‘தெலுங்கு மக்களைப் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை’ – நடிகை கஸ்தூரி விளக்கம்
சென்னை: “தெலுங்கு மக்களுக்கு எதிராக நான் பேசியதாக கூறப்படும் அப்பட்டமான நூறு சதவீத பொய்யை யாரும் நம்ப வேண்டாம். உண்மை என்பது காலால் நடந்து செல்வதற்குள், பொய்யானது றெக்க கட்டி உலகை மூன்று முறை சுற்றி வந்துவிடும். எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. நான் ஒரு பிராமணர் என்பதால்தான் என்னை குறிவைத்து இதுபோன்ற பொய்களை கூறுகின்றனர். பிராமணர்கள் மட்டும் மீது ஏன் இந்த வன்மம்?” என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
சென்னையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு தெலுங்கு மக்கள் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து, நடிகை கஸ்தூரி இன்று (நவ.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஒரு காலத்தில் பிராமண சமூகம் மேலே இருந்துவிட்டோம். எனவே, எங்களை கீழே இழுத்து அசிங்கப்படுத்தாதீர்கள். நேற்று நான் பேசும்போது ஒரு சமூகத்தை அதுவும் தவறாக எதுவும் சொல்லவில்லை. அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றுதான் பேசினேன். அதற்காக இவ்வளவு கேள்வி கேட்பவர்கள். பிராமண சமூகத்தை ஒவ்வொரு நாளும் விமர்சிக்கும் போதெல்லாம் எல்லோரும் எங்கே போனார்கள்?
இவர்கள் தமிழர்கள் இல்லை என்று ஒரு சமூகத்தைக் கூறுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிடமும்’ என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பாக போஸ்டர் அடித்து பட்டித்தொட்டியெங்கும் பரப்பியவர்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களா? ஒரிஜினலா அவர்கள் தமிழர்கள்தானா? தாய்மொழியை தமிழாக கொண்டவர்களா? இல்லை. பிராமணர்கள் அமைச்சரவையில் இருக்கவே கூடாது என்று சொல்லத் தெரிந்தவர்களுக்கு, தமிழர்களுக்கு மட்டும்தான் இந்தமுறை அமைச்சரவையில் இடம் கொடுக்கப்போகிறோம் என்று ஏன் கூறவில்லை?
அதற்கு எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், பிராமணர்களை மட்டும் தள்ளிவைக்க வேண்டும். எங்களுடைய அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடமில்லை என்று கூறுவார்கள். இப்படி கூறுவதற்குப் பெயர் பாசாங்குத்தனம். அமைச்சரவையில் தெலுங்கு பேசுவர்கள், மலையாளம் பேசுபவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர் என அனைவருக்கும் அமைச்சரவையில் கொடுக்கும்போது, பிராமணர்களுக்கு பொறுப்புக் கொடுக்க வேண்டும்.
உங்களுடைய வீட்டு ஆடிட்டர், டாக்டர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும். உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய பல மனைவிகள் பிராமண சமூகத்தில் இருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால், பிராமணர் இல்லாத அமைச்சரவை எனக் கூறி தமிழர்களின் காதில் பூ சுற்றுகின்றனர். தமிழ் தேசியம் பேச ஆரம்பித்ததால்தான் இந்த கேள்விக் கூட வருகிறது. தமிழகத்தில் பிராமணர்களை மட்டும் தள்ளிவைக்கின்றர். பிராமணர்கள் எங்கே பிறந்தார்கள்? வானத்தில் இருந்து சமஸ்கிருதம் பேசிக்கொண்டு குதித்தார்களா? அவர்களும் எல்லோரையும் போல பிறந்தவர்கள்தானே?
பிராமணர்கள் மீது மட்டும் ஏன் இந்த வன்மம்? எங்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காமல், நாயுடுகளுக்கு மட்டும் இடம் கொடுத்தால் கேள்வி கேட்போம். எங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்போம். வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்பவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நாடார்களுக்கு உயர்வு வேண்டும் என கேட்பவர்களை ஆதரிக்கிறோம். முக்குலத்தோர் பெருமை சொல்பவர்களை ஆதரிக்கிறோம். தேவர், கவுண்டர், கோணார், உடையார், ஆதிக்குடிகளுக்கும் தமிழகத்தில் என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன். பிராமணர்களுக்கு நடக்கக்கூடிய அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறேன்.
தெலுங்கு மக்களுக்கு எதிராக நான் பேசியதாக அப்பட்டமான நூறு சதவீத பொய்யை யாரும் நம்ப வேண்டாம். உண்மை என்பது காலால் நடந்து செல்வதற்குள், பொய் என்பது றெக்க கட்டி உலகை மூன்று முறை சுற்றி வந்துவிடும். எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. நான் ஒரு பிராமணர் என்பதால்தான் என்னை குறிவைத்து இதுபோன்ற பொய்களை சொல்லி வருகின்றனர்” என்று அவர் கூறினார்.