதால், பிற்காலத்தில் பக்தர்கள் கோவிலுள்ள திட்டி வாயில் என்னும் பக்கவாசல் வழியாக வந்து சிவனை வழிபட்டனர். அப்போது இங்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் தேவாரப் பதிகம் பாடி,
பிரதான கதவை திறக்கவும், அடைக்கவும் வகை செய்தனர்.
வீணை இல்லாத சரஸ்வதி: இங்குள்ள வேதநாயகி அம்மனின் குரல் வளம் வீணையை விட இனிமையானது என்பதால் ‘யாழைப் பழித்த மொழியாள்’ என்று போற்றப்படுகிறாள். வடமொழியில் ‘வீணாவாத விதூஷிணி’ என்று இவளுக்குப் பெயர். இதனடிப்படையில் இங்குள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் தவக்கோலத்தில் சுவடியை மட்டும் ஏந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற கோவில்களில் வடக்கு நோக்கி இருக்கும் துர்க்கை, இத்தலத்தின் இங்கு தென் திசை நோக்கி இருக்கிறாள். புன்முறுவலுடன் காட்சிதரும் இவள் இத்தலத்தின் காவல் தெய்வமாகத் திகழ்கிறாள். தெற்கு என்பது எமதிசை. இவளை வணங்குவோரை அணுக எமனும் அஞ்சுவான் என்பதால், மரணப்படுக்கையில் உள்ளவர்களைக் காப்பாற்ற இவளை வணங்கி வரலாம்.
சப்தவிடங்கம்: முசுகுந்த சக்கரவர்த்தி என்பவருக்கு இந்திரன் சப்த விடங்கம் எனப்படும் ஏழு தியாகராஜ விக்ரகங்களை வழங்கினான். அதில் பிரதான சிலை திருவாரூரில் உள்ளது. இரண்டாவது விக்ரகம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவே இதை சப்தவிடங்கத்தலம் என்பர்.
அமாவாசை தீர்த்தம்:இங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடிய பலன் உண்டாகும். பிரம்மஹத்தி (கொலைப்பாவம்) போன்ற தோஷம் நீங்கும். பல ஆண்டுகள் யோகம், தானம், தவம் செய்த பலன் கிடைக்கும். இக்கோவிலுக்கு எதிரே உள்ள கடல் ஆதி சேது தீர்த்தம் எனப்படுகிறது. அதாவது இது ராமேஸ்வரத்திற்கும் முந்தியதாக உள்ளது என தல வரலாறு சொல்கிறது. இதில் ஒருமுறை நீராடினால் ராமேஸ்வரத்தில் நூறு தடவை நீராடியதற்கு சமம்.
இத்தீர்த்தங்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் நீராடுகின்றனர்.
இத்தலத்தில் மேற்குக் கோபுர வாசலில் உள்ள விநாயகர், ராமபிரானைத் துரத்திவந்த வீரஹத்தி என்னும் தோஷத்தை, தனது காலால் மிதித்து விரட்டியதாக தல வரலாறு கூறுகிறது. சுவாமி, அம்மன், விநாயகர் மூவருக்கும் இங்கு தனித்தனி கொடிமரம் உள்ளது. இவ்வூரில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் கோடியக்கரை தீர்த்தம் உள்ளது. இங்கும் அமாவாசையன்று நீராடி தர்ப்பணம் கொடுத்து வரலாம்.
மணக்கோல சிவன்: அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. இதனால் மூலவருக்கு மறைக்காட்டுறையும் மணாளர் என்ற பெயரும் உண்டு. கருவறையில் உள்ள லிங்கத்தின் பின்புறம், ரிஷபத்தில் சிவபார்வதி மணக்கோலத்தில் எழுந்தருளியுள்ளதைக் காணலாம். 63 நாயன்மார்களுக்கும், பத்து தொகையடியார்களுக்கும் சிலைகள் உள்ளன. மனு, மாந்தாதா, தசரதன், ராமன், பஞ்சபாண்டவர், மகாபலி ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். சிவனுக்குரிய 16 சபைகளில் தேவ பக்த சபை என இத்தலம் கருதப்படுகிறது. புகழ் பெற்ற கோளறு பதிகம் எனப்படும் நவக்கிரக தோஷ நிவர்த்தி பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கு வந்து தான் பாடினார். தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும், இக்கோவிலின் பதிகம் இடம் பெற்றுள்ளது.
மேலக்குமரர் என அழைக்கப்படும் இத்தல முருகன் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர்
இவ்வூரில் பிறந்தவர்.
இருப்பிடம் : நாகபட்டினத்தில் இருந்து 45 கி.மீ., திருவாரூரில் இருந்து 69 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 11:00, மாலை 5:00 – இரவு 8:30 மணி
தொலைபேசி: 04369 – 250 238.