தமிழக சட்டசபை தேர்தல் 2021: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேட்புமனுதாக்கல் தொடங்கியது

0
29

தமிழக சட்டசபை தேர்தல் 2021: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேட்புமனுதாக்கல் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்தமாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது. அதனுடன் காலியாக உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை முடிக்கும் நிலையில் உள்ளன. அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது.

மேலும் சிறுசிறு கட்சிகளும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விரைவில் பெயரை அறிவிக்க உள்ளன.

இந்தநிலையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 3 மணிவரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பல அரசியல் கட்சிகள் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாத நிலையில் முதல் நாளான இன்று குறைவான வேட்பாளர்களே மனுதாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக டெபாசிட் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி இந்த தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியின பிரிவை சேர்ந்த வேட்பாளருக்கு டெபாசிட் தொகை ரூ.5 ஆயிரம் ஆகும். பொது பிரிவை சேர்ந்த வேட்பாளருக்கு டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் ஆகும்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வேட்புமனுதாக்கலுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. மனுதாக்கலின் போது வேட்பாளர்களுடன் செல்வதற்கு 2 பேரை மட்டுமே அனுமதித்தனர்.

மனுதாக்கலுக்கு செல்லும் போது வேட்பாளருடன் 2 வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர். மனுதாக்கல் செய்யும் இடத்துக்கு 100 மீட்டர் சுற்றளவுக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் குவிந்துவிடக் கூடாது என்பதற்காக மனு தாக்கலுக்கு வரும் வேட்பாளர்களுக்கு வெவ்வேறு நேரங்கள் ஒதுக்கப்பட்டன.

தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) விடுமுறை நாட்கள். எனவே இந்த 2 நாட்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது.

இன்று மனுதாக்கல் செய்யாத வேட்பாளர்கள் 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது.

வேட்புமனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். ஏப்ரல் 6-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மே 2-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.