தமிழ்நாட்ட அவன்கிட்டேயிருந்து காப்பாத்தனும்…! விஷாலை ஒருமையில் பேசி கிழித்த மிஷ்கின்!!

0

நடிகர் விஷால் தயாரித்து நடித்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கினார் மிஷ்கின். இதனையும் விஷாலின் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தான் தயாரித்தது.

லண்டனில் பிரமாண்டமாக படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தயாரிப்பு தரப்புக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தில் இருந்து விலகினார் இயக்குநர் மிஷ்கின். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிஷ்கின் போட்ட கண்டிஷன்கள் என சில டாக்குமென்ட் போட்டோக்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கப் போவதாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை மேலும் கூட்டினார். அதோடு துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் அநாதையாக விட்டுச் சென்றுவிட்டார் என பெயரை குறிப்பிடாமல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். மேலும் தேவையற்ற செலவுகளை தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்படுத்தியதாக தெரிவித்த நடிகர் விஷால், தயாரிப்பாளர்கள் யாரும் அவருக்கு இரையாகி விடக் கூடாது என்றார்.

இயக்குநர் விஷாலின் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. இந்த நிலையில் சென்னையில் பூர்ணா நடித்த ‘கண்ணாமூச்சி’ வெப்சீரிஸ் அறிமுக நிகழ்ச்சியில் மிஷ்கின் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஒரு வருடமாக ஒரு கதையை யோசித்து எழுதினேன். என்னுடைய ஒவ்வொரு கதையின் க்ளைமாக்ஸ் காட்சியையும் 10 நாட்கள் எழுதுவேன். ‘துப்பறிவாளன் 2’ கதையின் க்ளைமாக்ஸ் காட்சியும் அப்படித்தான். ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஒரு சகோதரனை மோசமாக பேசும் பொழுதும், பார்க்கும் போதும் அவரை என் தோளில் போட்டு சகோதரனாக பாவித்தேன். என் நிஜ சகோதரனிடம் கூட அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவருக்காக 2-ம் பாகம் எழுதினேன்.

2018-ல் ’துப்பறிவாளன்’ வெளியானது. அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் போது ஸ்ட்ரைக் நடைபெற்றது. அப்போது 3 உதவியாளர்களுடன் க்ளைமாக்ஸ் காட்சியை நான் மட்டும் ஷ{ட் செய்தேன். கடைசியில் எங்களுக்கு பணமில்லை. 4 நாட்கள் எடுக்க வேண்டிய சண்டைக் காட்சியை, 6 மணி நேரத்தில் எடுத்துக் கொடுத்தேன். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது அனைவருக்கும் தெரியும்.

அதற்கு முந்தைய 3 படங்கள் விஷாலுக்கு ப்ளாப். ’துப்பறிவாளன்’ வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி ரூபாய். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கதை எழுதச் சொன்னார், எழுதினேன். நிறைய கடன் இருக்கு, தமிழ் மட்டும் வேண்டாம், இந்திய அளவிலான மொழிகளில் எழுதலாம் என்று சொல்லி கோகினூர் வைரத்தை வைத்து கதை எழுதுகிறேன் என எழுதினேன்.

அது வந்து ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா என அனைத்து மொழிகளிலும் டப்பிங் பண்ணலாம் எனச் சொன்னேன். அந்தக் கதையை எழுதி முடித்தவுடன், அதை பாபி என்ற தயாரிப்பாளர் கேட்டுவிட்டு, பிடித்துப் போய் எனக்கு அட்வான்ஸ் தொகை வேறு கொடுத்தார். அதற்குப் பிறகு அந்தக் கதையைக் கேட்டு விஷாலுக்கு பிடித்துப் போய் என்னை கட்டிப்பிடித்து அழுதான். இந்தக் கதை எனக்கு போதும் என்றான். இதை வைத்து என் அனைத்து கடனையும் அடைத்துவிடுவேன் என்றான். அந்த பாபி தயாரிப்பாளர் வேண்டாம், நானே தயாரிக்கிறேன் என்றான். அப்போது ஆரம்பித்தது என் தலைவலி..

19 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று சொன்னேன். நீ பண்ண முடியாது, நீ கடனாளியாக இருக்கிறாய், ’ஆக்ஷன்’ வேறு வெளியாகவுள்ளது என்றும் சொன்னேன். ஒரு வேளை அந்தப் படம் சரியாக போகவில்லை என்றால், உன் மீது அதிகமான பாரம் வரும். ஆகையால் இந்தப் படத்தை தொடாதே என்றும் தெரிவித்தேன். இல்லை சார், இந்தப் படம் நான் பண்ணுவேன். எனக்கு உதவியாக இருக்கும் என்று சொன்னான்.

அப்போது, ‘துப்பறிவாளன் 3’ ஆக இதைப் பண்ணலாம். 2-ம் பாகமாக சென்னையில் நடப்பது மாதிரி 10 கோடி ரூபாய் பண்ணலாம். நான் எழுதி தருகிறேன் என்று சொன்னேன். அதற்கு, இந்தப் படத்தை தான் தான் பண்ண வேண்டும் என்று சொன்னான். பல வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், இங்கிலாந்திற்கு சென்றது கிடையாது. இந்தக் கதையை எழுதுவதற்காக நான் கேட்ட பணம் 7.5 லட்ச ரூபாய் மட்டுமே. அதில் நான் செலவு செய்தது 7 லட்ச ரூபாய் மட்டும் தான்.

ஆனால், திரைக்கதை எழுத மட்டும் 35 லட்ச ரூபாய் செலவு செய்ததாக தெரிவித்துள்ளான் விஷால். 35 லட்ச ரூபாய் செலவு பண்ணினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபக்க வேண்டும். நான் ஒரு தயாரிப்பாளர்களின் இயக்குநர். ஒரு கதை எழுதுவதற்கு 35 லட்ச ரூபாய் செலவு செய்கிறான் என்றால், அவன் இயக்குநராவதற்கே தகுதியற்றவன் என்று சொல்வேன். விஷால் சொன்னவுடன் எழுதிய அனைவருமே, அதற்கான ஆதாரம் எங்கே என்று அவனிடம் கேட்க வேண்டும்.

அதற்குப் பிறகு 13 கோடி ரூபாய் இதுவரைக்கும் செலவு செய்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். 32 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளேன். ஒரு நாளைக்கு 15 லட்சம் செலவு செய்தேன் என்று தெரிவித்துள்ளான். அதன்படி, 32 நாட்களுக்கு 4 கோடியே 50 லட்ச ரூபாய் தான். அதற்கு மேல் 2 கோடி, 3 கோடி என சேர்த்தால் கூட 10 கோடி ரூபாய் வரை தான் வந்துள்ளது. அந்த 13 கோடி ரூபாய் செலவையும் விஷால் நிரூபிக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்கு போய் படம் பண்ண வேண்டும் என்றால் உங்களுடைய கம்பெனியில் இருந்து பண்ண முடியாது. அங்கு ஒரு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் புட்லூர் அம்மன் நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு விஷால் நிறுவனத்திலிருந்து எவ்வளவு பணம் அனுப்பப்பட்டது என்று கேட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்.
நான் என்ஓசி கொடுக்காமல் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, இயக்குனர் சங்கத்திற்கோ சென்றிருந்தால் இன்று படத்தின் ஃபஸ்ட் லுக்போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா?.

“நான் கஷ்டப்பட்டு எழுதிய கதை அது. உன்னை சும்மா விடமாட்டேன். நீ என்ன எம்ஜிஆரா, கலைஞரா.. சமூகம் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் என்ன செய்தாய் என்று தெரியாதா?. என்னை தயாரிப்பாளர் சங்கத்தில் நிற்கச் சொல்லி தாணு உள்ளிட்டோரை தவறாகப் பேசச் சொன்னாய்.

உன் வாழ்க்கை சொல்லும், உன் தாய், தந்தை, தங்கை சொல்வார்கள் நான் எப்படி பழகியிருக்கிறேன் என்று. ரமணாவும், நந்தாவும் உன்னை ரோட்டில் கொண்டு இறக்கி விடுவார்கள் என்று நான் சொன்னது சத்திய வாக்காகிவிட்டது. இந்த படம் நின்றதற்கு காரணமும் அவர்கள்தான். இனி விடமாட்டேன். தமிழ்நாட்டில் நான் ஒருத்தர்தான் அவனை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். இனி தமிழ்நாட்டை அவனிடமிருந்து நான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

என்னுடைய தயாரிப்பாளர்கள் ஜபக், அகோரம், உதயநிதி ஆகியோரிடம் நான் எப்படி பணிபுரிந்திருக்கிறேன் என்று கேட்டுப்பாருங்கள். என் தாயைத் திட்டியதற்குப் பிறகு எப்படி படத்திலிருந்து வெளியே போகாமல் இருக்க முடியும். ‘என் தம்பி என்று நினைத்த அவன் என் தாயை வேசி என கேவலமாக திட்டினான். என் தாயை கேவலமாக பேசியதற்காக என் தம்பி கோபப்பட்டான். கோபப்பட்டு கேட்ட என் தம்பியை அடித்தார்கள். அவனுக்காக என் தம்பியை நான் அடித்தேன். மூன்று வருடம் அவனை அண்ணன் என்ற அழைத்திருக்கிறாய் அதனால் விடு போகட்டும் என்று என் தம்பியை சமாதானப் படுத்தினேன். அவன் பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

இவன் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்தானா?. இதுவொரு தமிழனுடைய கோபம். விஷால் பொறுக்கி உன் வேலையை எல்லாம் இங்கு காட்டாதே. உனக்கு இருக்கு ஆப்பு. இது தான் தொடக்கம். இன்று முதல் நீ தூங்கவே மாட்டாய்.

உன் தரப்பில் தர்மம் இருந்தால் வா குருஷேத்ரப் போருக்கு. வா போரிடலாம்’. சினிமா இல்லாவிட்டாலும், எங்கேயாவது உழைத்து என்னால் பிழைக்க முடியும். யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன்.

இவ்வாறு இயக்குநர் மிஷ்கின் ஆவேசமாக பேசினார்.