துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

0
58

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

சென்னை: துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் வேர்ல்டு எக்ஸ்போ சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் இந்திய அரங்கில் மார்ச் 25 முதல் மாநில அரசுகளும் அரங்குகள் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை பெற முடியும். தமிழக மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டு செல்கிறார்.

இன்று இரவு துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை 10 மணிக்கு சர்வதேச பொருளாதார மந்திரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

பிற்பகலில் துபாய் சர்வதேச தொழில் கண்காட்சிக்கு செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் உள்ள சிறப்புகள் பற்றி விரிவாக உலக நாட்டு பிரதிநிதிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ப தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப் படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உள்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்த அரங்கிற்கு வருகை புரியும் அனைவரும், தமிழ்நாட்டின் அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் பார்வையிடும் அளவிற்கு இந்த அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

துபாய் உலகக் கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்றிடும் ஒவ்வொரு நாட்டிற்கும், பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாபெரும் கண்காட்சியை சுமார் 3 கோடி பேர் பார்வையிடுவார்கள் என தெரிகிறது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் துபாய் பயணத்தின் போது தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனான சந்திப்பு, துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனான சந்திப்பு ஆகியவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபுதாபி செல்கிறார். அங்கு புலம்பெயர்ந்த தமிழர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு 28-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்திய சமூகம் மற்றும் கலாசார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாசார மையம் உள்ளரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

விழா முடிந்ததும் 28-ந்தேதி இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் உள்பட அதிகாரிகளும் உடன் செல்கிறார்கள்.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக செல்லும் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவருக்கு சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.