தமிழக சட்டப்பேரவை ஜனவரி 9-ந் தேதி கூடுகிறது
ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், பிறக்கப்போகும் புத்தாண்டின் (2023-ம் ஆண்டு) முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 9-ந் தேதி (திங்கட்கிழமை) கூட இருக்கிறது. அன்று காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் பங்கேற்று கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருக்கிறார். அரசின் புதிய திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும்.
இது தொடர்பாக சபாநாயகர் மு.அப்பாவு நேற்று மாலை சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- 2023-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் ஜனவரி 9-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடுகிறது. இதன்பின்பு அலுவல் ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில் எத்தனை நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அவர்களுக்கு குறிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இருதரப்பில் இருந்தும் எந்தவித தகவலும் வரவில்லை. ஒரு கட்சிக்கு அக்கட்சி சார்ந்த கொள்கைகளில் பிரச்சினை இருந்தால் அவர்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு எதிராக அரசோ, சட்டமன்றமோ இல்லை. கொரோனா தொற்று தமிழகத்தில் மிக குறைவாகவே உள்ளது. அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த அடிப்படையில் சட்டமன்ற கூட்டத்தின்போதும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறை பின்பற்றப்படும்.
நேரலையாக ஒளிபரப்பு
அரசு தரப்பில் விசாரணை ஆணைய அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அறிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கோரினால் அந்த அறிக்கைகளை சட்டமன்றத்தில் வைத்து நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்.
கவர்னர் உரை முழுமையாக நேரலையாக ஒளிபரப்பப்படும். சட்டமன்ற நிகழ்வுகளை பொறுத்தமட்டில் கேள்வி-நேரம் வரை நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களை நேரலையாக ஒளிபரப்பு செய்வது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அவரது உரை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக இருக்கும். அதன்பின்னர், அந்த உரையை தமிழில் சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடையும். தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பதற்காக, அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் நடைபெறும்.
இதில், சட்டமன்ற அனைத்து கட்சி சார்பில் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள். அனேகமாக, 3 அல்லது 4 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தொடரில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.
இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளும்மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவு நாளில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசுவார்கள்.
அத்துடன் சட்டசபையின் இந்த கூட்டத்தொடர் நிறைவடையும். அடுத்து பிப்ரவரி மாதம் 2023-2024-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெறும். அதன்பிறகு, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறும். இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.