திருட்டு வி.சி.டி.க்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் – விஷால் பேச்சு

0

திருட்டு வி.சி.டி.யை கட்டுப்படுத்தி அந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் கூறினார்.

ஹிந்தி நட்சத்திரங்களான ஷாகித் கபூர், கரினா கபூர், அலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியா முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள படம் “உட்தா பஞ்சாப்’. தணிக்கை குழு சர்ச்சைகளையடுத்து நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்தப் படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், படம் திரைக்கு வரும் முன்பாகவே இணையதளத்தில் வெளியானது அந்தப் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் இப்படம் வெள்ளிக்கிழமை காலை ஒளிபரப்பானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆலோசிக்கும் விதத்தில் தமிழ்த் திரை அமைப்புகளின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது. நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் விஷால் கூறியது:

“உட்தா பஞ்சாப்’ படம் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியானது அதிர்ச்சியளிக்கிறது. முதலில் திருட்டு வி.சி.டி.யை கட்டுப்படுத்தி முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை. திருட்டு வி.சி.டி. பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இதற்காக தமிழ்த் திரை அமைப்புகளின் நிர்வாகிகள் ஒன்றாக கூடி பேசினோம். அதில் எந்தத் திரையரங்கில் இருந்து திருட்டு வி.சி.டி. தயாரிக்கப்படுகிறதோ அந்தத் திரையரங்குக்கு தடை விதிப்பது தொடர்பாக பேசியிருக்கிறோம்.

இன்றைக்கு “உட்தா பஞ்சாப்’ படத்துக்கு நடந்தது, நாளை யாருடைய படத்துக்கு

வேண்டுமானாலும் நடக்கலாம். தமிழ்த் திரையுலகில் வெள்ளிக்கிழமை 2 படங்கள் வெளியாகியுள்ளன. அந்த படங்களின் திருட்டி வி.சி.டி. இந்நேரம் வெளியாகியிருக்கக் கூடும். எந்தத் திரையரங்கில் இருந்து திருட்டு வி.சி.டி. வெளியாகிறது என்பதை கண்டுபிடிக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்றார் அவர்.