திருமுடிவாக்கத்தில் அடுக்கு மாடி தொழில் வளாகம்: ஜெயலலிதா அறிவிப்பு

0

சென்னை, ஆக. 30–குறு உற்பத்தி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னை அருகில் திருமுடிவாக்கத்தில் அடுக்கு மாடி தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-–ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பினை வழங்குகின்றன. எனவே, இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 5,97,395 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நிறுவனங்களில் 1,00,101 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 16 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறு, சிறு மற்றும், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் 470 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை குறித்த பின்வரும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
1. மின் மற்றும் மின்னணு தொழில் முனைவோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 517 மேம்படுத்தப்பட்ட மனைகள் மற்றும் 140 தொழிற்கூடங்களுடன் கூடிய எட்டு மின் மற்றும் மின்னணு தொழிற்பேட்டைகளும், ஒரு பீங்கான் தொழிற்பேட்டையும் உள்ளன. கடந்த 2012–-13–ம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் மற்றும் சென்னை மாவட்டம், பெருங்குடியிலுள்ள மின் மற்றும் மின்னணு தொழிற்பேட்டைகளிலும், 2013–-14–ம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மதுரை மாவட்டம், கப்பலூர், சேலம் மாவட்டம், சூரமங்கலம் மற்றும் விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை ஆகிய ஆறு தொழிற்பேட்டைகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள மின் மற்றும் மின்னணு தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள் அமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற பணிகள் 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
வாடகை கட்டிடங்களில்
இயங்குவதால்…
2. தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 12.94 லட்சமாகும். இதில் 5.44 லட்சம் குறு நிறுவனங்கள் ஆகும். பெரும்பாலான குறு உற்பத்தி நிறுவனங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருவதால் வங்கிகள் இவ்வகை நிறுவனங்களுக்கு கடன் வழங்க முன் வருவதில்லை. மேலும், பெரு நகரங்களில் வாடகை அதிகரித்து வருவதால் குறு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, குறு உற்பத்தி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சிட்கோ நிறுவனத்தின் மூலம் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கென, அடுக்குமாடி தொழில் வளாகம் 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்த வளாகமானது ஒவ்வொன்றும் சுமார் 750 சதுர அடி பரப்பிலான 250 அலகுகள் கொண்டதாக இருக்கும். இந்த அடுக்குமாடி தொழில் வளாகம் சென்னைக்கு அருகில் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் அமைக்கப்படும்.
3. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் தொழில் துவங்க ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டைகளை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு சிட்கோ நிறுவனத்தின் மூலம் நாமக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 186 ஏக்கர் நிலப்பரப்பில் 36 கோடி ரூபாய் செலவில் புதிய தொழிற்பேட்டைகள் நிறுவப்படும்.
ரூ.27 கோடி மானியம்
4. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைப்புகளின் பங்களிப்புடன் ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 478 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் தொழில் முனைவோர்களால் அமைக்கப்படவுள்ள தொழிற்பேட்டைகளில் மின் இணைப்பு வழங்குதல், நீர் வழங்குதல், காட்சி, கருத்தரங்க கூடங்கள் மற்றும் விற்பனை வசதி மையங்கள் அமைத்தல் முதலிய அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் பொது வசதிகளை ஏற்படுத்த அரசு மானியமாக 27 கோடி ரூபாய் வழங்கப்படும்.
5. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தரம் வாய்ந்த தொழிற்பேட்டைகளை நிறுவ எனது தலைமையிலான அரசு 2013-–ம் ஆண்டு, கொள்கை முடிவு ஒன்றினை அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டு 11 சதவீதப் பங்களிப்புடன் சிட்கோ- தனியார் கூட்டு முயற்சியில் இரண்டு தொழிற்பேட்டைகள் நிறுவப்படும். இந்த தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக, 15 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைப்புகளின் பங்களிப்புடன் அமைக்கப்படும் தொழிற்பேட்டைகளில் மின் இணைப்பு வழங்குதல், நீர் வழங்குதல், காட்சி, கருத்தரங்க கூடங்கள், விற்பனை வசதி மையங்கள் முதலிய அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் பொது வசதிகளை ஏற்படுத்த வழங்கப்படும் மானியம், இத்தகைய தொழிற்பேட்டைகளுக்கும் வழங்கப்படும்.
6. திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் தொழிற் பேட்டையில் உள்ள தெரு விளக்குகள் மற்றும் பம்ப் செட்டுகளுக்கு தேவையான மின்சாரத்தினை சூரிய சக்தி மூலம் பெறுவதற்காக 300 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் 3 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
தற்போது நான் அறிவித்துள்ள அறிவிப்புகளின் வாயிலாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேலும் மேன்மை அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.