தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை: சட்டசபையில் மசோதா தாக்கல்

0

தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை: சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை, மார்ச் 16–

தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2020-–2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் 14–ந் தேதி துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இன்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் இடையே, தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் இதனை சட்டசபையில் தாக்கல் செய்தார்.

முன்னதாக தமிழ்வழியில் பட்டப்படிப்பு படித்திருந்தால் தமிழக அரசுப்பணிகளில் 20% முன்னுரிமை வழங்கப்பட்டது. இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12 ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

அதாவது, பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப்பணிக்கு, பட்டப்படிப்புடன் 10 மற்றும் 12ம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். அதேபோன்று 10ம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றிருக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.