திருச்சி பொதுக் கூட்டத்தில் கட்சிக் கொள்கைகள் முழுமையாக அறிவிக்கப்படும்: கமல்ஹாசன் பேட்டி

0

திருச்சி பொதுக் கூட்டத்தில் கட்சிக் கொள்கைகள் முழுமையாக அறிவிக்கப்படும்: கமல்ஹாசன் பேட்டி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்று தொண்டர்களைப் பார்த்து கையசைக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

காவிரி விவகாரம், கட்சியின் கொள்கை, தேர்தல் கூட்டணி ஆகியவற்றை திருச்சியில் புதன்கிழமை மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விரிவாக அறிவிக்கவுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன், தனது அரசியல் கட்சி அறிவிப்புக் கூட்டத்தை மதுரையில் பிப்.21-இல் நடத்திய பிறகு அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். மதுரைக்கு அடுத்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை திருச்சியில் புதன்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்தார். இதன்படி, திருச்சி பொன்மலை ஜி கார்னர் சுப்பிரமணிய புரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை தயார் செய்யப்பட்டுள்ளது.

கமல் வருகை: இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை மாலை கமலஹாசன் வருகை தந்தார். அவரது பெட்டியுடன் இணைந்து செய்தியாளர்கள், ஊடகத்தினர், பவுன்சர்களும் தனித்தனி பெட்டிகளில் வந்திருந்தனர்.

வரும் வழியில் செய்தியாளர்களை இருவர், இருவராக சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். அப்போது, கமல்ஹாசன் கூறியது: மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளவர்கள் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. அவரவர் செய்யும் தொழிலை தொடர்ந்து கவனித்து வர வேண்டும். பகுதிநேரமாக அரசியலில் ஈடுபட்டாலே போதுமானது. அரசியலில் ஊழல், லஞ்சம் ஆகியவற்றை ஒழித்து புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கான சேவையை மக்கள் நீதி மய்யத்தின் பணியாகும். காவிரி விவகாரம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே விருப்பம். திருச்சியின் பொதுக்கூட்டம் காவிரிக்கான நோக்கத்தை விளக்கம் கூட்டமாக அமையும். மேலும், கட்சியின் கொள்கைகளை முழுமையாக அறிவிக்கும் கூட்டமாக அமையும். தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி சேருவது என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. திருச்சி பொதுக் கூட்டத்தில் கட்சிக் கொள்கைகள் முழுமையாக அறிவிக்கப்படும்போது மக்கள் நீதி மய்யத்துடன் எந்த கட்சிகள் அணி சேரும் என்பதை அவர்களே முடிவு செய்வர் என்றார்.

திணறிய ரயில்நிலையம்: திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்க ஏராளமான வாகனங்களில் கட்சியினர், ரசிகர்கள் வந்திருந்தனர்.
ரயில் வந்து கமல்ஹாசன் இறங்கியவுடன்,கூட்டம் ஒன்று சேர்ந்ததால் வெளியே வருவதற்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டது. போலீஸார் சூழ்ந்து கமல்ஹாசனை பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

கூட்ட நெரிசலில் ஊர்ந்து வந்த கமல்ஹாசன், ரயில்நிலையத்துக்கு வெளியே காரில் ஏறி கட்சியினர் மற்றும் ரசிகர்களை நோக்கி சிறிது நேரம் கையசைத்தபடியே புறப்பட்டுச் சென்றார்.