தியேட்டர்களில் மட்டும் அல்ல:  பைவ் ஸ்டார் ஹோட்டல்களிலும் வெளியாகும் கபாலி

0

 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள பிரபல நடிகர் ரஜினிகாந்தின் “கபாலி’ திரைப்படம் உலகமெங்கும் திரை அரங்குகளில் வரும் வெள்ளியன்று (ஜுலை 22) வெளியாகிறது. அதே நேரத்தில் பெங்களூருவில் உள்ள குறிப்பிட்ட சில ஸ்டார் ஹோட்டல்களிலும் சிறப்புக் காட்சியாக இந்த படத்தை திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கபாலி படத்தை சுற்றி எழுந்துள்ள எதிர்பார்பை வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில், ஒரு புது முயற்சியாக பெங்களூருவில் உள்ள குறிப்பிட்ட சில நட்சத்திர ஹோட்டல்களில் படத்தை திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சி நிறைவேறினால் இந்திய திரை உலக வரலாறில் இது ஒரு புதுமையான முன்னோடி முயற்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஏற்பாடுகள் செய்து வரும் ‘லஹரி ம்யூசிக்’ நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் கூறியதாவது:

ஜெ .டபிள்யூ .மாரியட், லலித் அஷோக், ராயல் ஆர்ச்சிட் மற்றும் க்ரவுன் பிளாசா ஆகிய நான்கு ஓட்டல்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை, சிறந்த ஒளியமைப்புடன் படத்தை திரையிட உள்ளோம். ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் ஒளிபரப்ப திட்டம் உள்ளது. ஒரு டிக்கெட்டிற்கு ரூ.1300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால் பெங்களூரு மாநகர போலீஸ் துணை கமிஷனர் மற்றும் இதர அரசுத் துறைகளிடம் இருந்து அனுமதி கிடைத்த பிறகே இந்த முயற்சிகள் நடைமுறைக்கு வரும்.

இந்த முறையில் திரையிடலாம் என்று ஐடியா கொடுத்து செயல்படுத்தி வருபவர் தயாரிப்பாளர் ‘ராக்லைன் வெங்கடேஷ். இவர் ரஜினியின் ‘லிங்கா’ படத்தை தயாரித்து அதன் மூலம் உண்டான சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.