தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு

0
12

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு

தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுக சார்பாக ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மு.அப்பாவு பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல பேரவை துணைத்தலைவருக்கான பதவிக்கு கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கு.பிச்சாண்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் பேரவைத் தலைவராக அப்பாவுவும், துணைத்தலைவராக பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வாகினர்.

இந்நிலையில் 16-வது சட்டசபை கூட்டத்தின் 2-வது நாள் இன்று தொடங்கியது. சபாநாயகராக போட்டியின்றி தேர்வான அப்பாவுவை திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். சபாநாயகர் பொறுப்பேற்ற அப்பாவு உறுதி மொழியேற்றார். அதன்பின் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் சபாநாயகரை வாழ்த்தி பேசினார். அப்போது

சட்டப்பேரவையில் சபாநாயகரின் கண் அசைவிற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம். சபாநாயகராக அப்பாவு அமர்ந்திருப்பதை பார்க்கும் போது என் மனம் பூரிப்படைகிறது.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் கருத்தோடும் சுவையோடும் பேசுபவர் அப்பாவு, அவர் போட்டியின்றி தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அண்ணாவின் தம்பிகளாகிய எங்களுக்கு ஆண்வம் இருக்காது. கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை நாட்கள் முழுமையாக நடைபெற ஒத்துழைப்போம் என்றார். இதையடுத்து அப்பாவுவிற்கு வாழ்த்து தெரிவித்து பேசிய அவர், பேரவைத் தலைவர் ஆசிரியரைப் போல் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சபாநாயகர் பதவி ஏற்பு, வாழ்த்துரை முடிந்ததை அடுத்து தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

தமிழக சட்டசபையில் சபாநாயகராக பதவி ஏற்றுள்ள அப்பாவு சட்டசபையின் 18-வது சபாநாயகர் ஆவார்.