திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது

0

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது

திருவண்ணாமலை, டிச. 3– திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இன்று காலை 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு 12-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடக்கிறது. இதையொட்டி கடந்த 30-ந் தேதி உற்சவம் தொடங்கியது. 30-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவமும், 1-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், 2-ந் தேதி விநாயகர் உற்சவமும் நடந்தது.
அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது, முன்னதாக அருணாசலேசுவரர் திருக்கோயிலில் விநாயகர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு தாண்டவம் ஆடிக்கொண்டு பக்தர்களுக்கு காட்சியளித்து எழுந்தருளிய பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், சந்திரசேகரர், பஞ்மூர்த்திகளின் மாட வீதி உலா நடந்தது. பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானம் வாகனத்தில் வீதி உலா வந்தனர்.
பத்து நாட்களும் வீதி உலா
இன்று முதல் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின் பத்து நாட்களும் பஞ்சமூர்த்திகள் காலையும் இரவிலும் திருக்கோயிலின் நான்கு மாடவீதிகளில் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். முக்கிய திருவிழாவான ஆறாம் நாள் திருவிழாவையொட்டி 8–ந் தேதி பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதனை தொடர்ந்து 9–ந் தேதி ஏழாம் நாள் திருவிழாவில் பஞ்சமூர்த்திகள் மஹா ரதம் எனும் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
மகா தீபம்
12ம் தேதி பத்தாம் நாள் திருவிழாவில் அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது, சுமார் 30 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரசினம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, கோவில் இணை ஆணையர் ஹரி பிரியா, முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.இராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, ஆர்.வனரோஜா, கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், நகர கழக செயலாளர் ஜெ.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.