”தயாராகுங்கள்.. 2024ல் அறுவடை செய்வோம் – நாற்பதும் நமதே, நாடும் நமதே” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

0
292

”தயாராகுங்கள்.. 2024ல் அறுவடை செய்வோம் – நாற்பதும் நமதே, நாடும் நமதே” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு வரவேற்புரையாற்றினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் பொதுக்கூட்டத்தில் ஏற்புரை வழங்கிய, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான். இன்று முதல் என்னுடைய எழுபதாவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறேன்!

நான் என்று சொன்னால் தனிப்பட்ட இந்த ஸ்டாலின் அல்ல! இந்த நந்தனத்தில் நான்கு பக்கமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் அமர்ந்திருக்கும் உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்!

உங்களை மட்டுமல்ல – தாய்த்தமிழ்நாட்டின் நான்கு மூலைகளிலும் எட்டுக் கோணத்திலும் தனது உயிரைக் கொடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காத்து வருகின்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற பெயருக்குள் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உயிர்கள் அடங்கி இருக்கிறது.

‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்ற ஒற்றை வார்த்தையால் நம்மை எல்லாம் இணைத்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு நான் மட்டுமா பிள்ளை? நீங்கள் அனைவருமே அவரது பிள்ளைகள் தான்.தலைவர் கலைஞர் அவர்களுக்கு நான் மட்டுமா பிள்ளை? நீங்கள் அனைவருமே அவரது பிள்ளைகள் தான். ”ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான், திராவிட சமுதாயத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் பணியை மேற்போட்டுக் கொண்டு…” என்று தான் பெரியாரே புறப்பட்டார்!

”இந்த அண்ணாத்துரையால் என்ன சாதித்துவிட முடியும் என்று கேட்கிறார்கள். எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று நினைக்கிறார்களோ அனைத்தையும் இந்த அண்ணாத்துரையால் சாதிக்க முடியும்” என்று தான் பேரறிஞர் அண்ணா எழுந்து நின்றார்! ”நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக நான் மிதப்பேன், நீங்கள் அதில் ஏறிச் சவாரி செய்யலாம்” என்று தான் முத்தமிழறிஞர்

”மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டுக்கு விளக்காக இருப்பேன் – நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன். மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாவேன்” – என்று உறுதிமொழி ஏற்று நாளும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.கடமையையும் – பொறுப்பையும் எனது தோளில் சுமத்தியவர்கள் நீங்கள் தான்.

அதனை நான் ஏற்றும் கொண்டு தான் ஆக வேண்டும். பேரறிஞர் அண்ணாவைப் போல எனக்குப் பேசத் தெரியாது – தலைவர் கலைஞரைப் போல எனக்கு எழுதத் தெரியாது – ஆனால் அவர்களைப் போல உழைக்கத் தெரியும், பதினான்கு வயதில் கோபாலபுரம் இளைஞர் திமுகவை ஆரம்பித்து மக்கள் பணியாற்றத் தொடங்கியவன் நான். தேர்தல் பரப்புரைகளில் – பொதுக்கூட்ட மேடைகளில் – என குரலெடுத்து முழங்கினேன்!

நாடக மேடைகளில் கனல் தெறிக்கும் வசனங்கள் மூலமாக கழகத்தின் வெற்றிக்காக உழைத்தேன்! அதனாலேயே அவசர நிலைக்காலத்தில் அரசியல் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தேன். ஓராண்டு காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டேன். திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் சிறைக்குப் போனேன். ‘பொதுவாழ்க்கை என்றால் இப்படித்தான் எல்லாமும் இருக்கும்’ என்று சொல்லி வசந்த மாளிகைக்கு அனுப்பி வைப்பது போல சிறைச் சாலைக்கு என்னை அனுப்பி வைத்தார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

அது தான் என்னுடைய பயிற்சிப் பாசறையாக அமைந்திருந்தது. சிறைச்சாலையை தவச்சாலையாக மாற்றி நான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்க நான் உறுதி எடுத்துக் கொண்டேன். இந்த ஐம்பத்தைந்து ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் எனது கால் படாத கிராமம் இல்லை, நகரம் இல்லை, மாநகர் இல்லை என்கிற அளவுக்கு பயணங்களை மேற்கொண்டேன்.

சாலைகளே இல்லாத புழுதிக்காட்டிலும் கருப்பு சிவப்பு புகழ்க்கொடியை ஏற்றி வைத்தவன் நான். வானுயர் கட்டங்களுக்கு மத்தியில் கம்பீரத் தூணாக கழகக் கொடியை ஏற்றி வைத்தவன் நான். மேடு பள்ளங்கள் – வெயில் மழைகள் – இரவு பகல்கள் எனக் கால நேரம் பார்க்காமல் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பது ஒன்றே பணி என்று பணியாற்றியதால் தான் எனக்கு எழுபது வயது ஆகிவிட்டது என்பதை என்னாலே நம்ப முடியவில்லை. மக்களுக்காகப் போராடும் – வாதாடும் நம்மைப் போன்றவர்களுக்கு காலம் – நேரம் எதுவும் தெரியாது.

காலம் நேரம் எதுவும் கிடையாதுமார்ச் 1 பிறந்தநாள் என்று சொல்லும் போது தான் எனக்கு வயது நினைவுக்கு வருகிறது. நாளை முதல் இதனை மறந்து விட்டு நான் எனது பணிகளைத் தொடர்வேன். அதுவும் எழுபது வயது என்று சொல்லும் போது என்னை விட மற்றவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள்.

கடந்த பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்கள். உண்மையில் சொல்ல வேண்டுமானால் வயது என்பது மனதைப் பொறுத்தது தான். இளமை என்பது முகத்தில் இல்லை, மனதில் தான் இருக்கிறது. உங்களது மனதில் கொள்கை உறுதியும், அந்தக் கொள்கையை வென்றெடுப்பதற்காக இலட்சிய தாகமும் – அந்த இலட்சியத்துக்காக உழைப்பதும் உங்களது அன்றாடப் பணியாக இருக்குமானால் அப்படிப்பட்ட இலட்சியவாதிகளுக்கு வயது ஆவது இல்லை.

அந்த இலட்சியத்தை வென்றடைவதற்கு தொண்டர்களாகிய நீங்கள் என்னோடு அணி வகுத்து வரும் போது நாளுக்கு நாள் நான் இளமை ஆகிறேன். துடிப்புள்ளவனாக ஆகிறேன். 1980 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இளைஞரணிச் செயலாளராக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த அதே உற்சாகத்தோடு தான் இன்றும் நான் இருக்கிறேன்.

நாங்கள் அன்று விதைத்த விதை தான் – இன்றைய தினம் கழகம் இன்று கம்பீரமாக நிற்கிறது. அந்த விதையின் விளைச்சலாகத் தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களே! நீங்கள் உருவாக்கிய கழகத்தை…. தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களே! நீங்கள் கட்டிக் காத்த கழகத்தை … எந்நாளும் நிரந்தரமாக ஆட்சிப் பொறுப்பில் வைத்திருப்பேன் என்ற உறுதியை இந்நாளில் நான் எடுத்துக் கொள்கிறேன்.

பாராண்ட தமிழினம் இடையில் ஏற்பட்ட பல்வேறு படையெடுப்புகளால் அடிமைப்பட்டுக் கிடந்ததை மீட்க 100 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தைக் காக்கும் கடமை நமக்கு உண்டு. திராவிட இயக்கத்தின் அரசியல் நெறிமுறைகளின் படி தமிழ்நாட்டை கல்வியில், சமூகத்தில், பொருளாதாரத்தின் முன்னேற்றிக் காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இவை இரண்டும் தான் நம்முடைய இரு இலட்சியக் கண்கள்.

இதற்காகவே திராவிட முன்னேற்றக் கழகம் – நிரந்தரமாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்கிறோம். கொள்கையைப் பரப்ப கட்சி – கொள்கையை நிறைவேற்ற ஆட்சி – இவை இரண்டின் மூலமாக தமிழ்நாட்டைத் தலைநிமிர வைப்போம். -இவை அனைத்தையும் நமது இலக்குகளாக வைத்து செயல் திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.

தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை 505வாக்குறுதிகள் தான். அதில் 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மீதமுள்ளவை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத எத்தனையோ திட்டங்களைத் தீட்டி வருகிறோம். அதனால் தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரசு

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பது ஆகும். எனது தலைமையிலான அரசு சொல்லாததையும் செய்வோம் சொல்லாமலும் செய்வோம் என்று இயங்கும் அரசு ஆகும். – என்று சொல்லி வருகிறேன். நம்பர் ஒன் முதலமைச்சர் – நம்பர் ஒன் தமிழ்நாடு – என்ற அங்கீகாரங்களை விட நம்பர் ஒன் நன்மைகள் அனைத்தும் தரும் காலமாக இந்தக் காலம் அமைய வேண்டும்.

அதனால் தான் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தான் திராவிட மாடல் ஆட்சியானது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவின் மிகமிகப் பழமையான மூத்த அரசியல் கட்சியான காங்கிரசு கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்திருக்கும் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் – என்னை வாழ்த்தியது எனக்குப் பெருமை ஆகும்.

காஷ்மீரத்து சிங்கம் ஷேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா வாழ்த்தி இருக்கிறார். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத முகங்களாக கோலோச்சிய முலயாம் சிங் அவர்களின் மகன் அகிலேஷ் அவர்களும் – லாலுபிரசாத் அவர்களின் மகன் தேஜஸ்வீ அவர்களும் – இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டு சீனியர்கள் – இரண்டு ஜூனியர்கள் – வந்திருக்கிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல, யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் ஆகும்.

ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தி – ஒற்றைத் தன்மை எதேச்சதிகார நாடாக மாற்ற நினைக்கும் பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும் – அது ஒன்று தான் நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும். பாஜகவை 2024 தேர்தலில் வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொல்லி விடலாம்.

மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத் தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இதனை காங்கிரசு உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்தே நான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டு காலமாக நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு இந்த ஒற்றுமை ஒன்று தான் அந்த வெற்றிக்கு அடிப்படையாகும். இதனை 2021 ஆம் ஆண்டே சேலம் பொதுக்கூட்டத்தில் அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை வைத்துச் சொன்னேன். தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்தியா முழுமைக்கும் அமையுங்கள் என்று சொன்னேன்.

அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து – விட்டுக் கொடுத்து – பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் சிலரால் காங்கிரசு அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் – என்று சொல்வதும் நடைமுறைக்கு சரியாக வராது. ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு – நான்காண்டுகளுக்கு முன்னால் அடிக்கல் நாட்டிவிட்டு – இன்று வரை ஒரு செங்கல்க்கு மேல் இன்னொரு செங்கலைக் கூட வைக்காமல் தமிழ்நாட்டைக் கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு.

மொத்தமே 12 கோடி ரூபாயை மட்டும் தான் மதுரை எய்ம்ஸுக்கு ஒதுக்கி இருப்பதாக இது எட்டுக் கோடித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் காரியம் அல்லவா?

எட்டுக் கோடி மக்களின் பிரதிநிதிகளால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை அனுமதிக்காமல் ஒரு நியமன ஆளுநர் நாள்களைக் கடத்த முடியுமானால் – இவர்கள் தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக நினைத்து தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சமஸ்கிருதத்துக்கு கோடி கோடியாக பணம் ஒதுக்குவாய்… சங்கதமிழுக்கு வெறும் கையை நீட்டுவாய் …. என்றால் அதனால் அவமானப்படுத்தப்படுவது திருவள்ளுவரும் இளங்கோவடிகளும் என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவை எல்லாம் அரசியல் கொள்கைகள். ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி அனுப்பினோம். அதனைக் கூட இங்கே ஆளுநராக இருப்பவர் அனுமதிக்கவில்லை. மகாபாரதத்திலேயே சூதாட்டம் இருக்கிறதே என்று நினைத்து தடை செய்ய மறுக்கிறார்களா?

பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லை. முறையாக நிதிகளை வழங்குவது இல்லை. ஜிஎஸ்டிக்கு பிறகு நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடுகளை உரிய காலத்தில் தருவது இல்லை. நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை. இப்படி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களோடு நிர்வாக யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறது பாஜக. அதனுடன் கொள்கை யுத்தம் தொடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம். இது தான் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகும்.

அந்தக் களத்தை நோக்கிய பயணத்துக்கு போர் வியூகங்களை வகுக்கும் பாசறைக் கூட்டமாக எனது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அமைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. வருகை தந்துள்ள அகில இந்தியத் தலைவர்கள் இந்த தகவல்களை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள். அகில இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லுங்கள். ஒற்றுமையை வலியுறுத்துங்கள். வெற்றிக்கு அடித்தளமிடுங்கள். இப்போதே விதைப்போம்.

அடுத்த ஆண்டு மார்ச் என்பது அகில இந்திய அரசியலுக்கு அறுவடைக் காலமாக அமையும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவர்க்கும் ஒரு வரலாற்றுக் கடமை இருக்கிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும்.

தலைவர் கலைஞர் அவர்கள் நம்மையெல்லாம் வழிநடத்திய காலத்தில் – 2004 ஆம் ஆண்டு நாற்பதுக்கு நாற்பது என்று வெற்றி பெற்றோம். கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை இழந்தோம். அந்த ஒன்றுடன் சேர்த்து நாற்பதையும் நமது அணி கைப்பற்றியாக வேண்டும். அதற்காக இன்று முதல் கழக உடன்பிறப்புகள் அனைவரும் உழைக்க வேண்டும். களம் நமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. நாற்பதும் நமதே நாடும் நமதே!