திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு சென்னையில் இரண்டு அஞ்சலகங்களில் வழங்கப்படும்

0

சென்னை அக்டோபர் 31, 2016
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அஞ்சல் வட்டம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ 300 சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகளை சென்னையில் உள்ள இரண்டு அஞ்சலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும் சேவையை முதன் முதலாக சென்னையில் தொடங்க உள்ளது. இந்த டிக்கெட்டுகளை நாளை முதல் சென்னையில் உள்ள இரண்டு அஞ்சலகங்களில் வழங்கப்படுகின்றன. சென்னை மைலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் தி நகர் தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் நேரில் பக்தர்கள் வந்திருந்து நுழைவுச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
அஞ்சல் துறை மூலம் 56 நாட்களுக்கு முன்னதாக பதிவு செய்யலாம். பக்தர்களுக்கு 4 தரிசன நேரங்களில் பதிவு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும். காலை 10 மணி, 11 மணி, நண்பகல் 12 மணி மற்றும் பகல் 1 மணிக்கு தரிசனம் செய்ய வசதியாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு நுழைவுச் சீட்டில் அதிகபட்சமாக 6 நபர்களை பதிவு செய்யலாம். பயணிகள் குழுவைச் சேர்ந்தவர்களில் யாரேனும் ஒரு நபர் நேரில் வந்து இந்த நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். புகைப்படங்களை தரவேற்றம் செய்து அவர்களுக்கு பார்கோடு பதியப்பட்ட நுழைவுச் சீட்டு வழங்கப்படும். ஒரு பக்தருக்கு 2 லட்டுகள் வழங்கப்படும். கூடுதல் லட்டு ஒன்றிற்கு ரூ 25 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.