திருப்பதியில் நடைபாதை பக்தர்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாகிறது

0

திருமலை: திருப்பதியில் தற்போது வாடகை அறை பெறுதல், தரிசன டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவற்றிக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதேபோல் நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கும் தேவஸ்தானம் ஆதார் அட்டையை இனி கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக கடந்த 17-ந்தேதி முதல் திருமலைக்கு நடைபாதை மூலம் நடந்து வந்த பக்தர்களிடம் பரீட்சார்த்தமாக இதை செயல்படுத்தியது. ஆனால் நடைபாதை மற்றும் தர்ம தரிசன பக்தர்கள் திருமலைக்கு வரும் போது ஆதார் அட்டையை கொண்டு வருவதில்லை. அதனால் கடந்த 5 நாட்களில் 10 சதவீதம் பக்தர்கள் மட்டுமே ஆதார் அட்டையைக் காண்பித்தனர்.

இந்நிலையில் திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் தங்களிடம் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தேவஸ்தானம் நடைபாதை பக்தர்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க உள்ளது.

மேலும் நடைபாதை பக்தர்களுக்கு அளிக்கும் டோக்கன் வாயிலாக லட்டு முறைகேடு அதிக அளவில் நடைபெற்று வருவதாக தேவஸ்தானம் கண்டறிந்துள்ளது.

லட்டு முறைகேட்டை தடுக்க விரைவில் இம்முறையை அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் தங்களிடம் உள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டையை கட்டாயம் திருப்பதிக்கு வரும்போது கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.