தைரியம் இருப்பதால் பா.ஜனதா தனித்து போட்டி- வாக்களித்த பிறகு குஷ்பு பேட்டி

0
48

தைரியம் இருப்பதால் பா.ஜனதா தனித்து போட்டி- வாக்களித்த பிறகு குஷ்பு பேட்டி

பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 126ல் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மந்தைவெளி வார்டு எண் 126ல் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கூறியதாவது:- எங்கள் பகுதியில் யாரும் எந்த வேலையும் செய்வதில்லை என்று மக்கள் பிரதிநிதிகளை மட்டும் குறை சொல்லக்கூடாது. முதலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்து விட்டு குறை மட்டுமே சொல்லக்கூடாது.

யார் ஜெயிக்க வேண்டும் என்று மட்டும் பார்க்கக்கூடாது. யார் ஜெயித்தால் நல்லது செய்வார்கள் என்று பார்த்து வாக்களிக்க வேண்டும்.

இது தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் நேரம். எனவே நீங்கள் கேட்கும் அரசியல் விஷயங்களை என்னால் பேச முடியாது.

எங்கள் கட்சிக்கு தைரியம் இருப்பதால் தனித்து போட்டியிடுகிறது. வெற்றி வாய்ப்பை பற்றி அப்புறம் பார்க்கலாம்.

3-வது இடமா? 2-வது இடமா? என்பதை பற்றியெல்லாம் கருத்து சொல்ல முடியாது.

ஏற்கனவே இப்படி பேசி பேசியே எங்கள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சட்டமன்றத்துக்கு சென்று விட்டார்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.