தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு இன்று தேர்தல்

0

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு இன்று தேர்தல்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) சென்னையில் நடைபெறுகிறது.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். விக்ரமன் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் சுமார் 2,300 உறுப்பினர்கள் வாக்களித்து புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யவுள்ளனர்.
சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் யூனியன் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தேர்தலுக்கு முன்னாள் மாவட்ட நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படவுள்ளன.
இரு முனைப் போட்டி: கடந்த முறை நிர்வாக பதவியை வகித்த இயக்குநர் விக்ரமன் தலைமையிலான அணி சிறு சிறு மாற்றங்களுடன் இந்தத் தேர்தலையும் சந்திக்கிறது. புது வசந்தம் என்ற பெயரில் இத்தேர்தலைச் சந்திக்கவுள்ள அந்த அணியில் விக்ரமன் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு பேரரசு களம் காண்கிறார். துணைத் தலைவர்கள் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் இருவரும் போட்டியிடுகின்றனர். இதைத் தவிர இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இந்த அணியின் சார்பில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
ஜெகதீஷ் தலைமையில் புதிய அலைகள் என்ற பெயரில் மற்றொரு அணி களம் காண்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.