‘திராவிட முன்னேற்றக் கழகத்தால் தமிழ்நாடு வளர வேண்டும்!’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கழக இளைஞரணி சார்பில் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா இன்று (27-10-2024) முற்பகல் – சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
‘என் உயிரினும் மேலான’ – இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது, நான் அளவில்லாத வகையில் பெருமை அடைந்திருக்கிறேன்! இந்தப் பேச்சு போட்டி, மூன்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற போட்டி மட்டும் அல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தியலை, அடுத்த நூற்றாண்டுக்குத் தூக்கிச் சுமந்து செல்லவிருக்கும் பேச்சுப் போராளிகளைக் கண்டறிந்து, பட்டை தீட்டும் பயிற்சிப் பட்டறை! அப்படிப்பட்ட பட்டறையை, நான் கட்டியெழுப்பிய இளைஞரணி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான், என் பெருமைக்குக் காரணம்!
“திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே, பேசிப் பேசி வளர்ந்த கழகம்! அந்தக் காலத்தில், பேசிப் பேசியே ஆட்சியை பிடித்த இயக்கம்” என்று நம்முடைய இயக்கத்தைப் பற்றிச் சொல்லுவார்கள். ஆனால், அவர்கள் சொல்ல மறந்தது, இல்லை – சொல்லாமல் தவிர்ப்பது என்னவென்றால், நாம் பேசிய பேச்செல்லாம் வெறும் அலங்கார அடுக்குமொழி அல்ல, உலகம் முழுவதும் நடந்த புரட்சி வரலாறுகளைப் பேசினோம்; உலக அறிஞர்களின் வரலாற்றைப் பேசினோம்; நம் நாட்டில் நடைமுறையில் இருந்த கொடுமைகளைப் பேசினோம்; மூடநம்பிக்கை – பிற்போக்குத்தனம் – பெண்ணடிமைத்தனம் – இவைகளுக்கு எதிராகப் பேசினோம்.
ரத்தம் கக்கிய நிலையிலும் இந்தச் சமூகத்தின் இழிவு நீங்கப் பேசினார் – அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள்! 95 வயதிலும் மூத்திரவாளியைச் சுமந்து கொண்டு, வலியைத் தாங்க முடியாத அளவிற்குப் பேசியவர் – தந்தை பெரியார் அவர்கள்! சாக்ரடீஸ், தமிழர்கள் மீதான டெல்லியின் பாரபட்சம் என்று அனைத்து தலைப்புகளிலும் மடைதிறந்த வெள்ளம்போல் பேசினார் – பேரறிஞர் அண்ணா அவர்கள்! அண்ணா பரம்பரை என்றே சொல்லும் அளவிற்கு இன்றைக்கு வரைக்கும், அண்ணா உருவாக்கிய மேடைத்தமிழ் பரம்பரையைச் சேர்ந்த பேச்சாளர்கள் இருக்கிறார்கள்.
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் என்று பழந்தமிழ் இலக்கியங்களை அழகுதமிழில் பாமர மக்களுக்கும் கொண்டு சென்றார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தலைவர் கலைஞர் ராஜா ராணி படத்தில் எழுதிய வசனத்தை ஒரு போட்டியாளர் பேச, அது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது! அந்தப் படத்தில் சாக்ரடீஸ் ஓரங்கநாடகத்தில் நம் இயக்கம் அடுக்குமொழியால் வளர்ந்தது அல்ல; அறிவார்ந்த கருத்துகளால் வளர்ந்த இயக்கம் என்று தலைவர் கலைஞர் எழுதி இருப்பார்! நாவலர் – பேராசிரியர் – சொல்லின் செல்வர் – சிந்தனைச் சிற்பி – தத்துவமேதை என்று நம் இயக்கத்தில் இருக்கும் தலைவர்களின் பெயர்களே, அவர்கள் எப்படிபட்ட ஆற்றல்மிக்க பேச்சாளர்களாக இருந்தார்கள் என்று சொல்லும்!
பேச்சுக்கலை மிக மிக வீரியமிக்கது! சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது! “சொல்வன்மை மிக்கவனை வெல்வது அரிது” என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட சொல்வன்மைமிக்க படைக்கலன்களை உருவாக்க வேண்டும் என்றுதான், இந்த ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டியை நடத்தும் பொறுப்பை – இளைஞர் அணியிடம் நான் ஒப்படைத்தேன்.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்” – என்கிறார் வள்ளுவர்.
அப்படித்தான், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை தம்பி உதயநிதி-யிடம் நான் ஒப்படைத்தேன். இளைஞரணிச் செயலாளர் என்பது பதவி கிடையாது. அது பெரும் பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து, அவர் செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், என்னைப் பொருத்தவரையில், அந்த பொறுப்பு நான் அவருக்கு கொடுத்த பயிற்சி! அப்படி பார்க்கும்போது, நான் வைக்கும் ஒவ்வொரு ‘டெஸ்ட்’-லயும் அவர் ‘செண்ட்டம் ஸ்கோர்’ எடுக்கிறார்…
2019-இல் ஊராட்சி சபைக் கூட்டங்கள் தொடங்கி, அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள் – நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – கொரோனா காலத்தில் உதவிகள் – நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள் – திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் – நூலகங்கள் – முரசொலியில் பாசறைப் பக்கம் – “முத்தமிழறிஞர் பதிப்பகம்” தொடங்கி கொள்கைப் புத்தகங்கள் என்று ஏராளமான பணிகளைச் செய்து வருகிறார். அதுமட்டுமல்ல, இளைஞரணியின் ஆற்றலை வெளிப்படுத்துவதுபோல் – சேலத்தில் இளைஞரணி மாநாட்டை நடத்திக் காட்டினார்! சுமார் 6 லட்சம் இளைஞர்கள் கூடிய அந்த மாநாட்டில் நான் பேசும்போது, “இந்த இயக்கத்துக்கு 100 ஆண்டுகளுக்கான போர் வீரர்கள் தயாராகிவிட்டார்கள்” என்று சொன்னேன்.
அந்த களப்போர் வீரர்களுக்குத் துணை நிற்கும் சொற்போர் வீரர்களை அடையாளம் காணும் முன்னெடுப்புதான் இது! இந்த முன்னெடுப்பு மூலமாக, அடையாளம் காணப்பட்டிருக்கும் உங்களால் – கழகம் வளர்ச்சி அடையும்! நம்முடைய தமிழ்நாடும் மேன்மையடையும்! திராவிட இயக்கம் வளர வேண்டும்! திராவிட முன்னேற்றக் கழகத்தால் தமிழ்நாடு வளர வேண்டும்! இதுதான் நம் இலட்சியம்! அந்த இலட்சியப் பாதையில், கழக இளைஞரணி வேகமாக நடைபோடுகிறது! அதற்குத் தம்பி உதயநிதிக்கும் – அவருக்குத் துணை நிற்கும் அத்தனை தம்பிமார்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!
தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கழகத்தின் பல்வேறு சார்பு அணிகளுக்கும் பல்வேறு பணிகளை நான் வழங்கி இருந்தேன். அதில், இளைஞரணிக்கு வழங்கப்பட்ட கடமைதான், கழகத்துக்காக 100 பேச்சாளர்களைத் தேர்வு செய்யும் மாபெரும் பணி! இளைஞரணியுடன் – கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியும் இணைந்து இந்தப் போட்டியைச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்கள்… 17 ஆயிரம் பேர் – 78 நடுவர்கள் – மாவட்ட அளவில் தேர்வானவர்களுக்கு மண்டல வாரியாகப் போட்டிகள் – இன்று வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு என்று மிகப் பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார்கள்! நான் கேட்டது 100 பேச்சாளர்கள்!
ஆனால், இப்போது 182 பேச்சாளர்களை அடையாளம் கண்டிருக்கிறார் தம்பி உதயநிதி அவர்கள்! வாகை சூடியுள்ள மோகநிதி, சிவரஞ்சனி, வியானி விஷ்வா ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்! இவர்களுக்கு முறையே, 1 லட்சம் – 75 ஆயிரம் – 50 ஆயிரம் என்று பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறீர்கள். கழகத் தலைவராக இளைஞர் அணிக்கு ஒரு வேண்டுகோள்… சொற்களை வென்ற இந்தச் செல்வங்களுக்கான பரிசுத்தொகையை நீங்கள் இன்னும் உயர்த்தி வழங்க வேண்டும்! வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்.
17 ஆயிரம் படிகளைக் கடந்து முதல் மூன்று இடங்களை அவர்கள் வென்றிருக்கிறார்கள்! இது மகத்தான சாதனை! போட்டியில் பங்கேற்றிருக்கும் 17 ஆயிரம் பேரும் பாராட்டுக்கு உரியவர்கள்தான்! வெற்றி – பரிசு தாண்டி, பங்கேற்பதுதான் மிக முக்கியமானது. இறுதிப் போட்டியில் பங்கெடுத்த 182 பேச்சாளர்கள் இந்த அரங்கத்தில் இருக்கிறார்கள். அறிவாலயத்தின் முகப்பில் இருக்கும் நம்முடைய பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அந்த 182 பேரோடு சேர்ந்து, நானும், நம்முடைய பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் எல்லாம் உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
அப்பொழுது உங்கள் ஆர்வத்தைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்போதே தம்பி உதயநிதியிடம் இந்தக் கோரிக்கையை நான் வைத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டுதான் இந்த மேடைக்கே வந்தேன். மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர் பெருமக்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் கழகத்தின் தலைவர் என்கிற முறையில் உரிமையோடு சொல்லிக் கொள்ள விரும்புவது – உதயநிதி கூட இந்த வேண்டுகோளை எடுத்து வைத்தார் – இனி உங்கள் மாவட்டங்களில் நடைபெறும் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும், கழக நிகழ்ச்சிகளிலும் இங்குள்ள 182 பேச்சாளர்களை நீங்கள் பயன்படுத்தி ஆக வேண்டும். ஏன் என்றால், இங்கிருப்பவர்கள் பேச்சாளர்கள் மட்டும் அல்ல, இவர்கள்தான் திராவிட இயக்கத்தின் எதிர்காலத் தலைமுறை.
உங்களைப் போன்றுதான், நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா? இப்படி ஒரு மேடை கிடைக்காதா? என்று நாங்கள் எல்லாம் காத்திருந்த காலம் உண்டு! நானும் உங்களை மாதிரி மேடைகளில் பேசி வளர்ந்தவன்தான் இன்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். 1971-ஆம் ஆண்டு, எனக்கு 18 வயது. கோவை மாணவர் மாநாட்டில் கல்லூரி மாணவனாகக் கலந்து கொண்டேன். ஏராளமான பேச்சாளர்கள்! அண்ணன் துரைமுருகன் மாதிரியான ஜாம்பவான்கள் எல்லாம் அங்கு உட்கார்ந்திருந்தார்கள்.
மாநாட்டுக்குத் தலைமை வகித்த அண்ணன் எல்.ஜி. அவர்களிடம் இரண்டு நிமிடம் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டேன். இரண்டு நிமிடம் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது, மேடையேறினேன். அன்றைக்கு பேசியதை, என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்து வைத்து நினைத்துக் கொண்டே இருக்கிறேன்… “இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான மாணவர் பட்டாளத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ளும் அந்த வாய்ப்பை நீங்கள் எனக்கு உருவாக்கித் தர வேண்டும். மொழிக்காக உயிரை இழக்கின்ற தியாகத்தைச் செய்வதற்குக்கூட நாங்கள் காத்திருக்கிறோம்” என்று சொல்லி, ”என்னுடைய தந்தைக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே, நான்கு ஆண் பிள்ளைகளில் ஒரு ஆண் பிள்ளை போய்விடுவதால் என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். அத்தகைய பாராட்டும் – பெருமையும் வாங்கித் தந்த மகிழ்ச்சியும் என்னைச் சேரும். எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு நான் தயார்” என்று முழங்கினேன். மறக்க முடியாத நினைவுகள்…
காரணம், என்னுடைய பேச்சு மட்டுமல்ல; அதற்கு தலைவர் கலைஞர் மேடையில் சொன்ன மறுமொழி! தலைவர் கலைஞர் ஏன் கொண்டாடப்படுகிறார் என்பதற்கான விடைதான் அந்தப் பேச்சு. தலைவர் கலைஞர் என்ன சொன்னார் என்றால், “நாங்கள் நான்கு பிள்ளைகள் இருக்கிறோம் என்று ஸ்டாலின் சொன்னான். ஸ்டாலினையும் சேர்த்து நான் என் நான்கு பிள்ளைகளையும் தரத் தயாராக இருக்கிறேன். எந்தத் தியாகத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன். நான் உழைத்து, உழைத்து – எழுதி, எழுதிச் சம்பாதித்த குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தக் குடும்பத்தில் ஒரு ஸ்டாலின் அல்ல – நான்கு பிள்ளைகளும் நாட்டுக்காக சென்றாலும் பரவாயில்லை. ஆனால், ஏழை – எளிய வீட்டுப் பிள்ளைகள் இருக்கிறீர்கள். உங்களை நம்பி உங்களது பெற்றோர்கள் படிக்க அனுப்பி இருக்கிறார்கள். முதலில் வீட்டைக் காப்பாற்றுங்கள், பின்னர் நாட்டைக் காப்பாற்றுங்கள்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்குச் சொன்னார். உணர்ச்சிப் பிழம்பாக இருந்த மாணவர்களை தூண்டிவிடுவது போன்று அவர் பேசவில்லை! மாறாக அங்கு இருந்த அனைவருக்கும் வழிகாட்டினார்! அதனால்தான், அவர் தாயைவிடவும் மேலானவர்! அதனால்தான் அவர் தலைவர்!
உங்கள் பேச்சுகளைக் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் பார்த்துப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். சிலரின் பேச்சுகள் – குரல்வளம் – உச்சரிப்பு – இதெல்லாம் அருமையாக இருந்தது! உங்களின் சிந்தனைகள் வியப்பில் ஆழ்த்தியது! பெரிய பெரிய பேச்சாளர்கள் பேசத் தயங்கும் கருத்துகளைக்கூட நீங்கள் துணிச்சலாகப் பேசினீர்கள்!
குறிப்பாக, தமிழன்னையின் பாசத்தை பெற்றவர் கலைஞர் என்று பேசிய புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவ ஸ்ரீலட்சுமி – நம்முடைய அரசின் அனைத்துத் திட்டங்களையும் சொல்லி, ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமான ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி என்று எடுத்துச் சொன்ன செங்கல்பட்டைச் சேர்ந்த அக்ஷயா – தன்னுடைய கதையையே மேடையில் சொல்லி, எப்படி தன்னுடைய தந்தையின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உதவியது, அவர்கள் குடும்பத்திற்கு வெளிச்சமாக இருந்தது என்று பேசிய செங்கல்பட்டைச் சேர்ந்த கீர்த்தனா போன்றவர்கள் என்னுடைய கவனத்தை ஈர்த்தார்கள்!
அதேபோலதான், நாமக்கல்லைச் சேர்ந்த சுதர்சனா என்ற மாணவி, “ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில், அவன் உயர்சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளைசெய்து தலைக்குள் வைத்தானா? மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பதென்ன களிமண்ணா? சுண்ணாம்பா?” என்ற கலைஞர் வரிகளைச் சொல்லி, ஒடுக்கப்பட்ட மக்கள் படிக்க தலைகுனிந்ததால்தான், இன்றைக்கு அவர்கள் எல்லாம் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்று, அவதூறு பரப்புகிறவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்தார். கேட்டபோது, அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன். இதுதான் கலைஞர் ஸ்டைல் பதிலடி! திராவிட இயக்கம் மக்களின் இதயங்களில் வாழ்கிறது என்று எடுத்துக்காட்டிய உருக்கமான பேச்சு அது!
இப்படித்தான் மக்களின் மனதைத் தொடுவது போன்று பேச வேண்டும்! சொல்ல நினைக்கும் கருத்துகளை, தெளிவாக – இனிமையாக – புரியும்படிப் பேச வேண்டும்! சொல் புதிது – சுவை புதிது – தகவல் புதிது – சொல்லும் பாணி புதிது என்று பாராட்டுவது போன்று உங்களின் பேச்சுகள் அமைய வேண்டும்! நவீன யுகத்தின் புதிய பேச்சுப் போராளிகளான உங்களை, வருக… வருக என்று வரவேற்கிறேன்.
திராவிட இயக்கம் இளைஞர்களால் – இளைஞர்களுக்காகத் தொடங்கப்பட்ட இளைஞர் இயக்கம். இங்கு கொள்கை வீரர்களாக வாருங்கள்… கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு – என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை நெஞ்சில் தாங்கிக் கருத்துகளைச் சொல்லுங்கள் – கலைஞர் சொன்ன ஐம்பெரும் முழக்கங்களைக் கடைக்கோடிக்கும் எடுத்துச் செல்லுங்கள்! நாம் எல்லோரும் உடன்பிறப்புகள் என்ற பாச உணர்வோடு – தமிழ்நாட்டைத் தொடர்ந்து தலைநிமிரச் செய்வோம்!