திமுகவினருக்கு மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது எப்படி? – காவல் ஆணையருக்கு எதிராக பாமக வழக்கு
சென்னை: தமிழக ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்த திமுகவினருக்கு மட்டும் விதிகளை மீறி அனுமதி வழங்கியது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பாமக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகர காவல் ஆணையருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து சவுமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிரணி கடந்த ஜன.2-ம் தேதி அன்று வள்ளுவர் கோட்டம் முன்பாக போராட்டம் நடத்த முயன்றது. இதற்கு அனுமதி மறுத்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். 5 நாட்களுக்கு முன்பாக அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை என போலீஸ் தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் உடனடியாக முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி, இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கக் கூடாது என அனைத்து அரசியல் கட்சியினருக்கும் கண்டிப்பு தெரிவித்திருந்தது.
இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை காலை மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திமுக சார்பில் திங்கள்கிழமை மாலை அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுங்கட்சி என்பதால் திமுகவினருக்கு மட்டும் விதிகளை மீறி போலீஸார் உடனடியாக அனுமதி வழங்கியுள்ளனர். இதனால், திமுகவினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர். அதேநேரம், போராட்டம் நடத்த எதிர்கட்சியினருக்கு மட்டும் போலீஸார் அனுமதி மறுப்பதாக கூறி பாமக வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக இன்று காலை முறையீடு செய்தார்.
அப்போது வழக்கறிஞர் கே.பாலு, “ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்த திமுகவினருக்கு மட்டும் காவல் துறையினர் விதிகளை மீறி உடனடியாக அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் எதிர்கட்சியினருக்கு அனுமதி மறுக்கின்றனர். எனவே, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.
இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன், இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டு எண்ணிடப்பட்டால் புதன்கிழமை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக கொள்கை பரப்புச் செயலாளரான பி.கே. சேகர், தமிழக அரசின் தலைமைச் செயலர், தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ஜனநாயக வழியில் போராட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சிகளுக்கு போலீஸார் அனுமதி மறுக்கின்றனர்.
ஆனால், ஆளுங்கட்சியான திமுக-வுக்கு மட்டும் ஒரே நாளில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல், எந்த விண்ணப்பமும் பெறாமல் ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்த அனுமதியளித்து உள்ளனர். இது சட்டவிரோதமானது. குறிப்பாக சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
திமுகவினர் நடத்திய இந்த போராட்டத்தால் அவ்வழியே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்மூலம் சென்னை மாநகர போலீஸ் விதிகளை மீறிய, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.