திரை விமர்சனம் : ‘கைதி’ தித்திக்கும் நம்பர் ஒன் சரவெடி தீபாவளி கொண்டாட்டம்

0

திரை விமர்சனம் : ‘கைதி’ தித்திக்கும் நம்பர் ஒன் சரவெடி தீபாவளி கொண்டாட்டம்

ரேட்டிங்

போதைபொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை பொருளை கைப்பற்றுகிறார் போலீஸ் அதிகாரி பிஜோய் (நரேன்);.அவரின் தலைமையிலான டீம் பறிமுதல் செய்து அதை ஒரு பழைய கமிஷனர் அலுவலகத்தில் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக வைக்கிறது. போலீஸ் கைப்பற்றிய போதைப் பொருளை எப்படியாவது மீட்க வேண்டும், என அதிக அளவில் ஆட்களை அனுப்புகிறது வில்லன் கேங். அதே நேரம், தங்கள் கும்பலுக்குள் ஊடுருவிய ஐந்து காவல்துறை அதிகாரிகளை கொல்ல நினைக்கிறார்கள். இந்நிலையில் 10 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக இருந்து விட்டு வெளியே வரும் தில்லி (கார்த்தி) தன் 10வயது பெண்குழந்தையை தேடிச்செல்கிறார். போகும் வழியில் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து வாகனத்தில் கை விலங்குடன் வைக்கின்றனர். அப்போது மொத்த போலீஸ் அதிகாரிகளும் எதிரிகளின் சூழ்ச்சியில் சிக்கி மயங்கி கீழே விழுந்து உயிருக்கு போராடுகிறார்கள். வில்லன் கும்பலால் உயிருக்கு போராடும் போலீஸ் கூட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், போதைப் பொருள் நகரத்தில் ஊடுறுவதைத் தடுக்க வேண்டும், இன்னும் 4 மணிநேரத்தில் எப்படி அதிகாரிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும் என்று உடைந்த கையோடு திண்டாடுகிறார் நரேன்.யாரும் உதவிக்கு இல்லாத சூழலில் காரத்தியின் உதவியை நாடுகிறார் நரேன். முதலில் உதவ மறுக்கும் கார்த்தி, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உதவ முன் வருகிறார். போதைப் பொருள் கும்பலால் காவல் நிலையத்தைத் தகர்க்க முடிந்ததா? கார்த்தி அனைத்து காவலர்களையும் அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றிவிட்டு தன் மகளைப் பார்த்தாரா? என்பதே மீதிக் கதை.

ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு நடிப்பு பரிமாணத்தை காட்டி வரும் கார்த்தி ரிலீஸ் ஆன ஆயுள் தண்டனைக் கைதியாக நெற்றியில் பட்டையும் சாதரண வேட்டியுடன், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகளை முதல் முறையாக பார்க்க போகிறோம் என்கிற ஏக்கத்தில் இருக்கும் தந்தையாகவும், மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என பேசும் அப்பாவாகவும் பல காட்சிகளில் நடிப்பில் ஜொலித்து படத்திற்கு உயிரோட்டம் தந்துள்ளார். கார்த்தியின் நடிப்பும் துடிப்பும் கைதியின் நாடித் துடிப்பின் ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் கைதி மூலம் வெள்ளித்திரைக்கு வந்துள்ள நரேனுக்கு இது ஒரு நல்ல ரீ -என்ட்ரி. நேர்த்தியான நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.

பல படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்துவந்த ஜார்ஜ் மரியம் கைதியில் புது கான்ஸ்டபிள் நெப்போலியன் கதாபாத்திரத்தில் அனைவரின் மனதில் பதிந்து விட்டார்.

கமிஷனர் அலுவலகத்தில் மாட்டிக்கொள்ளும் கல்லூரி மாணவர்கள், கார்த்தியின் மகள் அமுதாவாக நடித்திருக்கும் பேபி மோனிகா, அர்ஜுன்தாஸ், ஹரீஷ் உத்தமன், ரமணா, ஹரிஷ்பிராடி, அருண் அலெக்ஸ்சாண்டர், அம்ஜத், வத்சன் சக்ரவர்த்தி, உதயா, லல்லு, கிஷோர் ராஜ்குமார், தீப்தி, மாளவிகா அவினாஷ் என பலரும் கவனித்தக்கவர்களாகவே மனதில் நிற்கிறார்கள்.

ஒரு சில படத்தில் மட்டுமே நடித்து நம்மை எரிச்சல் அடைய செய்த விஜய் டிவி தீனா, இந்தப்படத்தில் தான் தனக்கு கொடுக்கப்பட்ட சிறப்பான கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மிகசிறப்பாக நடித்துள்ளார். இதுபோல இனி வரும் படங்களில் அடக்கி வாசித்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம்.

சத்யன் சூர்யன் சீரான ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ்; எடிட்டிங், இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் அவர்களின் பங்களிப்பு படத்தின் திரைக்கதை ஒட்டத்திற்கு மிகப்பெரிய பலம்.

உலக சினிமா தரத்தில் சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார் அன்பறிவு மாஸ்டர்.

பாடல் இல்லை, கதாநாயகி இல்லை… ஒரு இரவில் என்ன செய்திட முடியும், அன்பு, காதல், நட்பு, உணர்வு என்று பரபரப்பு நிறைந்த கதைக்களம் அமைத்து, ஆங்கில படத்திற்கு இணையான மேக்கிங் விறுவிறுப்பான காட்சியமைப்பு என நேர்த்தியான திரைக்கதையால் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அடுத்த என்ன நடக்கும் என்கிற கேள்வியை எழுப்பி நம்மை விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர் கதைக்குள் கட்டிப்போடு;கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் கைதி, கார்த்தியின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தித்திக்கும் நம்பர் ஒன் சரவெடி தீபாவளி.

நம்ம பார்வையில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் மிக பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான ‘கைதி” படத்துக்கு 4 ஸ்டார் தரலாம்.