தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது

0

தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது

சென்னை, நவ.8–

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்கள் இன்று கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கையில் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கி, முருகனை தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுதல், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது.

இன்று மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. 2-ம் திருவிழா 9-ந் தேதி முதல் 5-ம் திருவிழாவான 12-ந் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.

6-ம் திருவிழாவான 13-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற காலங்கள் வழக்கம் போல் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்கிறார்.

7-ம் திருவிழாவான 14-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 5மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும் இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

திருவிழா காலங்களில் கோவில் கலையரங்கில் காலை மாலை சிறப்பு சமய சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

கந்த சஷ்டி விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களாக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து குவிந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கோவிலிலேயே தங்கி விரதம் இருக்க துவங்கினார்கள்.

கந்த சஷ்டி விழா இன்று காலை 8 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், சண்முகர் சன்னதியில் சண்முகப் பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு திருக்கோவில் கம்பத்தடி மண்டபத்தில் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டு கோவிலிலேயே தங்கி விரதம் இருக்க தொடங்கினார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வருவர். தினமும் காலை, மாலை சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வருவர்.

விழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும் தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல் வாங்கும் நிகழ்ச்சி வரும் 12–ம் தேதி நடைபெறுகிறது. 13–ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவின் 7–ம் நாள் நிகழ்ச்சியாக 14–ந் தேதி காலை 9 மணிக்கு சிறிய சட்டத் தேரோட்டமும், பிற்பகல் 3 மணியளவில் பாவாடை தரிசனமும் நடைபெறும். கோவிலுக்குள் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்படும். மேலும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் பஸ் நிலையம் கோவில் வாசல் முன்பு மற்றும் மலைக்கு பின்புறம் குடிநீர் வசதியும் நடமாடும் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

வடபழனி

வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று லட்சார்ச்சனை துவங்கியது.

13–ந் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 13–ந் தேதி இரவு 7 மணிக்கு தெற்கு ராஜகோபுர சந்திப்பில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14–ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 9 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

இதே போல் சென்னை கந்தக்கோட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி

திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை வெகுவிமர்சையாக துவங்கியது. உற்சவருக்கு மலர் அலங்காரத்தில் லாட்சார்ச்சனை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகபெருமானை வழிப்பட்டனர்.

முருகனின் 5ம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவினையோட்டி இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

மலை கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் உற்சவருக்கு மலரால் அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து லாட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கந்தசஷ்டி விரதம் தொடங்கி முருக பெருமானை வழிப்பட்டனர்.

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.அரி, திருத்தணி நகர மன்ற முன்னாள் தலைவர் சவுந்திரராஜன் மற்றும் பலர் கந்த சஷ்டி விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி வரும் 13ம் தேதி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வே. ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோவில் அலுவலர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

குமரகோட்டம்

காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய குமரகோட்டம் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவையொட்டி, இன்று அதிகாலை அர்ச்சகர்கள் கொடியேற்றினார்கள். அப்போது தீபாராதனை காட்டப்பட்டது. திரண்டு இருந்த பக்தர்கள் ‘‘முருகா… முருகா…’’ என்று பக்தி கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக கருவறையில் உள்ள முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. பிறகு முருகப்பெருமான் வள்ளி–தெய்வானை உற்சவருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திரண்டு இருந்த பக்தர்கள் லட்சார்ச்சனை செய்தனர்.

இதைத் தொடர்ந்து,நாளை காலை பல்லக்கு, இரவு மான் வாகனம், 10ம் தேதி காலை பல்லக்கு, இரவு அன்ன வாகனம், 11ம் தேதி காலை பல்லக்கு, இரவு மயில் வாகனம், 12ம் தேதி காலை பல்லக்கு, இரவு குதிரை வாகனம், 13ம் தேதி முக்கிய விழாவான காலை கந்த சஷ்டி பல்லக்கு தீர்த்தவாரி, அன்று இரவு சூரசம்ஹாரம், 14ம் தேதி இரவு தெய்வானையம்மையார் திருக்கல்யாணம், 15ம் தேதி காலை கந்தபொடி வசந்தம், இரவு தெய்வானை பந்தம்பறி ஊடல் ஆகிய விழாக்கள் நடைபெறுகிறது.

கந்தசஷ்டியையொட்டி, கோவில் உள்பிரகாரத்தை பக்தர்கள் 108 முறை முருகப்பெருமானை மனமுறுகி பாடி கொண்டே சுற்றிவந்தனர்.

இந்த கொடியேற்றத்தில் ஆன்மீக பிரமுகர்கள் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், வி.கே.தாமோதரன், ராஜம்செட்டி நகை கடை அதிபர் உதயா, தொழிலதிபர் ஆர்.சவரிங்கம், சரவணா ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆர்.சரவணன், ஆர்.கணேஷ், கவிஞர்கள் கூரம் துரை, எஸ்.முருகவேள், மாவட்ட மருத்துவஅணி நிர்வாகி மெடிக்கல் பி.தீனா, மருத்துவ பிரதிநிதி எ.சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், மேலாளர் சீனிவாசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் இளையனார்வேலூர் முருகன் கோவில், திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், ஆகிய கோவில்களிலும் சஷ்டியையொட்டி, ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை மனமுறுகி வேண்டி வழிபட்டனர்.