திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் மேலும் 6 இடங்களில் விரிசல்

0

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் மேலும் 6 இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

கோபுர கல் தூண்களில் விரிசல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பேகோபுரம், திருமஞ்சன கோபுரம் என 4 நுழைவுவாயில் கோபுரங்கள் உள்பட கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் 2-வது உயரமான கோபுரமான ராஜகோபுரத்தின் கல் தூணில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென விரிசல் ஏற்பட்டது.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. உதவி பேராசிரியர் அருண்மேனன் கடந்த ஆகஸ்டு மாதம் கோவிலுக்கு வந்து விரிசல் ஏற்பட்ட கல் தூணை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்தார். அப்போது கல்தூணில் ஏற்பட்டுள்ள விரிசல் துருப்பிடிக்காத உலோகத்தால் இணைக்கப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து விரிசல் ஏற்படாதவாறு கல் தூண்களின் எடையை தாங்கும்வகையில் தற்காலிகமாக கம்பிகள் அமைக்கப்பட்டன.

6 இடங்களில் விரிசல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன பொறியாளர் நித்தின் மற்றும் லண்டனை சேர்ந்த ஜோஸ் ஆர்ட் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் கல் தூணில் ஏற்பட்டுள்ள விரிசல் பகுதியை துருப்பிடிக்காத உலோகம் மூலம் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விரிசல் ஏற்பட்டுள்ள கல் தூணின் அருகே இருபுறமும் துளையிட்டு, அதனை கம்பியால் இணைத்தனர்.

ராஜகோபுரத்தின் கல்தூண்களில் வேறு இடங்க ளில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என அந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது ராஜகோபுரத்தின் வலது, இடதுபுறத்தில் உள்ள கல் தூண்களில் சிறிய அளவில் 6 இடங்களில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

4 நாளில் சீரமைக்கப்படும்

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து விரிசல் களையும் சரிசெய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விரிசல்களையும் அதே பாணியில் இணைக்கும் பணிகள் தொடங்கியது. அனைத்து விரிசல்களும் 4 அல்லது 5 நாட்களில் துருப்பிடிக்காத உலோகத்தினால் இணைத்து சரிசெய்யப்படும் என்று பொறியாளர் நித்தின் கூறினார்.