தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார் வி.பி.துரைசாமி

0

தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார் வி.பி.துரைசாமி

சென்னை: தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் வி.பி.துரைசாமி இணைந்தார்.

தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி கடந்த வாரம் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசினார். இதனால் அவருடைய கட்சி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து மு.க.ஸ்டாலினுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், ‘தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவித்து அறிவிப்பு செய்துள்ளர்கள்.

கடந்த 8 ஆண்டு காலமாக துணை பொதுச்செயலாளராக பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி. அதே நேரத்தில் அடிப்படை தி.மு.க. உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கி அறிவிப்பும் செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வி.பி.துரைசாமி நேற்று காலை 10 மணியளவில் சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமாக கமலாலயத்துக்கு வந்தார். அவரை பா.ஜ.க. மாநில செயலாளர் கரு.நாகராஜன், துணைத் தலைவர் எம்.என்.ராஜா, வர்த்தகர் அணி மாநில செயலாளர் சி.ராஜா, மீனவரணி தலைவர் சதீஷ்குமார் உள்பட நிர்வாகிகள் வாசலுக்கு வந்து வரவேற்று அழைத்து சென்றனர்.

பின்னர் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் வி.பி. துரைசாமி அக்கட்சியில் இணைந்தார். அப்போது அவருக்கு மூத்த தலைவர் இல.கணேசன் வாழ்த்து கூறினார்.

பா.ஜ.க.வில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு உறுப்பினர் அட்டையை மாநில தலைவர் எல்.முருகன் வழங்கினார். அருகில் இல.கணேசன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்? என்பது குறித்து வி.பி. துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. இயக்கம் எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதில் இருந்து பிறழ்ந்து செல்கிறது. எனவே நல்ல நோக்கம் கொண்ட கட்சியில் சேர்வது அவசியம் ஆகிறது. தி.மு.க. எம்.பி. ஒருவர் சமீபத்தில் அருந்ததியர் சமுதாயத்தை கொச்சைப்படுத்தினார். அதற்கு மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவில்லை. என்னை போன்று தி.மு.க.வில் இருந்து மேலும் பலர் வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வி.பி.துரைசாமியுடன் அவருடைய மகன் டாக்டர் பிரேம் குமாரும் பா.ஜ.க.வில் இணைந்தார். டாக்டர் நடேசன் என்பவரும் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.