தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு

0

தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு

சென்னை : விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பொதுவாக இந்து பண்டிகை என்றாலே கடவுள் சிலைகளை வீட்டில் வைத்து பூஜிப்பது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி அன்று, வீடுகளில் மட்டும் அல்லாது, சாலைகளில் முக்கிய இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 890 இடங்களில் பிரமாண்ட வடிவில் விதவிதமான பெயரில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. நேற்று காலையிலேயே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தலை நகர் சென்னையில் மட்டும் 2,642 இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்து முன்னணி சார்பில் அதிக சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

சிலைகள் வைத்து வழிபட சென்னை ஐகோர்ட்டு சில உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளது. அதாவது, சிலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது. தகரக் கொட்டகையின் கீழ்தான் சிலைகளை வைக்க வேண்டும். பிற வழிபாட்டு ஸ்தலங்களுக்கு அருகே சிலை வைக்கக்கூடாது. இதுபோன்ற உத்தரவுகள் இருந்ததால், போலீசார் அதன் அடிப்படையிலேயே சிலைகள் வைக்க அனுமதி அளித்தனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட பந்தலில் 33 அடி உயர சங்கு விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் இந்த பணியில் உள்ளனர். அதிலும், சிலைக்கு ஒரு போலீசார் என்று 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விநாயகர் சிலைகளுக்கு தினமும் காலை, மாலை என இருவேளைகளில் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. வழிபாடு முடிந்த பிறகு, குறிப்பிட்ட நாட்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட இருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை, வரும் 5, 7 மற்றும் 8-ந் தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்பதற்கு எண்ணூர், திருவொற்றியூர், பெரியார் நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய 6 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் பிற இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி.) அறிவுறுத்தியுள்ள நாட்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்படுகின்றன. சிலைகள் கரைக்கும் இடங்களில், கிரேன்கள், உயிர் காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாடு முழுவதும் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் வீதியெங்கும் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 9 ஆயிரம் தேங்காய்களை பயன்படுத்தி வித்தியாசமாக அமைக்கப்பட்ட விநாயகர் சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த சிலை 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை கடந்த 20 நாட்களாக 70 பக்தர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். தேங்காய்கள் தவிர 20 வகையான காய்கறிகளையும் இந்த கோவிலை உருவாக்க பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு கரும்புகளால் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அத்திவரதர் விநாயகர்

சென்னை, புரசைவாக்கத்தில் அத்திவரதர் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் இருந்து ஏராளமான மக்கள், வரிசையில் நின்று அத்திவரதர் விநாயகரைத் தரிசித்தனர்.

அத்திவரதர் விநாயகர் சிலையை வடிவமைத்த நபர் கூறும்போது,

இங்குள்ள ஏராளமான மக்களால் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரைத் தரிசனம் செய்ய முடியவில்லை. அதைக் கருத்தில் கொண்டுதான் அத்திவரதரைப் போல 9 அடியில் விநாயகரை வடிவமைத்தோம். இந்த விநாயகர், சயன கோலத்தில் 3 நாட்களும் (புதன் வரை), நின்ற கோலத்தில் 3 நாட்களும் (சனிக்கிழமை வரை) காட்சியளிப்பார். அதுவரை மக்கள் அத்திவரதர் விநாயகரைத் தரிசனம் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.