‘திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (டிச. 24) இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி நேற்று (டிச. 25) கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது,
“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருந்து, அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு என் வீட்டுக்கு வெளியே நின்று, என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன்.
நாளை பாஜகவை சேர்ந்த ஒவ்வொருவரின் வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும். நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம் எல்லாம் இருக்காது”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.