திரைத்துறையின் வளர்ச்சிக்கு சாபக்கேடான திருட்டு வி.சி.டி.க்கள் ரும்புக் கரம் கொண்டு தடுக்கப்படும் என மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அவர் பேசியது:-
இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு திருட்டு வி.சி.டி.க்கள் தயாரிப்பு- விற்பனை பெரும் சாபக்கேடாக உள்ளது. இவற்றால் திரைத்துறை கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கான முழு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.
மிகவும் பலமான ஊடகமான திரைப்படங்களில், இளைஞர்களைத் தவறாக வழிநடத்தக் கூடிய வகையிலான காட்சிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும்.
ஆபாசம், இரட்டை அர்த்த வசனம், வன்முறை ஆகியன இல்லாத படங்கள் வெளிவர வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடக் கூடிய படங்களை எடுக்கக் கூடாது.
இன, மத,மொழி நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய படங்களைத் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முன்வரக் கூடாது. திரைப்படங்கள் மக்களின் வலிகளைப் போக்கும் வலி நிவாரணியாக இருக்க வேண்டும். மாறாக, வலி கொடுப்பதாக இருக்கக் கூடாது.
இந்தியக் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
குடும்ப அரசியல்: குடும்ப ஆட்சி முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். குடும்பத்தின் அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடாது. ஒருவரின் நற்பண்பு, செயல்திறன், திறமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தங்களது மொழி குறித்து எல்லோரும் பெருமையடைய வேண்டும். மொழியால் வேறுபட்டாலும் இந்தியர்கள் என்பதை நினைவில் நிறுத்திகொள்ள வேண்டும்.
வலிமையான தலைவரான பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
பழைய பெருமைகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. எதிர்கால சந்ததிக்கு சில நல்ல விஷயங்களை விட்டுச் செல்ல வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.