தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படும்

0

சென்னை: “தமிழ்நாட்டில், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம்’’ என்று சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க. வாக்குறுதி அளித்தது.

அதன்படி, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, மதுக்கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்படும் என்றும், முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் அடையாளம் காணப்பட்டு மூடப்படும் என்றும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 24-ந் தேதி முதல் மதுக்கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்பட்டது.

மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளை அடையாளம் காணு மாறு அரசு உத்தரவிட்டு இருந்தது. மாவட்ட கலெக்டர்கள், டாஸ்மாக்கின் மூத்த மண்டல மேலாளர்கள் வழங்கிய சிபாரிசுகள், டாஸ்மாக் நிறுவனத்தின் மாவட்ட மேலாளர்கள் தாக்கல் செய்த விவரங்களை ஆய்வு செய்து மூடப்படும் 500 மதுக்கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த 500 கடைகள் 19.6.2016 (இன்று) முதல் மூடப்படுகின்றன.